by guasw2

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கதிரை சின்னத்தில் கூட்டணியாக போட்டியிடுவதற்கு சு.க. தீர்மானம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியில் கதிரை சின்னத்தில் கூட்டணியாகபோட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட தரப்பின் தலைமையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய முன்னாள் அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாபா, சுசில் பிரேம்ஜயந்த, மஹிந்த அமரவீர,லசந்த அழகியவண்ண, நிமல் லான்சா, பியல் நிஷாந்த டி சில்வா, பைசர் முஸ்தபா மற்றும் பிரேம்நாத் சிதொலவத்த உள்ளிட்ட சிரேஷ்ட அரசியல்வாதிகளால் இக்கூட்டணி நிர்வகிக்கப்படுகிறது. இதன் நிறைவேற்று குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (17) கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா,

பொதுஜன ஐக்கிய முன்னணியில் கதிரை சின்னத்தில் கூட்டணியாக உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது சர்ஜன அதிகாரம், பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி சிலிண்டரில் போட்டியிட்ட குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் இந்த கூட்டணி தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே அக்கட்சிகளைத் தவிர ஏனைய கட்சிகளுடனேயே எமது பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.

தற்போதைய அரசாங்கம் திடீரென ஊதிப் பெரிதாக்கிய பந்தைப் போன்றது. இந்த அரசாங்கம் செய்தவை மற்றும் தற்போது செய்கின்றவற்றுக்கிடையில் பாரதூரமான வேறுகள் காணப்படுகின்றன.

எந்தவொரு தரப்பும் எம்முடன் இணையலாம். அதில் எவ்வித பாரபட்சமும் இல்லை. பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதவுகள் திறந்தே இருக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவும் எம்முடனேயே இருக்கின்றார். பழைய சிரேஷ்ட உறுப்பினர்கள் அனைவரையும் எம்முடன் இணைத்துக் கொள்வதற்கே முயற்சிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கையில்,

கடந்த வாரங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தோம்.

அதற்கமைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை எவ்வாறு தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிந்தளவு அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதே எமது இலக்காகும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்