by wp_fhdn

புத்தளம், கற்பிட்டி – கப்பலடி கடற்பகுதியில் இருந்து ஒருதொகை கேரள கஞ்சா நேற்று (10) மாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை விஜயா நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட கரையோர ரோந்துக் கப்பல் நேற்று குறித்த கடற்பகுதியில் வசேட ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இதன்போது, குறித்த கடற்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கடலில் மூன்று பெரிய பொதிகள் மிதந்துகொண்டிருந்ததை அவதானித்த கடற்படையினர் அதனை பரிசோதனை செய்துள்ளனர்.

குறித்த மூன்று பொதிகளிலும் சிறிய பொதிகளாக அடைக்கப்பட்ட நிலையில் 30 சிறிய பொதிகளில் கேரளக் கஞ்சா இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சா 90 கிலோ 45 கிராம் எனவும் அதன் சந்தை பெறுமதி 36 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடையது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யும் நோக்கில் கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்டுள்ள குறித்த கேரள கஞ்சா பொதிகளை, கடற்படையினரின் கெடுபிடிகள் காரணமாக கடத்தல்காரர்கள் இவ்வாறு கடலில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் கடற்படையினர் கூறினர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சாப் பொதிகளை மேலதிக விசாரணைக்காக தமது பொறுப்பில் வைத்திருப்பதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்