இன்று இந்திய இராணுவ தினம்

by admin

1949-ம் ஆண்டு ஜனவரி 15-ம் திகதி, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக, ஜெனரல் கே.எம். கரியப்பா பொறுப்பேற்றார். சுமார் 200 ஆண்டு கால பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு இந்திய ராணுவத்தின் கட்டுப்பாடு இந்தியர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் தளபதி ஜெனரல் எப்.ஆர்.ஆர். புச்சரிடமிருந்து ஜெனரல் கரியப்பா இந்த உயரிய பொறுப்பை ஏற்றார்.

இதனை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 15-ம் திகதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ராணுவ வீரர்கள் மற்றும் போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இந்த ஆண்டு இன்று ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ராணுவ தினத்தையொட்டி இந்திய ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தாய்நாட்டிற்காக நீங்கள் செய்த எண்ணற்ற தியாகங்களை இந்த நாடு நன்றியுடன் நினைவுகூர்கிறது.

நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதிலும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் உங்களின் அர்ப்பணிப்பு அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கிறது. உங்கள் வீரமும் துணிச்சலும் வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து உத்வேகமாக இருக்கட்டும் என ஜனாதிபதி கூறி உள்ளார்.

மேலும், தேசிய ராணுவ தினமான இன்று, நாட்டின் பாதுகாப்பின் அரணாக நிற்கும் இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம். ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வீரர்களின் தியாகங்களையும் நாம் நினைவுகூருகிறோம்.

இந்திய ராணுவமானது உறுதிப்பாடு, தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. நமது எல்லைகளைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், இயற்கை பேரிடர்களின் போது மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் முத்திரை பதித்துள்ளது.

எங்கள் அரசாங்கம் ஆயுதப்படைகள் மற்றும் படை வீரர்களின் குடும்பங்களின் நலனில் அரசு உறுதியாக உள்ளது. பல ஆண்டுகளாக, ராணுவத்தில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி நவீனமயமாக்கலில் கவனம் செலுத்தியுள்ளோம். இது வரும் காலங்களிலும் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்