ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்ட விண்கலத்துடன் ஸ்டார்ஷிப் ராக்கெட் நேற்று வியாழக்கிழமை இரவு விண்ணில் செலுத்தப்பட்டது.
கடந்த காலச் சோதனை போன்றே விண்கலம் சுற்றுப் பாதையில் பறக்கத் திட்டமிட்டப்பட்டிருந்தது. சோதனைக்காக 10 போலியான செயற்கைக்கோள்கள் அந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டன.
விண்கலம் வெற்றிகரமாகப் புறப்பட்டது. விண்கலத்தின் மேற்தொகுதி தனியாகப் பிரிந்து சென்றது. விண்கலத்தை தள்ளிக்கொடுத்த பூஸ்டர் மீண்டும் ஏவுதளத்திற்கு திரும்பி அதன் இருக்கையில் அமர்ந்தது.
ஸ்டார்ஷிப் விண்கலம் தீடீரென் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்தது. சிறிது நேரத்தில் விண்கலம் வானில் வெடித்துச் சிதறியது.
விண்கலம் வெடித்துச் சிறதிய பாகங்கள் பூமியை நோக்கி தீப்பிழம்பாக விழும் காட்சிகள் காணொளிகளில் வெளிவந்தன.
ஸ்டார்ஷிப் விண்கலம் பறக்கத் தொடங்கிய 8.5 நிமிடங்களில் கட்டுப்பாட்டு மையத்துடன் உள்ள தொடர்பை இழந்ததாகவும், ஸ்டார்ஷிப் விண்கலம் நொறுங்கிவிட்டதாகவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உறுதி செய்தது.
எரிபொருள் கசிவினால், என்ஜின் பயர்வாலுக்கு மேலே உள்ள குழியில் அழுத்தம் உருவாகியிருக்கலாம் என்று முதற்கட்ட தரவுகள் தெரிவிப்பதாக எலான் மஸ்க் கூறி உள்ளார். காற்றோட்டத்தை அதிகரிப்பது மற்றும் கசிவுகளை இருமுறை சரிபார்ப்பதுடன், தீயை கட்டுப்படுத்தும் அம்சங்கள் அந்தப் பகுதியில் சேர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்டார்ஷிப் விண்கலம் வெடித்து சிதறியதை தொடர்ந்து விண்கல குப்பைகளால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, அந்த வழியாக சென்ற விமானங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.