கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பால் பக்கற்றில் போதைப்பொருட்கள் ! on Friday, January 10, 2025
கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பால் பக்கற்றிலிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொரள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபரொருவர் சிறைச்சாலைக்குள் பால் பக்கற்று ஒன்றை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் இந்த பால் பக்கற்றை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, இந்த பால் பக்கற்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் மற்றும் புகையிலைகள் என்பன சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.