திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு பலியிட தடை, முஸ்லிம்கள் தடுத்து நிறுத்தம் – இன்றைய முக்கிய செய்திகள்
இன்றைய (19/01/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை பார்க்கலாம்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் முஸ்லிம்கள் ஆடு, கோழிகள் பலியிடுவதற்கு போலீஸார் தடை விதித்திருப்பதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி கூறுகிறது.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவின் சந்தனக்கூடு திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 17-ம் தேதி இரவு சந்தனக்கூடு வைபவம் நடைபெற்றது. அதையொட்டி, நேற்று காலை ஆடு, கோழிகள் பலி கொடுத்து கந்தூரி விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கிராம மக்கள் மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆடு, கோழி பலியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
மலை மீதுள்ள தர்காவுக்கு கந்தூரி கொடுக்க ஆடு ஒன்றை தூக்கிக்கொண்டு, ஐக்கிய ஜமாத்தை சேர்ந்த காதர் மற்றும் இதர முஸ்லிம் அமைப்பினர் நேற்று மலை மீது செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மலை மேல் உயிர்ப்பலி கொடுக்க தடை இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இரு தரப்பினரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முஸ்லிம்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையடுத்து, பலியிடுவதற்காக யாரும் மலைமீது செல்லாதவாறு, அடிவாரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாக அந்த செய்தி கூறுகிறது. மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயில், தர்காவுக்குச் செல்லும் பக்தர்கள் மட்டுமே, சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்.
சென்னை கடற்கரைகளில் இறந்து ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்
சென்னை கடற்கரைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி எனப்படும் பச்சை நிற ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடல் ஆமைகள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் ஜூன் வரை முட்டையிடுவதற்காக கடற்கரைக்கு வருவது வழக்கம். அந்த வகையில், இந்தியாவில் ஒடிஷா முதல் சென்னை வரை உள்ள கடற்கரையில் பல ஆயிரக்கணக்கான ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிட்டுச் செல்லும்.
கடந்த சில நாட்களாக சென்னையில் காசிமேடு, மெரினா, பெசன்ட் நகர், ஈஞ்சம்பாக்கம், பட்டினம்பாக்கம் கடற்கரைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. அவை கரை ஒதுங்குவதற்கு சில நாட்கள் முன்பே இறந்துவிட்டதாகவும், உடற்கூராய்வுக்குப் பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றும் வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மீன்பிடி விசைப்படகுகளில் மோதியோ, மீனவர்களின் வலைகளில் சிக்கி மூச்சுத்திணறியோ இந்த ஆமைகள் உயிரிழந்திருக்கலாம் என்று மத்திய உவர்நீர் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி சந்திரசேகரன் கூறியுள்ளார்.
ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் மேல் சம்பாதிப்பவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் இருப்பதாக தினத்தந்தி செய்தி கூறுகிறது.
கடந்த ஆண்டு வருமானவரி கணக்கு தாக்கல் செய்ததன் அடிப்படையில் கோடீஸ்வர்கள் எண்ணிக்கை குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் மொத்தம் 2,17,753 பேர் கடந்த 2024-ஆம் ஆண்டில் ஒரு கோடிக்கும் மேல் சம்பாதித்துள்ளனர்.
இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பையை உள்ளடக்கிய மகாராஷ்டிரா இந்த பட்டியலில் முதலிடத்தல் உள்ளது. அங்கு 1,24,800 பேர் ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் மேல் சம்பாதிக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் உத்தரபிரதேசமும், மூன்றாவது இடத்தில் டெல்லியும், நான்காவது இடத்தில் மத்திய பிரதேசமும் உள்ளன.
ஐந்தாவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் 6,288 பேர் ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் மேல் சம்பாதிக்கிறார்கள் என்கிறது அந்த செய்தி.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம்
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் தொடர்புடைய ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில, மைசூரு மாநகர மேம்பாட்டு கழகம் நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் பண மோசடி, விதிமீறல் நடந்திருப் பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. “சித்தராமையாவின் மனைவி பார்வதியிடம் இருந்து பெற்ற நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.3.2 லட்சம். அதற்கு பதிலாக அவருக்கு ஒதுக்கப்பட்ட 14 வீட்டு மனைகளின் சந்தை மதிப்பு ரூ.56 கோடி. மைசூரு நகர மேம்பாட்டு கழக முன்னாள் தலைவர் நடேஷ் இவ்வாறு சட்ட விரோதமாக ஒதுக்கீடு செய்ததால் அந்த அமைப்புக்கு இழப்பு ஏற்பட்டது.” என்று அமலாக்கத்துறை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
“சம்பந்தப்பட்டவர்கள் இந்த நிலத்தை அதிக லாபத்தில் விற்று, அந்த பணத்தை கணக்கில் காட்டவில்லை. இந்த பணத்தை பினாமிகள் பெயரில் முதலீடு செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளளன. இதற்காக மைசூரு நகர மேம்பாட்டு கழக தலைவருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ரூ.300 கோடி மதிப்பிலான 143 அசையா சொத்துகளை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.” என்று அமலாககத்துறை கூறியுள்ளது.
ஆனால், சித்தராமையாவோ, “நில ஒதுக்கீடு விவகாரத்தில் எனது தலையீடு எதுவும் இல்லை. நான் விதிமீறலில் ஈடுபடவில்லை. என்னை அரசியல் ரீதியாக பழிவாங்க முயற்சி நடக்கிறது” என்று கூறியுள்ளார்.
மனித உரிமை மீறலுக்கான ஆதாரங்களை திரட்டும் பொறிமுறையை நீட்டிக்க வேண்டுகோள்
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை மேலும் ஒருவருடகாலத்துக்கு நீடிக்கப்படவேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளிடம் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜெனிவாவில் கடந்த 15 – 16 ஆம் திகதிகளில் நடைபெற்ற உலகளாவிய மாநாட்டில், இலங்கையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தரப்பினர் பங்கேற்றனர். கொழும்பிலுள்ள சுவிஸ்லாந்து தூதரகத்தின் ஒத்துழைப்புடன் இம்மாநாட்டில் கலந்துகொண்ட அவர்கள், குழு ரீதியான கலந்துரையாடல்களில் பங்கேற்று, தமது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை மேலும் ஒருவருடகாலத்துக்கு நீடிக்கப்படவேண்டும் என வலியுறுத்திய பாதிக்கப்பட்ட தரப்பினர், இருப்பினும் அதற்குச் சமாந்தரமாக இலங்கை தொடர்பில் சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இலங்கையைச்சேர்ந்த பாதிக்கப்பட்ட தரப்பினரின் கரிசனைகளையும், வேண்டுகோள்களையும் செவிமடுத்த ஐ.நா அதிகாரிகள், அவை தொடர்பில் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தினர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு