மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ருவன் விஜேவர்தன அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி வருவதால் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் தற்போது கவலைப்படுகின்றனர். அதனால் இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியாக ஐக்கியப்பட்டு, நாட்டு மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்ற தலதா அத்துகோரல இந்த நாட்டின் அரசியலுக்காகவும் எமது கட்சிக்காகவும் பாரிய பணிகளை செய்தவர்.
அதனால் கட்சி என்றகையில் அவர் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதற்காக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
தலதா அத்துகோரளவின் மூத்த சகாேதரர் காமினி அத்துகோரள இந்த கட்சிக்காக பல அர்ப்பணிப்புக்களை செய்த பொதுச் செயலாளராகவே எமது ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.
அவரின் திறமை தலதா அத்துகோரளவுக்கும் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அது மாத்திரமல்ல, ஒட்டுமொத்த ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் அனைவரையும் ஐக்கியப்படுத்திக்கொண்டு நல்லதொரு பயணத்தில் ஐக்கிய தேசிய கட்சியை கொண்டுசெல்லும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
இலங்கையில் தற்போதுள்ள அரசியல் நிலைமைகளை பார்க்கும்போது தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள் இன்று கவலையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி இருக்கிறது. இன்று அவர்கள் கவலைப்படுகின்றனர். தாங்கள் ஏமாற்றமடைந்ததாக இன்னும் சிலர் வருத்தப்படுகிறனர். அதனால் இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியாக ஐக்கியப்பட்டு, நாட்டு மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.