புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு!

by smngrx01

ரஷ்ய ஜனாதிபதியுடன் ஒரு சந்திப்பினை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சந்திப்பு குறித்த திகதி மற்றும் இடம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்பதற்கு முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நவம்பர் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப், ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் உக்ரேனில் போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்தார்.

இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான தீர்வுகளைப் பற்றி விவாதிக்க ட்ரம்புடன் ஒரு சந்திப்பினை கோரியிருந்தார்.

அதற்கு இணங்க இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

2022 பெப்ரவரி முதல் ரஷ்யப் படையெடுப்பின் கீழ் இருக்கும் உக்ரேனில் அமைதியை நிலை நாட்டுவதற்கான பிரச்சார வாக்குறுதிகளை ட்ரம்பின் கருத்துக்கள் வெளிக்காட்டுகின்றன.

எனினும், பதவியேற்கும் ஜனாதிபதி இன்னும் உறுதியான போர்நிறுத்தம் அல்லது சமாதான ஒப்பந்த முன்மொழிவுகளை கோடிட்டுக் காட்டவில்லை.

ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் உக்ரேனுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க இராணுவ உதவியை ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் விமர்சித்தார்.

மேலும், நேட்டோவில் அமெரிக்காவின் தொடர் ஈடுபாடு குறித்து சந்தேகம் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், 2022 பெப்ரவரி முதல் $65 பில்லியனுக்கும் அதிகம் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்கிய வொஷிங்டன், போரின் போது உக்ரேனின் மிகப்பெரிய ஆதரவாளராக இருந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்