பிரித்தானிய தமிழர் பேரவையினால் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு ஏற்பாடு ! on Monday, January 13, 2025
பிரித்தானிய தமிழர் பேரவையினால் வருடாந்தம் ஒழுங்குசெய்யப்படும் தமிழர் மரபுரிமை மற்றும் தைப்பொங்கல் நிகழ்வு இம்முறை புதன்கிழமை (15) பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பங்கேற்பதற்கு சர்வகட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அமைச்சர்கள், கவுன்சிலர்கள், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக நலனோம்பு அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவையானது தமிழர்களுக்கான சர்வகட்சி பாராளுமன்றக்குழுவின் செயலகமாக மீண்டும் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டிருப்பதனால், இம்முறை தைப்பொங்கள் நிகழ்வு மேலும் முக்கியத்துவம் பெறுவதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
2007 ஆம் ஆண்டு பிரித்தானிய தமிழர் பேரவையின் பெரும் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட தமிழர்களுக்கான சர்வகட்சி பாராளுமன்றக்குழுவுக்கு இப்போது தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சியோபைன் மக்டொனாக் தலைமை வகிப்பதுடன், தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன், லிபரல் கட்சி உறுப்பினர் பொபி டீன் மற்றும் கொன்சவேட்டிவ் கட்சி உறுப்பினர் பாரோன்ஸ் வர்மா ஆகியோர் இணைத்தலைமை வகிக்கின்றனர்.
அதன்படி பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நாளைய தினம் நடைபெறவிருக்கும் தைப்பொங்கல் நிகழ்வில் இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசிய தலைவரும், தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன் சிறப்பு அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவிருக்கும் இப்பாரம்பரிய தைப்பொங்கல் நிகழ்வானது பிரித்தானிய அரசியல் பரப்பில் தமிழர் பாரம்பரியத்துக்கான இடைவெளி அதிகரித்துவருவதனைக் காண்பிப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவை மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.