அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பதை மக்கள் நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள் – நாமல் ராஜபக்ஷ !

by wp_fhdn

அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பதை மக்கள் நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள் – நாமல் ராஜபக்ஷ ! on Friday, January 17, 2025

அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பதை மக்கள் நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள். தனது இயலாமையை மறைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் எதிர் தரப்பினரை கைது செய்யலாம். அரசியல் பழிவாங்கலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே சட்ட ஆலோசனை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன காரியாலயத்தில் வியாழக்கிழமை (16) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைத்து, சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய கிளை ஒன்று திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நடைமுறைக்குச் சாத்தியமல்லாத மெற்றிக்தொன் கணக்கிலான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கினார்.

அந்த வாக்குறுதிகள் இன்று அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்பியுள்ளது. தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவது சாத்தியமற்றது. இருப்பினும் ஏனைய அரசியல் கட்சிகளைக் காட்டிலும் தேசிய மக்கள் சக்தி போலியான பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியது.

ஆகவே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியமற்றது என்பதை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது, பொருளாதார மீட்சிக்காக அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் அரசாங்கத்திடம் கிடையாது என்பதை மக்கள் அறிந்து கொண்டுள்ளார்கள்.

தமது இயலாமையை மறைத்துக் கொள்வதற்கு அரசியல் பழிவாங்களை தொடர்வதற்கும், நல்லாட்சி அரசாங்கத்தைப் போன்று கைது நடவடிக்கைகள் ஈடுபடுவதற்கும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

மக்கள் மத்தியில் பிரபல்யமடைவதற்காக அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முறையாக செயற்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.

தொழிற்சங்கத்தினரின் ஆதரவுடன் தான் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் தற்போது தொழிற்சங்கங்களை முழுமையாக அரசாங்கம் மறந்து விட்டது.

மக்கள் மத்தியில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் எவ்வித தீர்வினையும் பெற்றுக் கொடுக்கவில்லை.

ராஜபக்ஷர்கள் நாட்டின் தேசிய வளங்களைத் தனியார் மயப்படுத்துவதாக மக்கள் விடுதலை முன்னணி பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. தற்போது அவர்கள் தேசிய வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோசத்தை மறந்து விட்டார்கள்.

தேசிய வளங்களை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்