by sakana1

பள்ளி மாணவரின் மர்ம மரணத்தை கண்டித்து சீன அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம் சீனாவின் சான்சி மாகாணத்தில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரோனா பெருந்தொற்று காலம் முதல் சீன அதிபர் ஜி ஜின்பிங் மீதான நம்பிக்கையை அந்த நாட்டு மக்கள் இழந்துள்ளனர். பொருளாதார தேக்கநிலை, வேலையின்மை, சர்வாதிகாரம், மத சுதந்திரம் மறுப்பு உள்ளிட்ட காரணங்களால் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு எதிராக அவ்வப்போது பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போது பள்ளி மாணவரின் மர்ம மரணம் தொடர்பாக சீனாவின் சான்சி மாகாணத்தில் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சான்சி மாகாணம், புச்செங் பகுதியில் அரசு பள்ளி செயல்படுகிறது. 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த பள்ளியில் 2,300 மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்து கல்வி பயில்கின்றனர். 204 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 1-ம் தேதி இரவு விடுதி வளாகத்தில் மாணவர் டாங் என்பவருக்கும் (17) , சக மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2-ம் தேதி அதிகாலை மாணவர் டாங் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

இதுகுறித்து மாணவரின் பெற்றோர் கூறும்போது, “ஜனவரி 2-ம் தேதி அதிகாலையில் பள்ளி ஆசிரியர் செல்போனில் பேசினார். எங்கள் மகனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதாக ஆசிரியர் கூறினார். அவர் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்றபோது மகனை பார்க்க அனுமதிக்கவில்லை. சில மணி நேரத்துக்கு பிறகு எங்கள் மகன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகமும் போலீஸாரும் தெரிவித்தனர். ஆனால் சுமார் 8 மாணவர்கள் சேர்ந்து எனது மகனை அடித்து உதைத்து மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளனர். இந்த உண்மையை பள்ளி நிர்வாகம் மறைக்கிறது” என்று குற்றம் சாட்டினர்.

உயிரிழந்த மாணவர், சீனாவில் பெரும்பான்மையாக வசிக்கும் ஹான் இனத்தை சேர்ந்தவர் ஆவார். அந்த சமுதாயத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 2-ம் தேதி காலை புச்செங் பகுதியில் அரசு பள்ளியை முற்றுகையிட்டு திடீர் தாக்குதல் நடத்தினர். பள்ளியின் தலைமை ஆசிரியர், துணை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்தனர். போலீஸார் மீதும் பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது. கடந்த இரு வாரங்களாக புச்செங் மட்டுமன்றி சான்சி மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத சீன சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மக்கள் போராட்டத்தை தடுக்க புச்செங் பகுதியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டு உள்ளன. ஒரு கொலையை, தற்கொலை எனக் கூறி 12 மணி நேரத்தில் வழக்கு முடிக்கப்பட்டு உள்ளது. நிர்வாக தவறுகளை மறைக்க சீன கம்யூனிஸ்ட் கட்சி அநீதியின் பாதையில் செல்கிறது.

இது ஒரு மாணவர் சார்ந்த பிரச்சினை கிடையாது. அரசு நிர்வாகம், போலீஸாரின் சர்வாதிகாரத்தை எதிர்த்து பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான செய்திகள், படங்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவோர் கைது செய்யப்படுகின்றனர். இதுவரை பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். புச்செங் முழுவதும் போலீஸார், ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்