டிரம்பை எச்சரிக்கும் பிரான்ஸ்: கிரீன்லாந்தை அமெரிக்கா ஆக்கிரமித்தால் ஐரோப்பாவால் தடுக்க முடியுமா?

கிரீன்லாந்து, அமெரிக்கா, டென்மார்க், ஐரோப்பா

பட மூலாதாரம், Reuters

  • எழுதியவர், அலெக்ஸ் தெரியன்
  • பதவி, பிபிசி செய்தி

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை ராணுவ பலத்துடன் ஆக்கிரமிக்க உள்ளதாக கூறிய கருத்தை திரும்பப் பெற மறுத்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் எதிர்வினையாற்றியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் அதன் “இறையாண்மையில்” அத்துமீற மற்ற நாடுகளை அனுமதிக்காது என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

செவ்வாயன்று, டிரம்ப் தன்னாட்சி பெற்ற டேனிஷ் பிரதேசமான கிரீன்லாந்தை வசப்படுத்துவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினார். இது அமெரிக்காவின் தேசிய மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்கு “முக்கியமானது” என்று அவர் குறிப்பிட்டார்.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட், பிரெஞ்சு வானொலியில் பேசுகையில், “ஐரோப்பிய ஒன்றியம் உலகின் பிற நாடுகள் அதன் இறையாண்மையில் அத்துமீறுவதை அனுமதிக்காது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் யாராக இருந்தாலும் அனுமதிக்காது” என்றார்.

பரந்து விரிந்த ஆர்க்டிக் தீவில் அமெரிக்கா படையெடுக்கப் போகிறது என்பதை நம்ப முடியவில்லை என்று பரோட் கூறினார்.

கிரீன்லாந்து, அமெரிக்கா, டென்மார்க், ஐரோப்பா

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டிரம்ப் பலமுறை கிரீன்லாந்தை பெறுவதற்கான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அதிபராக தனது முதல் பதவிக் காலத்திலேயே அவர் இந்த யோசனையை முன்வைத்தார்.

அமெரிக்காவின் நீண்ட கால நட்பு நாடான டென்மார்க், `கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை’ என்றும் `அது தன் குடிமக்களுக்கு சொந்தமானது’ என்றும் தெளிவுபடுத்தியது.

கிரீன்லாந்தின் பிரதமர் மூட் எகெடே, தங்களது பிரதேசம் விற்பனைக்கு இல்லை என்று கூறியுள்ளார். அவர் புதன்கிழமை டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனுக்குச் சென்றிருந்தார். அங்கு இந்த கருத்தை முன்வைத்தார்.

டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ ரெசார்டில் ஒரு செய்தி மாநாட்டில் இதுபற்றி கருத்து தெரிவித்தார்.

கிரீன்லாந்தையோ அல்லது பனாமா கால்வாயையோ கையகப்படுத்துவதற்கு ராணுவம் அல்லது பொருளாதார சக்தியைப் பயன்படுத்துவதாக கூறியதை நிராகரிப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, டிரம்ப் இவ்வாறு பதிலளித்தார்,

“இல்லை, அதனை நிராகரிக்க முடியாது. அவ்வாறு நடக்காது என நான் உங்களுக்கு உறுதியளிக்க முடியாது.” என்றார்.

“ஆனால் நான் ஒன்றை மட்டும் தீர்க்கமாக சொல்ல முடியும், பொருளாதார பாதுகாப்பிற்கு எங்களுக்கு அது தேவை.”என்றும் டிரம்ப் கூறினார்.

கிரீன்லாந்து, அமெரிக்கா, டென்மார்க், ஐரோப்பா

`தக்கன தழைத்தல்’

பனிப்போருக்குப் பிறகு, அமெரிக்க ரேடார் தளத்தின் தாயகமாக கிரீன்லாந்து இருந்து வருகிறது. அமெரிக்காவுக்கு நீண்ட காலமாக மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.

சீனா மற்றும் ரஷ்ய கப்பல்களைக் கண்காணிப்பதற்கான ராணுவ முயற்சிகளுக்கு இந்த தீவு முக்கியம் என்று டிரம்ப் குறிப்பிட்டார். சீனா மற்றும் ரஷ்ய கப்பல்கள் “எல்லா இடங்களிலும்” இருப்பதாக அவர் கூறினார்.

“சுதந்திர உலகத்தைப் பாதுகாப்பதே என் நோக்கம்” என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

பிரான்ஸ் இன்டர் ரேடியோவில் பேசிய பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட், “அமெரிக்கா கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை”

“தக்கன தழைக்கும் (survival of the fittest) என்னும் ஒரு சகாப்தத்தில் நாம் இருக்கிறோம். எனவே, நம்மை பிறர் பயமுறுத்துவதற்கும், கவலையில் மூழ்குவதற்கும் நாம் இடமளிக்கக்கூடாது. நாம் விழித்தெழுந்து, நம்மை பலப்படுத்திக்கொள்ள வேண்டும். நமது பலத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.” என்றார்.

அமெரிக்காவை ஐரோப்பிய யூனியனால் தடுக்க முடியுமா?

டேனிஷ் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் செவ்வாயன்று டேனிஷ் தொலைக்காட்சிக்கு “கிரீன்லாந்து அதன் மக்களுக்கு சொந்தமானது” என்றும் உள்ளூர் மக்களால் மட்டுமே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் என்றும் கூறினார்.

இருப்பினும், நேட்டோ நட்பு நாடான அமெரிக்காவுடன் டென்மார்க்கிற்கு நெருக்கமான ஒத்துழைப்பு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்காவின் எந்தவொரு சாத்தியமான தாக்குதலையும் ஐரோப்பிய ஒன்றியம் எவ்வாறு தடுக்க முடியும் என்பதை கற்பனை செய்வது கடினம். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சொந்த தற்காப்பு திறன்கள் இல்லை என்பதுடன், அதன் 27 உறுப்பு நாடுகளில் பெரும்பாலானவை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

கிரீன்லாந்து, அமெரிக்கா, டென்மார்க், ஐரோப்பா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டொனால்ட் டிரம்பின் மகன் ஜூனியர் செவ்வாய்க்கிழமை கிரீன்லாந்திற்கு பயணம் மேற்கொண்டார்.

கிரீன்லாந்தின் முக்கியத்துவம் என்ன?

கிரீன்லாந்து, உலகின் மிகப்பெரிய தீவாக உள்ளது, ஆனால் அதன் மக்கள் தொகை வெறும் 57,000. அதன் பொருளாதாரம் பெரும்பாலும் கோபன்ஹேகனின் மானியங்களைச் சார்ந்துள்ளது. அது டென்மார்க் ராஜ்ஜீயத்தின் ஒரு பகுதியாக உள்ளது என்றாலும், பரந்த சுயாட்சியைக் கொண்டுள்ளது.

பேட்டரிகள் மற்றும் உயர் தொழில்நுட்ப சாதனங்கள் தயாரிக்கத் தேவையான அரிய கனிம வளங்களின் மிகப்பெரிய கையிருப்பும் இங்கு உள்ளன.

டேனிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனின் மூத்த சர்வதேச நிருபர் ஸ்டெஃபென் கிரெட்ஸ், கிரீன்லாந்தின் தலைநகரான நூக்கில் செய்தி சேகரிப்புப் பணி செய்தார். அவர் உரையாடிய பெரும்பாலான மக்கள், டிரம்பின் கருத்தால் “அதிர்ச்சியடைந்தனர்” என்று கூறினார்.

கிரீன்லாந்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எதிர்காலத்தில் சுதந்திரம் பெறுவார்கள் என்று நம்பிக்கையில் இருந்தாலும், டென்மார்க் இப்போது செய்வதை போல், பொது சேவைகள், பாதுகாப்பு மற்றும் பொருளாதார அடித்தளத்தை வழங்கக் கூடிய ஒரு கூட்டாண்மை நாடு தேவை என்பதை பலர் ஒப்புக்கொண்டனர் என்றும் அவர் கூறினார்.

“கிரீன்லாந்து அமெரிக்காவைப் போன்ற ஒரு வெளி சக்தியின் காலனியாக மாறும் என்று கனவு காணும் யாரும் இங்கு இல்லை.”

டிரம்புடன் சாத்தியமான எந்தவொரு மோதலையும் “தணிக்க” டேனிஷ் அரசாங்கம் முயன்றாலும், “நவீன வரலாற்றில் டென்மார்க்கிற்கு மிகப்பெரிய சர்வதேச நெருக்கடியாக இந்த மோதல் மாறும் சாத்தியம் இருப்பதாக நான் உணர்கிறேன்” என்று கிரெட்ஸ் பிபிசியிடம் கூறினார்.

டொனால்ட் டிரம்பின் மகன் ஜூனியர் டிரம்ப் செவ்வாயன்று கிரீன்லாந்திற்கு பயணம் மேற்கொண்டார். அதை அவர் மக்களுடன் பேசுவதற்கான “தனிப்பட்ட பயணம்” என்று விவரித்தார்.

அந்த பயணத்திற்கு பின்னர், டிரம்ப்புக்கு ஆதரவு கொடுக்கும் தொப்பிகளை அணிந்து ஒரு மதுபான விடுதியில் கிரீன்லாந்தின் ஒரு குழுவினருடன் எடுத்த புகைப்படத்தை அவர் வெளியிட்டார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு