மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து; இரண்டு மாடுகள் காயம் , இரண்டு மாடுகள் மாயம் !

by wamdiness

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து; இரண்டு மாடுகள் காயம் , இரண்டு மாடுகள் மாயம் ! on Saturday, January 18, 2025

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (18) மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் உதவியாளர் பலத்த காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிமடை பகுதியில் இருந்து நுவரெலியா வழியாக ஹட்டன் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றுக்கு குறித்த மாடுகளை ஏற்றிச்சென்ற போதே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான போது லொறியினுள் 9 மாடுகள் இருந்துள்ளதாகவும் அவற்றில் 2 மாடுகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளமையால் அருகில் உள்ள மிருக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இரண்டு மாடுகள் மாயமாகியுள்ளதாகவும் அவற்றை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் ஐந்து தொன்களுக்கும் குறைவான வாகனங்கள் மாத்திரம் சென்று வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பொலிஸாரும் இணைந்து இந்த வீதியின் போக்குவரத்து தொடர்பில் சாரதிகளுக்கு விழிப்புணர்வூட்டும் ஏராளமான பதாதைகள் வீதியில் இருபுறமும் காட்சிப்படுத்தப்பட்டள்ள போதிலும் சட்டங்களை மீரும் சாரதிகள் இந்த வீதியில் ஐந்து தொன்களுக்கும் அதிக எடையுள்ள வாகனங்களைச் செலுத்துவதன் காரணமாகவே அதிக விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபை, பொலிஸார் மற்றும் பொறுப்பான அதிகாரிகள் இணைந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் இங்கு செல்லாமல் தடுப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்