அலங்காநல்லூர்: உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் இன்று நடந்தது என்ன? முழு விவரம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லுாரில் இன்று (ஜன. 16) ஜல்லிக்கட்டு விழா தொடங்கி நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடர்ந்து, புகழ்பெற்ற அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜல்லிக்கட்டுக் காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க 5,786 காளைகளும், 1,698 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். ஆன்லைன் பதிவு சான்றிதழைக் காண்பிக்கும்போது டோக்கன் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் மருத்துவப் பரிசோதனை, எடை சரிபார்ப்பு உள்ளிட்டவற்றுக்குப் பிறகு மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு காளைகளும் களமிறக்கப்பட்டனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை சுமார் 7 மணியளவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

களத்தில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் மோதிரம், தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகளையும் அவர் வழங்குகிறார். இந்நிகழ்வின்போது, உதயநிதியின் மகன் இன்பநிதி உடனிருந்தார்.

வெளிநாட்டைச் சேர்ந்தவர் தகுதி நீக்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

படக்குறிப்பு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்பதற்காக சென்னையில் வசித்து வரும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கான் என்பவர் இன்று காலை அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றார்.

அவரது வயது மூப்பைக் காரணம் காட்டி, அவரை ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொண்டு மாடுகளை அடக்குவதில் இருந்து தகுதி நீக்கம் செய்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி மற்றும் மருத்துவக் குழுவினர் அறிவித்தனர். அவருக்கு வயது 54.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

படக்குறிப்பு, கான் வயது மூப்பு காரணமாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

மூன்றாம் சுற்று முடிவின் நிலவரம்

தகுதியான மாடுபிடி வீரர்கள்: 314

தகுதி நீக்கம்: 33

போலி டோக்கன்கள்: 13

வயது மூப்பு: 01

மொத்தம்: 347

போலி டோக்கன் பெற்ற 13 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, மருத்துவப் பரிசோதனை செய்யப்படாமல் வெளியேற்றப்பட்டனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

பாதுகாப்பு ஏற்பாடுகள், பரிசுகள் விவரம்

ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கும், பிடிபடாத சிறந்த காளைக்கும் கார்கள் பரிசாக வழங்கப்படுவதுடன் தங்கம், வெள்ளி காசுகள், சைக்கிள், பீரோ, மெத்தை உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள், சில்வர் பாத்திரங்கள் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

அலங்காநல்லூர் போட்டியைப் பார்வையிட வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு, வாடிவாசல் அருகே நிரந்தரமாக பிரமாண்ட கேலரி அமைக்கப்பட்டு அவர்கள் பார்வையிட வசதி செய்யப்பட்டது.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக 2,500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

ஜல்லிக்கட்டுப் போட்டியை காண மதுரை மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர்.

பரிசுகளை வென்ற சிறந்த காளைகள்

ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மொத்தம் 9 சுற்றுடன் நிறைவு பெற்றது.

மொத்தம் 1000 காளைகள் அவிழ்க்கப்பட்டன.

அவற்றுள் சேலம் பாகுபலி காளை சிறந்த காளையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக டிராக்டர், நாட்டுப் பசு மற்றும் கன்று, முதல் பரிசாக வழங்கப்பட்டன.

வழக்கறிஞர் பார்த்தசாரதி என்பவரின் காளை இரண்டாம் இடம் பிடித்து, மோட்டார் பைக், மற்றும் உழவோட்டும் கருவியை வென்றுள்ளது.

மூன்றாம் பரிசாக, புதுக்கோட்டை கண்ணன் என்பவரின் காளைக்கு எலெக்ட்ரிக் பைக் வழங்கப்பட்டுள்ளது.

நான்காம் பரிசை வென்ற இலங்கை செந்தில் தொண்டைமானின் காளைக்கு மோட்டார் பைக் பரிசளிக்கப்பட்டுள்ளது.

சிறந்த மாடுபிடி வீரர்கள்

ஜல்லிக்கட்டு

படக்குறிப்பு, (இடமிருந்து வலம்) அபி சித்தர் முதலாவது இடம், ஶ்ரீதர் இரண்டாம் இடம், விக்னேஷ் மூன்றாம் இடம்

அதைத் தொடர்ந்து சிறந்த மாடுபிடி வீரர்களுக்கான பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இருபது காளைகளை அடக்கியதற்காக பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தருக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் சார்பில் முதல் பரிசாக கார் வழங்கப்பட்டுள்ளது. அதோடு, நாட்டுப் பசு மற்றும் கன்றும் பரிசளிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பரிசை, 13 காளைகளை அடக்கி வென்ற பொதும்பு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கு ஷேர் ஆட்டோ வழங்கப்பட்டுள்ளது.

பத்து காளைகளை அடக்கிய மடப்புரத்தைச் சேர்ந்த விக்னேஷ், மூன்றாவது இடம் பிடித்துள்ளார். அவருக்கு ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக் பரிசளிக்கப்பட்டுள்ளது.

ஏனாதி பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவர் 9 காளைகளை அடக்கி நான்காம் இடம் பிடித்து டிவிஎஸ் எக்ஸ்.எல் பைக் வென்றுள்ளார்.

வெற்றி பெற்றவர்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பரிசுகளை வழங்கினார். மேலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உள்பட 76 பேர் காயமடைந்துள்ளனர். பலத்த காயமடைந்த பார்வையாளர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு