by smngrx01

காங்கிரஸ் கட்டமைப்பை வலுப்படுத்த பேரவை தொகுதி வாரியாக அமைப்பாளர்கள் நியமனம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை மறுசீரமைத்து கட்சியை பலப்படுத்துவதற்காக சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அமைப்பாளர்களை தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்பை கிராமம், நகரம், மாநகராட்சி என அனைத்து நிலைகளிலும் மறுசீரமைத்து கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தோடு இயக்க சீரமைப்பு மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டு, அதற்கு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சா.பீட்டர் அல்போன்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக பெருங்கோட்ட அமைப்பாளர்கள், நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வகையில் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சட்டப்பேரவை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பெருங்கோட்ட அமைப்பாளர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து அடிப்படை கட்டமைப்பை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும்.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதுதான் நமது எதிர்கால லட்சியம். அதனை அடைவதற்கு, நமது இயக்கத்தை வலுவான இயக்கமாக மாற்றுவது அவசியம். அதன்மூலம் அதிக உறுப்பினர்களை கிராம அளவில் இணைப்பது தற்போதைய தேவையும், அவசியமும் ஆகும். கிராம அளவில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பணிகளையும், மக்களின் நீண்டகால பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து அதற்கு நிரந்தர தீர்வு காண்பது போன்ற இன்றியமையாத சமுதாயப் பணிகளில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். கட்சியை மக்கள் இயக்கமாக உருமாற்றுவதற்கு அர்ப்பணிப்பு உணர்வோடு செயலாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை அனைவரும் உணர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்