- எழுதியவர், நிதேஷ் ராவத்
- பதவி, பிபிசி மராத்தி
-
மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தில் உள்ள ஆறு கிராமங்களில் சிலருக்கு திடீரென அதீத முடி உதிர்வு ஏற்பட்டு, தலை வழுக்கையாகும் நிலை உருவாகியுள்ளது.
புல்தானா மாவட்டம், ஷேகான் தாலுகாவில் உள்ள பாண்ட்கான், கல்வாட், கதோரா ஆகிய கிராமங்களில் முடி கொட்டும் பிரச்னை அதிகரித்து, ஒருவித அச்சம் பரவியுள்ளது.
இது தொடர்பாக உள்ளூர் சுகாதாரத் துறையினர் ஆய்வு நடத்தி இந்த திடீர் முடி உதிர்வுக்கான காரணங்களைக் கண்டறிய முயன்றுள்ளனர்.
இந்த கிராமத்தில் வசிப்பவர்கள், முடி உதிர்தல் நாளடைவில் அதிகமாகி, சில நாட்களில் முற்றிலும் வழுக்கையாகி விடுவதாக கூறுகின்றனர்.
இந்த கிராமங்களில் வசிக்கும் சுமார் 50-55 பேர் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுவதாகவும், பின்னர் அவர்களின் தலைமுடி உதிரத் தொடங்குவதாகவும் கூறுகின்றனர். பின்னர் மூன்றாவது முதல் நான்காவது நாளில் தலை வழுக்கை ஆகும் அளவுக்கு முடி உதிர்ந்துவிடுகிறது என்கின்றனர்.
ஏன் இப்படி நடக்கிறது என்ற கேள்விக்கான பதில் இன்னும் தெரியவில்லை என்ற போதிலும், உள்ளூர் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையைத் தொடங்கியுள்ளனர்.
முடி உதிர்வால் பாதிக்கப்பட்ட நபர்கள் சொல்வது என்ன?
ஷேகான் தாலுகாவில் உள்ள ஆறு கிராமங்களில் இந்த பிரச்னை அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பலர் முடி உதிர்வு ஏற்படுவதாக கூறியதை அடுத்து, ஒரு தோல் மருத்துவர் மற்றும் பிற மருத்துவர்கள் போங்கானில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர்களை பரிசோதித்தனர்.
இந்த மருத்துவமனைக்கு வந்தவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
சில குறிப்பிட்ட பிராண்டுகளின் ஷாம்பூவைப் பயன்படுத்திய பிறகுதான் பிரச்னை தொடங்கியதாக சிலர் கூறியுள்ளனர். எனினும், பரிசோதனை அறிக்கை வரும் வரை சரியான காரணத்தை கூற முடியாது என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
வான்கடே கிராமப்புற சுகாதார மையத்தின் சுகாதார அதிகாரி மருத்துவர் பாலாஜி ஆதார் பிபிசி மராத்தியிடம் இதுபற்றி பேசினார்.
“இந்தக் கிராமங்களில் ஏழு முதல் எட்டு பேரை பரிசோதித்துள்ளேன். மீதமுள்ள நபர்கள் பரிசோதனைக்கு வரவில்லை. நான் பரிசோதித்த நோயாளிகளின் உச்சந்தலையில் சில திட்டுகள் காணப்பட்டன. நோயாளிகளின் தலையில் அரிப்பும் இருந்தது.”
“90% பேர் தலையில் அரிப்பு இருப்பதாக தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் குளிர்காலத்தில் ஏற்படும் டைனியா கார்போரிஸ் (tinea corporis), டைனியா கேப்பிடிஸ் (tinea capitis), பிட்ரியாசிஸ் கேப்பிடிஸ் (pityriasis capitis) போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன், இந்த கிராமங்களில் இருந்து தண்ணீர் மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பியுள்ளோம்.”
“அவர்களின் தோல் பகுதியை பரிசோதிப்போம். உச்சந்தலையில் இருந்து 3 மில்லிமீட்டர் அளவிலான மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. அந்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு அதற்கான சிகிச்சை அளிப்போம். என் மருத்துவப் பயணத்தில் இப்படியான பிரச்னையை பார்ப்பது இதுவே முதல்முறை. எனவே பரிசோதனை அறிக்கை வரும் வரை சரியான காரணத்தை கூற முடியாது. பெரும்பாலும், குடும்பத்தில் தலை துவட்ட ஒரே துணி, சீப்பு போன்றவற்றைப் பயன்படுத்துவதால் இந்த நோய் பரவுகிறது.” என்று மருத்துவர் ஆதார் விளக்கினார்.
முடி உதிர்வால் அவதிப்பட்டு வரும் போங்கானில் வசிக்கும் திகம்பர் ஏலமே இதுபற்றி பேசினார்,
“அதிகமாக முடி கொட்டியதால் மருத்துவமனைக்கு வந்து காட்டினேன். ஒரு நாள், நான் ஒரு வெள்ளை நிற ஷாம்பூவைப் பயன்படுத்தினேன், அதனால்தான் என் தலைமுடி உதிர்ந்தது. என் தலைமுடி உதிர்வதற்கு வேறு காரணம் எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். எங்கள் கிராமத்தில் இதுவரை இப்படி முடி உதிர்வு பிரச்னை ஏற்பட்டதில்லை” என்றார்.
“எங்கள் கிராமத்தில் சுமார் 25 பேர் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலில், உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுகிறது, பின்னர் முடி உதிரத் தொடங்குகிறது. எனக்கு முடி முழுவதும் கொட்டி தலை வழுக்கையானது. ஆனால் இப்போது என் முடி மீண்டும் வளர்ந்து வருகிறது. எங்கள் கிராமத்தில் உப்பு நீர் வருவது காரணமாக இருக்கலாம். இதற்கான காரணத்தை மருத்துவர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. தண்ணீர் மாதிரி எடுக்கப்பட்டு பத்து நாட்களாகியும் இன்னும் ஆய்வு முடிவுகள் வெளிவரவில்லை,” என்றும் கூறினார்.
சிலர் முடி உதிர்வு பயத்தில் மொட்டை போட முடிவு செய்தனர். ஒரு நோயாளி மொட்டைப் போட்ட பிறகு, உச்சந்தலையில் அரிப்பு குறைந்து, மீண்டும் முடி வளரத் தொடங்கியது என்று கூறினார்.
முடி கொட்டியதால் வழுக்கையான மாருதி ஏலமே, “பத்து நாட்களுக்கு முன்னரே முடி கொட்ட ஆரம்பித்தது. தலையை சொறிந்து சொறிந்து வலி ஏற்பட்டது. முடி அதிகமாக உதிர்ந்து வழுக்கை ஆகிவிட்டேன்.”
“இப்போது தலையில் அரிப்பு நின்றுவிட்டது, மீண்டும் முடி வளர்கிறது, நான் ஷாம்பூ எதுவும் பயன்படுத்துவதில்லை, இந்த பிரச்னை தண்ணீரால் தான் ஏற்படுகிறது என்று நினைக்கிறேன். கிராமத்தில் பலரும் இந்தப் பிரச்னையால் அவதியுறுகிறார்கள்” என்றார்.
தண்ணீரில் அதிக நைட்ரேட்?
போங்கானில் இருந்து தண்ணீர் மாதிரிகளை பரிசோதித்த பிறகு பேசிய புல்தானா மாவட்ட சுகாதார அதிகாரியான மருத்துவர் அமோல் கீதே, “முதற்கட்ட விசாரணைக்கு பின், இந்த கிராமங்களில் இருந்து தண்ணீர் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். பொதுவாக, தண்ணீரில் நைட்ரேட் லிட்டருக்கு 10 மி.கி என்ற அளவில் இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் அனுப்பிய தண்ணீரில் லிட்டருக்கு 54 மில்லிகிராம் அதிக அளவில் இருந்தது,” என்று தெரிவித்தார்.
