பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கடமைகளை நிறைவேற்ற பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள வேலைத்திட்டம் பாராளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிகளின் வகை பொறுப்புக்களை மேற்கொள்ளும்போது, தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொது மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக புதிய முறைமை ஒன்றை செயற்படுத்துவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்காக எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்துக்கு இணைந்ததாக ஊடக மற்றும் ஆய்வுப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன்,அந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துவைத்து தொழிற்சங்கங்களின் வினைத்திறனான பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல் ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
2025 வரவு செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும்போதான பிரதான விவாதம் மற்றும் குழுநிலை விவாதத்தின்போது சாதகமான தகவல்களை பெற்றுக்கொள்வதே இதன் பிரதான நோக்கமாகும். இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,
பாராளுமன்றத்தில் சரியான தகவல்களின் அடிப்படையில் விவாதங்களுக்கு பங்களிப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் பங்கேற்பு செயல்முறையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். வரவு செலவுத் திட்ட விவாதத்திற்கு மட்டுப்படுத்தப்படாமல் பாராளுமன்ற அமர்வுகளுக்கும் தொழிற்சங்கங்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதன் மூலம் மக்கள் மயமான எதிர்க்கட்சி ஒன்றின் கடமை பொறுப்பை நிறைவேற்ற முடியும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்து எதிர்க்கட்சிகளின் பிரதான அமைப்பாளர் கருத்து தெரிவிக்கையில், பாராளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சியின் தரத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டுவருவதற்காக தொழிற்சங்கங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும் என தெரிவித்தார்.
இதன்போது வரவு செலவு திட்ட விவாதம் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் காரியாலம் ஊடாக சமூக ஊடக வலைத்தளங்களுக்கு ‘வரவு செலவு திட்ட விவாத்தின்போது பிரஜைகள் உங்களின் கருத்துக்களுக்கு இடம் கொடுக்க எதிர்க்கட்சியில் உள்ள நாங்கள் தயார்’ என்ற வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது.
அதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வட்சப் (0759570570 ) மற்றும் மின்னஞ்சல் முகவரி [email protected] ஊடாகவும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம், இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு எழுத்து மூலமும் கருத்துக்களை அனுப்ப முடியும் என பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.