சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வின் மூலமே தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கலாம் சமஷ்டி அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வின் ஊடாகவே தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக்குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சன்செஸ் ஆமர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மன் மொறேனோ ஆகியோருக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரனுக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (17) கொழும்பில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமை கோரும் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் கேட்டறிந்துகொண்டனர்.
அதற்குப் பதிலளித்த சிறிதரன், உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்த வட – கிழக்குக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வுடன்கூடிய தீர்வு என்பது தான் ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளை அடுத்து இலங்கை அரசு இறுதியாக இணங்கிக்கொண்ட விடயம் எனச் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்துக்கும் சமஷ்டி முறைமைக்கும் இடையிலான நடைமுறை வேறுபாடுகள், 13 ஆவது திருத்தத்தைப் புறந்தள்ளி சமஷ்டி முறைமையிலான அதிகாரப்பகிர்வை வழங்கவேண்டியதன் தேவைப்பாடுகள், கனடா, சுவிஸ்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் சமஷ்டி முறைமையையும், இந்திய மாநில சுயாட்சி முறைமையையும் அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் சமஷ்டி முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் என்பன பற்றியும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் சிறிதரன் எடுத்துரைத்தார்.
அதேவேளை இச்சந்திப்பின்போது தமது தேர்தல் கண்காணிப்புக்குழுவினால் தயாரிக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு தொடர்பான இறுதி அறிக்கையின் பிரதியொன்று ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளால் சிறிதரனிடம் வழங்கிவைக்கப்பட்டது.