தண்ணீரில் ஈயம்( lead) மற்றும் ஆர்சனிக் உள்ளதா என பரிசோதனைக்காக மாதிரிகளை புனேவுக்கு அனுப்பியுள்ளோம். 8 முதல் 10 நாட்களில் முடிவுகள் கிடைக்கும். தண்ணீரில் அதிக அளவில் ரசாயனங்கள் கலந்திருப்பதால், பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவி வருகிறது.
“முடி உதிர்தலுக்கு என்ன காரணம் என்பதை இப்போது சொல்ல முடியாது. முதற்கட்ட பரிசோதனையில் பூஞ்சை தொற்று காரணமாக இருக்கலாம் என தெரிகிறது. குறிப்பிட்ட கிராமங்களில் மட்டும் தொற்று எவ்வாறு பரவியது என்பதையும் நாங்கள் ஆராய்வோம். தலைமுடி உதிர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் முடி வளர ஆரம்பித்துவிட்டது.” என்று மருத்துவர் கீதே கூறினார்.
“குடிமக்கள் பீதியடைய தேவையில்லை என்று கீதே கூறினார். குறிப்பாக இந்த கிராமங்களில் வசிக்கும் பெண்கள் அதிகம் பயந்தனர். ஆனால் நாங்கள் அவர்களுக்கு இது பெரிய பிரச்னை இல்லை என்று விளக்கியுள்ளோம். இப்பகுதி மக்கள் தண்ணீரை சுத்திகரித்து குடிக்க வேண்டும். அசுத்தமான தண்ணீரை குடிப்பதால் பல நோய்கள் ஏற்படும்.” என்றும் அவர் விவரித்தார்.
கிராமத்தில் சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை
போங்கான் கிராமம் உப்பளம் இருக்கும் பகுதியில் உள்ளது. இதனால் இந்த கிராமத்தில் நன்னீர் இருப்பு குறைந்துள்ளது.
இதுகுறித்து கிராம பஞ்சாயத்து தலைவர் ரமா பாட்டீல் தர்கர் என்பவர் பேசினார்,
“எனது கிராமத்தில் கடந்த 10 நாட்களாக ஒரு விசித்திரமான நோய் பரவி வருகிறது. முதலில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்நோய் தாக்கியது. பிறகு அவரது குடும்பத்தினருக்கும், தற்போது கிராம மக்களுக்கும் பரவியுள்ளது. தலைமுடி வேகமாக உதிர்கிறது”
”இந்நோயால் கிராமத்தில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கிராமத்தில் சுமார் 20 நோயாளிகளுக்கு தலைமுடி முற்றிலும் உதிர்ந்து மொட்டையாகும் நிலை ஏற்பட்டது. முடி உதிர்தல் தொடங்கியவுடன், ஐந்து முதல் ஆறு நாட்களுக்குள் முழுமையாக முடி கொட்டுகிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம்” என்றார்.
“இந்த கிராமத்தில் உப்பு நீர் தான் வருகிறது. கிராமத்தில் சுத்தமான தண்ணீர் இல்லை. அன்றாட பயன்பாட்டுக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் டேங்கர்களுக்கு ஆர்டர் கொடுக்க வேண்டும். உப்புநீரால் பலர் சிறுநீரக நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தர்கர் விளக்கினார்.
ஷேகான் தாலுகாவில் உள்ள ஆறு கிராமங்களில் இந்த பிரச்னை இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, புல்தானா மாவட்ட மருத்துவ அதிகாரி அமோல் கீதே பாதிக்கப்பட்ட சில கிராமங்களை பார்வையிட்டார். முதற்கட்ட ஆய்வில், பூஞ்சை தொற்றினால் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என்றார்.
இந்த கிராமங்களில் மக்கள் மத்தியில் அச்சம் நிலவினாலும், சில நோயாளிகள் பிரச்னை குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். கொரோனா போன்ற வைரஸால் இந்த நோய் பரவுவதாகவும் அல்லது குறிப்பிட்ட நிறுவனத்தின் ஷாம்பூவை பயன்படுத்துவதால் வழுக்கை ஏற்படுவதாகவும் கிராம மக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது. எனினும், அச்சப்பட வேண்டாம் என மருத்துவ அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு