டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள் எதற்கு ? இந்திய நிறுவனம் மூலம் வழங்கப்படும் டிஜிlட்டல் அடையாள அட்டைகளில் பொதுமக்களின் பயோமெற்றிக் விவரங்களை ஒருங்கிணைப்பதற்கான காரணங்களை தெளிவுபடுத்துமாறு மக்கள் போராட்ட இயக்கம் வலியுறுத்தியது.
மக்கள் போராட்ட இயக்கத்தின் நிர்வாக உறுப்பினர் வசந்த இதுதொடர்பில் தெரிவித்துள்ளதாவது,
புதிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதற்காக பொதுமக்களின் பயோமெற்றிக் விவரங்கள் ஏன் பெறப்படுகின்றன என்பதற்கான விளக்கம் வெளியிடப்பட வேண்டும்.
டிஜிட்டல் அடையாள அட்டையானது தொழில்நுட்பம், பாதுகாப்பு அல்லது வசதி உள்ளிட்ட காரணங்களுக்காக வழங்கப்படுகின்றதென ஒருவர் நினைக்கலாம்.
ஆனால், அது அப்படியல்ல. அந்த விவரங்களைப் பெறுவதானது தனிமனித சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்காகவாகும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
பயோமெற்றிக் விவரங்களுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்துவது குறித்து பல்வேறு நாடுகள் ஆராய்ந்திருந்தாலும், அந்தந்த நாடுகளில் எதிர்ப்புக்கள் காணப்படுகின்றன.
இந்த செயல்முறையின் போது ஒரு நபரின் மரபணு (டிஎன்ஏ), கைரேகைகள், குரல், காதுகளின் வடிவம், ஒருவர் நடக்கும் முறைமை, கையெழுத்து தொடர்பான தரவுகள் உட்பட பல்வேறு வகையான தரவுகளைப் பெறுவதற்கு குறித்த திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
அதிலுள்ள பிரச்சினை என்னவென்றால், அரசாங்கத்தின் ஈடுபாட்டுடன், டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதற்காக இந்த விவரங்கள் அனைத்தையும் சேகரிக்க இந்தியாவுக்கு நாங்கள் அனுமதி வழங்குகிறோம் என்பதாகும்.
ஒரு இந்திய நிறுவனத்தின் சேவைகளைப் பெறுவதற்கான மேற்கூறிய முடிவு முந்தைய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவுகளின் விளைவாகும்.
மேலும், இந்தியாவில் இதுபோன்ற கசிவுகள் ஏற்கனவே பதிவாகியுள்ள சூழலில், எமது நாட்டுத் தகவல்களும் கசியவிடப்படாது என்பதற்கு உறுதிப்பாடான நிலைமைகள் இல்லை என்றார்.