திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் வட்டவான் பகுதியில்,திங்களன்று திடீரென தொல்லியல் திணைக்கள அறிவிப்பு பலகை நாள்தோறும் சர்ச்சைகளை தோற்றுவித்துவருகின்றது.
இதனிடையே வட்டவான் தொல்லியல் நிலையம்” என்ற பெயர் பலகைக்கு ஆட்சேபம் தெரிவித்து,வெருகல் பிரதேச செயலகத்தின் முன்பாக இன்று புதன்கிழமை பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
வெருகல் பிரதேசத்தில் திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள வட்டவான் பிரதேசத்திற்கு ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள மலைப்பகுதி திடீர் என தொல்லியல் பகுதியாக பெயரிடப்பட்டிருந்தது.
ஏற்கனவே குறித்த மலைப்பகுதியை சூழவுள்ள 160 ஏக்கர் நிலத்தில்,164 குடும்பங்களை சேர்ந்த விவசாயிகள் நீண்ட காலமாக பயிர்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் தொல்லியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு,பொது மக்களின் விவசாய நிலங்கள் விகாரைகளுக்கு உரியது என்று சர்சைகள் ஏற்படுத்தப்பட்டது.அவ்வாறு இங்கும் தமது விவசாய நிலங்கள் அபகரிக்கப்படலாம் என பிரதேச மக்கள் கருதுகின்றன நிலையிலேயே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.