ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன் ஆபத்தாகும் நாட்டை கட்டியெழுப்ப முடியுமான பாதையை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தயாரித்துள்ளது. இந்த பாதை மிகவும் அவதானமிக்கதாகும். இதைத்தவிர வேறு வழியில்லை. அதனால் அரசாங்கம் இந்த பாதையில் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். இல்லாவிட்டால், அதன் பிரதிபலன் மிகவும் ஆபத்தாக மாறும் என புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தையே தற்போதுள்ள அரசாங்கம் முன்னெடுத்துச் செல்கிறது. அதனால் இதுவரை அரசாங்கம் செல்லும் பாதை சரி என நாங்கள் தெரிவிக்கிறோம். என்றாலும் ஒரு சில கட்டங்களில் தவறு ஏற்பட்டுள்ளது.
அந்த தவறுகளை சரி செய்துகொள்ளவே நாங்கள் அரசாங்கத்துக்கு ஆலாேசனை வழங்கி வருகிறோம். மாறாக அரசாங்கம் வலது பக்கத்துக்கு சமிக்ஞையை காட்டிவிட்டு இடது பக்கத்துக்கு திரும்பக்கூடாது என்றே நாங்கள் தெரிவிக்கிறோம். மக்கள் புதிய அரசாங்கம் ஒன்றை கேட்டிருந்தனர். அதனால் தற்போதுள்ள அரசாங்கத்துக்கு நாங்கள் இடமளிக்க வேண்டும் என்றார்.
தைப்பொங்கலை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (14) வெள்ளவத்தை மயூரபதி பத்திரகாளி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.