by adminDev2

தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சுற்றுலா தலங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலையில் இருந்தே குடும்பம் குடும்பமாக மக்கள் திரளத் தொடங்கினர். மாலையில் கடற்கரை முழுவதும் மக்கள் வெள்ளம் காட்சியளித்தது. இதேபோல, கிண்டி சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை, தீவுத்திடலில் நடைபெறும் 49-வது இந்திய சுற்றுலா பொருட்காட்சி, வண்டலூர் உயிரியல் பூங்கா, மாமல்லபுரம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் திரண்டனர்.

வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில், அமிர்தியில் உள்ள சிறு வன உயிரியல் பூங்கா, மகாதேவமலை, வள்ளிமலை முருகன் கோயில், மோர்தானா அணை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் குவிந்தனர். புதுச்சேரி கடற்கரை, சின்னவீராம்பட்டினம் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆரோவில், விழுப்புரம் பெண்ணையாற்று நீர் நிலை, செஞ்சிக் கோட்டை, வீடூர் அணை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் உற்றார், உறவினர்களுடன் குவிந்து காணும் பொங்கலை கொண்டாடினர்.

திருச்சியில் முக்கொம்பு, ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா, கல்லணை, தஞ்சை பெரிய கோவில், அரண்மனை, தரங்கம்பாடி, பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. வேளாங்கண்ணியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் 3,600-க்கும் மேற்பட்டோர் குளித்து மகிழ்ந்தனர். ஈஷா யோகாமையத்தில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆதியோகி சிலை உள்ளிட்டவற்றை தரிசித்தனர். பொள்ளாச்சி டாப்சிலிப், வால்பாறை கவியருவி, திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி, உதகை தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்.குற்றாலம் அருவிகள், பாபநாசம் அகத்தியர் அருவி, மணிமுத்தாறு அணை பூங்கா, களக்காடுதலையணை, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, திற்பரப்பு அருவி, வட்டக்கோட்டை, தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை, மணப்பாடு கடற்கரை, திருச்செந்தூர் முருகன் கோயில், பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.

சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, ஆத்தூர் ஆனைவாரி அருவி, முட்டல் ஏரி, மேட்டூர் அணை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஈரோட்டில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் காணும் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. ஒகேனக்கல், கொடிவேரி, பவானிசாகர் அணை, கொல்லிமலை, புளியஞ்சோலையிலும் மக்கள் குவிந்தனர். கிருஷ்ணகிரி அணை, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, படகு இல்லத்திலும் மக்கள் காணும் பொங்கலை கொண்டாடினர்.

ராமேசுவரத்தில் ஏராளமான பக்தர்கள் நீராடினர். பாம்பன் பாலம், தனுஷ்கோடி, பாம்பன் குந்துகால், அரியமான் பீச், காரங்காடு அலையாத்தி காடுகள், ஏர்வாடி பி.எம். வலசை சுற்றுலா படகு தலம், கீழக்கரை, வாலிநோக்கம், மூக்கையூர் என கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர். தமிழகம் முழுவதும் காணும் பொங்கலையொட்டி கோலப்போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல், கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்காலி, பாட்டுப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பலரும் பாரம்பரியத்தை மறக்காமல் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கு சென்று மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்திகள்