by smngrx01

எட்கா இலங்கைக்கு மிக அவசியமானது; இரண்டு நாடுகளுக்கும் நன்மை இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கையானது இலங்கைக்கு மிக அவசியமானது. அரசாங்கம் இந்தியாவுடன் அந்த உடன்படிக்கையில் நிச்சயமாக கைச்சாத்திட வேண்டும். அது இரண்டு நாடுகளுக்கும் பாரிய பொருளாதார நன்மைகளை பெற்றுக் கொடுக்கும் என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரமுகருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

எட்கா உடன்படிக்கை விவகாரம் தற்போது பேச்சுவார்த்தை மட்டத்தில் இருக்கின்றது. அண்மையில் இந்தியாவுக்கு அரசமுறை விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இந்திய பிரதமருடனான சந்திப்பின்போது எட்கா உடன்படிக்கை தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இணக்கம் தெரிவித்திருந்தனர்.

அந்த அடிப்படையில் விரைவில் இது தொடர்பான பேச்சுக்கள் விரிவாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், எட்கா உடன்படிக்கை தொடர்பில் எதிர்மறையான கருத்துக்களும் அரசியல் தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எட்கா உடன்படிக்கையானது 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்திலிருந்து பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செய்துகொள்வதின் ஊடாகவே இலங்கைக்கு பொருளாதார ரீதியில் அபிவிருத்தியை நோக்கி நகர முடியும். இலங்கைக்கு ஒரு சில நாடுகளுடன் மட்டுமே சுதந்திர வர்த்தக உடன்படிக்கை காணப்படுகிறது.

பல வருடங்களுக்கு முன்னர் மிகவும் கீழ் மட்டத்தில் காணப்பட்ட வியட்நாம் இன்று பொருளாதார ரீதியாக பாரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அதற்கு அந்த நாடு பல்வேறு நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செய்துகொண்டமையே முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே இலங்கையும் தயங்காமல் சர்வதேச நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செய்துகொள்ள வேண்டும். அதில் சாதக பாதகத் தன்மை காணப்படும். அவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு அவற்றை கைச்சாத்திட்டால் மட்டுமே பொருளாதார ரீதியாக இலங்கை முன்னேற முடியும் என்பது எங்களது நிலைப்பாடாகும் என்றார்.

இதேவேளை எட்கா உடன்படிக்கை தொடர்பில் அண்மையில் கேசரிக்கு கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் அது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து கடந்த வாரம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பொதுஜன பெரமுனவின் எம்.பி. நாமல் ராஜபக்ஷ இந்த உடன்படிக்கை தொடர்பில் இரண்டு தரப்பிலும் பரந்துபட்ட ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். அது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நல்லது என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் உடன்படிக்கை தொடர்பான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் எப்போது ஆரம்பமாகும் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்