by adminDev2

குடும்ப ஆட்சியை விரட்ட வாக்காளர்கள் காத்திருக்கின்றனர்: தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அதிமுகவை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வோம் என கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு, தொண்டர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தீய சக்தியிடமிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற அவதாரம் எடுத்து வந்தவர் எம்ஜிஆர். தன்னிகரற்ற மனிதாபிமானம் கொண்ட, திரைத் துறையில் பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையாக, அரசு நிர்வாக ஆற்றல் படைத்த தலைவராக, எதைச் செய்தாலும் அதில் வெற்றிவாகை சூடும் சாதனையாளராக, சரித்திர நாயகராக வாழ்ந்தவர்.

அவரின் சத்துணவுத் திட்டம், இலவச வேட்டி சேலை திட்டம் உட்பட ஏழை, எளியவர்களுக்காக தீட்டப்பட்ட பல்வேறு திட்டங்கள் இன்றளவும் வரலாறாய் நிலைத்து நிற்கின்றன. அவரைத் தொடர்ந்து ஜெயலலிதா ஆட்சி காலத்திலும், மக்கள் நலன் சார்ந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் எராளம்.

எம்ஜிஆர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், தமிழ்ச் சமூகத்துக்கு என்னவெல்லாம் தொண்டாற்றி இருப்பாரோ, அவற்றை செய்து முடிக்கத்தான், ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுக தொடர்ந்து மக்கள் பணிகளை ஆற்றி வருகின்றது.

தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை, குடும்ப ஆட்சியை விரட்டவும், அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவும், தமிழக வாக்காளர்கள் காத்திருக்கின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் மலரச் செய்யும் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு ஈடுபட உறுதியேற்போம்.

ஜனநாயகத்தை சீர்குலைக்க, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கிறது.

அந்தப் பயணத்தில் கட்சி தொண்டர்கள் ஒவ்வொருவரின் உழைப்பும், ஆர்வமும் மிகவும் இன்றியமையாதது. உங்கள் முயற்சிகள் அனைத்துக்கும் என்றென்றும் நான் உறுதுணையாக இருப்பேன். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம். எம்ஜிஆர், ஜெயலலிதா நல்லாட்சியை மலரச் செய்வது, நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நினைவில் கொண்டு பணியாற்றுவோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்