லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீயை அணைக்க விமானத்தில் இருந்து வீசப்படும் இந்த ‘பிங்க்’ நிற தூளில் என்ன உள்ளது?

ஃபோஸ்-செக்(Phos-Chek)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தீயணைக்கப் பயன்படுத்தப்படும் தீ தடுப்பு மருந்து ஃபோஸ்-செக்(Phos-Chek) என்று அழைக்கப்படுகிறது
  • எழுதியவர், நாடின் யூசிப்
  • பதவி, பிபிசி செய்தி

தெற்கு கலிஃபோர்னியாவில் பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீயுடன் மீட்புக் குழுக்கள் போராடுகையில், லாஸ் ஏஞ்சலிஸ் புறநகர்ப் பகுதிகளில் பிரகாசமான சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு பொடிகளை தூவிய விமான டேங்கர்களின் படங்கள் வெளிவந்துள்ளன.

கண்ணைக் கவரும் வண்ணங்களான பிரகாசமான சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் உள்ள தீ தடுப்பு மருந்துகள் சாலைகள், கூரைகள் மற்றும் வாகனங்கள் மேல் இருப்பதை தற்போது வழக்கமாக பார்க்கமுடிகிறது.

தீ பரவுவதைத் தடுக்க கடந்த வாரத்தில் ஆயிரக்கணக்கான கேலன் அளவிலான தீ தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

காட்டுத்தீயை எதிர்த்து அப்பொருள் போராடுவது எப்படி?

தீ தடுப்பு மருந்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த வாரம் தெற்கு கலிஃபோர்னியாவில் ஆயிரக்கணக்கான கேலன் அளவிலான தீ தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட்டது .

தீயணைக்கப் பயன்படுத்தப்படும் தீ தடுப்பு மருந்து ஃபோஸ்-செக்(Phos-Chek) என்று அழைக்கப்படுகிறது, இது பெரிமீட்டர் என்ற நிறுவனத்தால் விற்கப்படுகிறது.

1963-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் காட்டுத் தீயை எதிர்த்துப் போராடுவதற்கு ஃபோஸ்-செக் (Phos-Chek) பயன்படுத்தப்படுகிறது. இது கலிஃபோர்னியா வனவியல் மற்றும் தீ பாதுகாப்புத் துறையால் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் முக்கிய தீ தடுப்பு மருந்து ஆகும்.

அசோசியேட்டட் பிரஸ்ஸில் 2022ம் ஆண்டு வந்த செய்தியின்படி இது உலகில் அதிகளவில் பயன்படுத்தப்படும் தீ தடுப்பு மருந்து ஆகும்.

தெற்கு கலிஃபோர்னியாவில் கடந்த ஒரு வாரமாக காட்டுத் தீ பரவி வருவதால், வாகனங்கள் மற்றும் சாலைகளில் இளஞ்சிவப்பு நிற தீ தடுப்பு மருந்துகள் இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

ஃபோஸ்-செக் தீ அணைப்பு மருந்தைத் தயாரிக்கும் நிறுவனமான பெரிமீட்டர், அதனை சுத்தம் செய்வது பாதுகாப்பானது என கடந்த காலத்தில் பரிந்துரைத்தது.

“தீ தடுப்பு மருந்து நீண்ட நேரம் காய்ந்தால், அதை முழுவதுமாக அகற்றுவது மிகவும் கடினம்” என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

சிறிய பகுதிகளில் இருந்து தீ அணைப்பு மருந்தை அகற்றுவதற்கு வெதுவெதுப்பான நீர் மற்றும் லேசான சோப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. பெரிய அளவுகளில் உள்ள மருந்துகளை, அழுத்தத்தின் மூலம் இயங்கும் இயந்திரங்களின் உதவியோடு சுத்தம் செய்யலாம்.

ஃபோஸ்-செக் (Phos-Chek) எனும் தீ தடுப்பு மருந்தின் சரியான பார்முலாவை பொதுவெளிக்கு அளிக்கவில்லை என்றாலும் , தோராயமாக 80 சதவீத நீர், 14 சதவீத உர வகை உப்புகள், 6 சதவீத நிறமூட்டும் ரசாயனங்கள் மற்றும் பொருட்களில் ஏற்படும் அரிப்பை தடுக்கும் ரசாயனங்கள் ஆகியவற்றை ஃபோஸ்-செக் கொண்டுள்ளது என்பதை பெரிமீட்டர் நிறுவனம் முன்பு வெளிப்படுத்தியுள்ளது.

