இலங்கை கடற்பரப்பில் நேற்று புதன்கிழமை (08) இரவு இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி உள்நுழைந்து, மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் – சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர்களது பல மில்லியன் பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
திருவடிநிலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட உள்ளுர் மீனவர்களது வலைகளை, அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் அறுத்து உள்ளன.
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய ரோலர்கள் வலைகளை அறுத்து உள்ளன. தற்போது மீன்பிடி பருவகாலம். இந்திய இழுவை படகுகளின் இவ்வாறான செயற்பாடுகளால் உள்ளுர் மீனவர்கள் பாதிப்படையுட சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
இதனிடையே கடந்த வருடம் நவம்பர் 11ம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி,மீன்பிடியில் ஈடுபட்ட போது கைதான நாகை மாவட்ட மீனவர்களில் படகோட்டிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கைது செய்யும் நடவடிக்கையின் போது கடற்படை உத்தியோகத்தர்களை தாக்கி கடமைக்கு இடையூறு விளைவித்தது, கடற்படை படகை சேதப்படுத்தியது, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 12 பேரும் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர்.
யாழ்.சிறையில் தடுத்து வைக்கப்பட்ட இந்திய மீனவ படகு ஓட்டிக்கு 8 மாத கடூழிய சிறையும் ஏனைய 11 மீனவர்களுக்கு ஆறு மாத கடூழிய சிறைத் தண்டனையை பத்து வருடங்களுக்கு ஒத்தி வைத்து நிபந்தனை அடிப்படையில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். படகு அரசுடமையாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.