தென்னாபிரிக்காவின் தங்கச்சுரங்கத்திலிருந்து 70க்கும் அதிகமான உடல்களை மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளனர்.
தென்னாபிரிக்காவின் சட்டவிரோத சுரங்கத்தில் அகழ்வில் ஈடுபட்டவர்களிற்கான உணவு நீர் போன்றவற்றை அதிகாரிகள் துண்டித்து சில மாதங்களின் பின்னர் சுரங்கத்திற்குள் இருந்து 70 உடல்களை மீட்டுள்ள மீட்பு பணியாளர்கள் 92 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.
இதேவேளை மேலும் பலர் உள்ளே சிக்குண்டுள்ளனர் எனவும் பலர் உயிரிழந்திருக்கலாம் அல்லது வெளியேற முடியாத பலவீனமான நிலையில் காணப்படலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை முதல் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தென்னாபிரிக்க மீட்பு பணியாளர்கள் சிகப்பு நிற கூண்டு போன்ற ஒன்றை தங்கச்சுரங்கத்திற்குள் இறக்கி 60 பேரின் உடல்களை மீட்டுள்ளதுடன் 92 பேரை உயிருடன் காப்பாற்றியுள்ளனர்.உள்ளே மேலும் எத்தனை பேர் இருக்கின்றனர் என்பது தெரியாது என தெரிவித்துள்ள பொலிஸார் நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒருவருடகாலமாக தென்னாபிரிக்காவின் சுரங்கமொன்றிற்குள் சட்டவிரோதமாக அகழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் நிலை குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக கடந்த வருடம் குடிநீர் உணவு மருந்துபோன்றவை அந்த சுரங்கத்திற்குள் செல்வதை பொலிஸார் தடுத்திருந்தனர்.
உள்ளே சிக்குண்டுள்ள ஒருவரின் கடிதத்தை அடிப்படையாக வைத்து உள்ளே சிக்குண்டுள்ள ஒருவரின் சகோதரி நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையிலேயே அரசாங்கம் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
ஸ்டில்பொன்டெய்னிற்கு அருகில் உள்ள பவல்பொன்டெய்னில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் சிக்குண்டுள்ளவர்களில் 109 ஏற்கனவே உயிரிழந்துள்ளனர் என உள்ளேயிருந்து அனுப்பப்பட்ட கடிதமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கங்களில் சட்டவிரோதமாக அகழ்வுப்பணிகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ள நிலையில் தென்னாபிரிக்க அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது
இந்த சுரங்கத்திற்குள் சட்டவிரோதமாக அகழ்வில் ஈடுபட்டவர்களை அகற்றுவதற்காக அதிகாரிகள் குடிநீர் உணவு போன்றவற்றை நிறுத்தியதை தொடர்ந்து இந்த சுரங்கம் பொலிஸ் அகழ்வில் ஈடுபடுபவர்கள் சிவில் சமூகத்தினரிடையே கடும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.
உள்ளே சிக்குண்டுள்ளவர்கள் குற்றவாளிகள் என்பதால் அவர்களை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் உதவிகளை அனுப்பாது அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதே தங்களின் நோக்கம் என அமைச்சர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
எனினும் உணவு குடிநீரை துண்டிக்கும் நடவடிக்கைகளை சிவில் சமூகத்தினரும் பொதுமக்களும் கடுமையாக கண்டித்துவந்தனர்.
இந்த விவகாரத்தை கையாண்ட விதம் குறித்து தென்னாபிரிக்க அரசாங்கம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.இந்த சுரங்கத்திற்குள் பட்டினி நோய் போன்றவற்றால் 100க்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது.
சுரங்க அகழ்வில் ஈடுபட்டவர்கள் உள்ளே நுழைவதற்கு பயன்படுத்திய கயிறுகள் போன்றவற்றை அகற்றியிருந்த அதிகாரிகள் உள்ளேயிருப்பவர்களால் வெளியில் வரமுடியும் எனினும் கைதுசெய்யப்படுவோம் என்றஅச்சம் காரணமாகவே அவர்கள் வெளியே வரமறுக்கின்றனர் என குறிப்பிட்டிருந்தனர்.
எனினும் இதனை நிராகரித்த சிவில் சமூக அமைப்புகள் சுரங்கத்திற்குள் சிக்குண்டுள்ளவர்களி;ற்கு உணவு குடிநீர் போன்றவற்றை வழங்கவேண்டும் என கோரி நீதிமன்றம் சென்றனர்.
அவர்களின் இந்த வேண்டுகோளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது எனினும் தென்னாபிரிக்க அரசாங்கம் அனுப்பும் உணவு நீர் போன்றவை உள்ளேயிருப்பவர்களிற்கு போதாது என சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.