ஃபோஸ்-செக்கின் பிரகாசமான நிறம், “விமானிகள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவியாக செயல்படுகிறது” என்று பெரிமீட்டர் நிறுவனம் விளக்கியது.

சில நாட்களுக்குப் பிறகு, சூரிய ஒளி பட்டு, பூமியின் நிறத்திற்கு ஏற்றவாறு அதன் நிறம் மங்கிவிடும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பொதுவாக தாவரங்கள் மற்றும் தீ பரவும் நிலங்களில் காட்டுத்தீயைச் சுற்றி தெளிக்கப்படும் தீ தடுப்பு மருந்து, அந்த பகுதியில் தீ மேலும் பரவாமல் தடுக்க உதவுகிறது.

அமெரிக்க வன சேவையின் கூற்றுப்படி, ”தீ தடுப்பு மருந்து குளிர்ச்சி மற்றும் பூச்சு திரவம் மூலம் காட்டுத்தீ பரவுவதை குறைக்கிறது. அதிலுள்ள எரிபொருள் தீ எரியும் விகிதத்தை குறைக்கிறது. தீ தடுப்பு மருந்தில் உள்ள கனிம உப்புகள் எரியும் விதத்தை மாற்றி, தீயைக் கட்டுப்படுத்த உதவுகிறது” .

சுற்றுச்சூழலில் அதன் பயன்பாடுகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து கடந்த காலங்களில் சர்சைக்குரியக் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.

தீ தடுப்பு மருந்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பொதுவாக தாவரங்கள் மற்றும் தீ பரவும் நிலங்களில் காட்டுத்தீயைச் சுற்றி தெளிக்கப்படும் தீ தடுப்பு மருந்து, அந்த பகுதியில் தீ மேலும் பரவாமல் தடுக்க உதவுகிறது.

தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க வனச் சேவை ஊழியர்களை கொண்ட, சுற்றுச்சூழல் நெறிமுறைகளுக்கான வனச் சேவை ஊழியர் சங்கம் 2022-ஆம் ஆண்டு பெரிமீட்டர் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தனர்.

விமானங்களில் இருந்து ரசாயன தீ தடுப்பு மருந்துகளை காடுகளில் தெளிப்பதன் மூலம், தூய்மை நீர் சட்டத்தை மீறியதாக அந்த நிறுவனத்தின் மீது அவர்கள் குற்றம் சாட்டினர்.

அந்த ரசாயனம் மீன்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் அது பலனளிக்காது என்றும் அந்த அமைப்பு வாதிட்டது.

2023-ஆம் ஆண்டில், அமெரிக்க மாவட்ட நீதிபதி ஒருவர் சுற்றுச்சூழல் நெறிமுறைகளுக்கான வனச் சேவை ஊழியர்களுடன் உடன்பட்டார்.

தீ தடுப்பு மருந்து நீரோடைகளை மாசுபடுத்துகிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

இருப்பினும்​ தொடர்ந்து தீ தடுப்பு மருந்தை பயன்படுத்த வனச் சேவைக்கு அவர் அனுமதியளித்தார்.

இந்த ஆண்டு, ஃபோஸ்-செக்கில் (Phos-Chek) உள்ள எல்சி95 ( LC95) எனும் ஃபார்முலாவைப் பயன்படுத்துவதை நிறுத்தியதாக தேசிய பொது வானொலியிடம் (NPR) வனத்துறை தெரிவித்தது.

அதற்குப் பதிலாக, இப்போது எம்விபி-எபெஸ்(MVP-Fx) என்ற புதிய ஃபார்முலாவைப் பயன்படுத்துகிறார்கள், ஏனெனில் இது வனவிலங்குகளுக்கு குறைவான தீங்கு விளைவிக்கும் என அறியப்படுகின்றது.

நீர்வழிகள் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் வாழ்விடங்கள் போன்ற மென்மையான சுற்றுச்சூழல் பகுதிகளில் தீ தடுப்பு மருந்துகளை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என வனத்துறை கட்டாய தடையை அமல்படுத்தியது.

இருப்பினும், மனித உயிர் அல்லது பொது பாதுகாப்பு ஆபத்தில் இருக்கும் சூழ்நிலைகளில் இந்த தடைக்கு விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

– இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு