by sakana1

கலங்கரை விளக்கம் – நீலாங்கரை இடையே கடலில் பாலம் அமைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்: மீனவர்கள் கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை கடலில் மேம்பாலம் அமைத்தால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, கடல் அரிப்பும் ஏற்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, மீனவர் சங்க பிரதிநிதிகள் கு.பாரதி, கோ.சு.மணி ஆகியோர் கூறியதாவது: கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை கடல் பகுதியில் பாலம் கட்டப் போவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இப்பாலம் கட்டப்பட்டால் 5 ஆயிரம் மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வரும் 2050-ம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

மேலும், கடற்கரையில் கட்டுமான பணிகள் மேற்கொண்டால் அது கடல் அரிப்புக்கு வழி வகுக்கும். மும்பையில் கடற்பகுதியில் இதுபோன்ற கட்டுமான பணிகள் செய்ததால் அங்கு கடல் அரிப்பு ஏற்பட்டது.அத்துடன், கடல் பகுதியில் பாலம் கட்டினால் கடலில் மீன்பிடிக்க சென்று இரவு நேரத்தில் திரும்பும் மீனவர்களின் படகுகள் பாலத்தின் தூண்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படும்.

எனவே, இப்பாலம் கட்டுவதற்குப் பதிலாக மீனவர்களுக்கு மாற்று வீடுகளை கட்டித் தருவதுடன், அவர்களது மறுவாழ்வுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்