ஜல்லிக்கட்டின் வரலாறு என்ன? – தமிழ் அடையாளங்களில் ஒன்றாக மாறியது எப்படி?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
பொங்கல் திருநாளை ஒட்டி தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் விளையாடப்படும் ஜல்லிக்கட்டு, தமிழர்களின் வீர விளையாட்டாக முன்வைக்கப்படுகிறது. இந்த விளையாட்டின் வரலாறு என்ன?
தை மாதம் பிறந்த பிறகு மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது.
மாடு பிடிக்கும் விளையாட்டு, பொதுவாக ஜல்லிக்கட்டு எனக் குறிப்பிடப்பட்டாலும் இது விளையாடப்படும் பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் பொதுவாக ஜல்லிக்கட்டு என்ற பெயரிலும் ராமநாதபுரத்தில் எருது கட்டு, திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் மஞ்சு விரட்டு என இந்த விளையாட்டுகள் நடக்கின்றன.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன.
வாடிவாசலுக்கு முன்பாக நிற்கும் இளைஞர்கள், இந்தக் காளைகளை பிடிக்க முயல்வார்கள். காளைகளைப் பிடிப்பது என்பதன் அர்த்தம், அதன் மதிலைப் பிடித்துத் தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் வரை செல்வதாகும்.
காளைகளின் மதிலைப் பிடித்துத் தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் வரை செல்லும் இந்த வடிவமே, ஜல்லக்கட்டின் பிரபல வடிவமாக இருக்கிறது.
இது தவிர, வேலி மஞ்சுவிரட்டு (ஒரு திடலில் காளைகள் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவற்றை இளைஞர்கள் விரட்டிப் பிடிக்க முயல்வார்கள்.)
வடம் மஞ்சுவிரட்டு (ஒரு காளையை கயிற்றால் கட்டி இருபுறமும் ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்வார்கள்)
மஞ்சு விரட்டு (கண்மாய் பகுதிக்குள் மாடுகள் அவிழ்த்துவிடப்பட அதனைப் பிடிக்க முயல்வார்கள்) என்ற வடிவங்களிலும் இந்த விளையாட்டு நடைபெறுகிறது.
ஜல்லிக்கட்டு பெயர் காரணம் என்ன?
ஜல்லிக்கட்டு என்ற பெயர் வந்ததற்கு, பரவலாக ஒரு காரணம் குறிப்பிடப்படுகிறது. அதாவது, மாட்டின் கொம்பில் கட்டப்பட்டிருக்கும் ‘சல்லி’யை அதாவது சிறிய அளவிலான பணத்தை எடுக்க வீரர்கள் முயல்வதாலேயே, அதன் பெயர் சல்லிக்கட்டு என்று ஆரம்பித்து, பிறகு ஜல்லிக்கட்டு என ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
ஜல்லிக்கட்டிற்கு வேறு பெயர்க் காரணங்கள் இல்லாத நிலையில், இந்தக் காரணமே பொதுவாக ஏற்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு, தற்போது விளையாடப்படும் வடிவத்திலும் பெயரிலும் பழங்கால இலக்கியங்கள் எதிலும் குறிப்பிடப்படுவதில்லை.
மாறாக, இதேபோல மாட்டைப் பிடித்து விளையாடும் ஏறு தழுவுதல் சங்க இலக்கியத்தின் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. எட்டுத்தொகை இலக்கியங்களில் ஒன்றான கலித்தொகையின் முல்லைக்கலியில் வரும் 103வது பாடல், மாடு பிடிப்பதை திருமணத்துடன் தொடர்புபடுத்துகிறது.
“கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே, ஆய மகள்.
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சு இலார் தோய்தற்கு அரிய- உயிர் துறந்து-
நைவாரா ஆய மகள் தோள்.
வளியா அறியா உயிர், காவல் கொண்டு,
நளிவாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
எளியவோ, ஆய மகள் தோள்?
விலை வேண்டார், எம் இனத்து ஆயர் மகளிர்-
கொலை ஏற்றுக் கோட்டு இடைத் தாம் வீழ்வார் மார்பின்
முலை இடைப் போலப், புகின்.” என்கிறது அந்தப் பாடல்.
அதாவது, “கொல்லும் காளையின் கொம்புக்கு அஞ்சுபவனை ஆயர் குலப் பெண் இந்தப் பிறவியில் மட்டுமல்லாமல், அடுத்த பிறவியிலும் கூட அணைக்க மாட்டாள். கொல்லும் காளையை அஞ்சாமல் பிடித்து, ஆள்பவர் அல்லாதவரை வன்னெஞ்சம் கொண்ட ஆயர் குலப் பெண் தழுவ மாட்டாள். தழுவ நேர்ந்தால் உயிர் துறப்பர். அறியாத காற்றில் ஓடும் உயிரைக் காப்பாற்றிக்கொண்டு, காளையின் கூர்மையான கொம்புக்கு அஞ்சுபவர் ஆயர் குலமகளின் தோளை அணைப்பது எளிதோ. தம்மை விரும்புபவர், கொல்லும் காளையின் கொம்புகளுக்கு இடையில் பாய்ந்து அடக்குவாராயின், எம் ஆயர் இனத்து மகளிர் தம் முலையைத் தழுவ எந்த விலையும் வாங்குவதில்லை” என்பது இந்தப் பாடலின் அர்த்தம்.
அதேபோல, ஒரு வீரன் மாட்டைப் பிடிப்பதைப் போன்ற நடுகற்கள் தமிழ்நாட்டின் பல இடங்களில் காணப்படுகின்றன என்கிறது ஆ. சிவக்கொழுந்துவின் ‘ஜல்லிக்கட்டு – மதுரை மாவட்டம்’ புத்தகம்
ஊர் தெய்வங்களோடு தொடர்பு
“ஜல்லிக்கட்டு உட்பட, இதுபோன்ற மாட்டுடன் தொடர்புடைய விளையாட்டு நிகழ்வுகள் அனைத்துமே அந்தந்த ஊர்களுக்கு உரிய தெய்வங்களோடு தொடர்புடையதாகவே இருக்கின்றன. அந்த ஊரில் கோவில் இருக்கும் இடத்தை ஒட்டியே பெரும்பாலும் இந்த விளையாட்டுகள் நடக்கின்றன. வேறு இடங்களில் நடத்த அந்த ஊர் கமிட்டி பெரும்பாலும் ஒப்புக்கொள்வதில்லை. இந்த விளையாட்டுப் போட்டியை நடத்த, ஊருக்குள் வரி வசூலிக்கப்படுகிறது.
இதற்கான உத்தரவு அந்த ஊர் தெய்வத்திடம் பூக்கட்டிப் போட்டு பெறப்படுகிறது. கரடிக்கல் போன்ற சில ஊர்களில் கோவிலின் அருள் இறங்கி ஆடும் பூசாரியிடம் உத்தரவைப் பெற்று ஜல்லிக்கட்டுகள் நடத்தப்படுகின்றன” என அந்த நூலில் குறிப்பிடுகிறார் ஆ.சிவக்கொழுந்து.
ஆனால், சங்க காலத்தில் நடந்த ஏறு தழுவுதலையும் தற்போது நடைபெறும் ஜல்லிக்கட்டையும் தொடர்புபடுத்தும் வகையிலான ஆதாரங்கள் ஏதும் இல்லை.
அலங்காநல்லூரைப் பொறுத்தவரை சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பாக காலரா பரவியபோது, அந்த ஊர் பூசாரிக்கு அருள் வந்து, கிராமத்தில் மாடு பிடிக்கும் விளையாட்டை நடத்துங்கள், உள்ளூர்காரர்களைக் காப்பாற்றுகிறேன் கூறியதாகவும் அதன் காரணமாகவே அங்கு இந்த விழா நடப்பதாகவும் ஒரு கதை உண்டு.
மறுக்க முடியாத தமிழ் அடையாளங்களில் ஒன்று
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டியின் தலைவர் ரகுபதியிடம் கேட்டபோது, “நீண்ட காலமாக நடந்துவந்த ஜல்லிக்கட்டு 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் சில அதிகாரிகளால் நிறுத்தப்பட்டது. அப்போது ஊரில் காலரா ஏற்பட்டது. அந்த சமயத்தில் பூசாரிக்கு சாமி வந்து, ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்தும்படி சொன்னதாகச் சொல்வார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்படி உருவானதென்பது தெரியாது. காலம் காலமாக நடந்துவருகிறது” என்கிறார்.
ஜல்லிக்கட்டின் வரலாறு என்னவாக இருந்தாலும் 2017ஆம் ஆண்டின் போராட்டத்திற்குப் பிறகு அது மறுக்க முடியாத தமிழ் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
முனைவர் ஆ. சிவக்கொழுந்து என்பவர் 1990களின் மத்தியில் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஒரு ஆய்வை நடத்தினார்.
அந்தத் தருணத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் நிலை குறித்து, தன்னுடைய ஆய்வு நூலான ‘ஜல்லிக்கட்டு – மதுரை மாவட்டம்’ல் குறிப்பிடும்போது, “ஜல்லிக்கட்டு ஒரு காலத்தில் மதுரை மாவட்டம் முழுவதும் பரவலாக நடைபெற்று வந்தது. ஆனால், சல்லிக்கட்டின் காரணமாக ஏற்படும் கலவரத்தால் பல ஊர்களில் சல்லிக்கட்டு நடத்தப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது. பரிசுப் பொருட்கள் குறைவாக உள்ள ஊர்களில் நடைபெறும் சல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
ஊர் தெய்வ நம்பிக்கையோடு தொடர்புபடுத்தி சல்லிக்கட்டினை நடத்திவருவதால் மதுரை மாவட்டத்தில் சில ஊர்களில் மட்டும் நடந்து வருகிறது. நாட்டுப்புற மக்கள் தங்கள் ஊர் தெய்வங்களுக்குச் செய்யும் வழிபாட்டுச் சடங்குகள் நிறுத்தப்பட்டால் சல்லிக்கட்டும் நடைபெறாமல் போய்விடும் எனக் கருதப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.
ஆனால், 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போராட்டம், எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. இப்போது தமிழ்நாடு முழுவதுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் புத்துயிர் பெற்றிருக்கின்றன.