தேர்தல் செலவு அறிக்கை விவகாரம் – பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்பு 2024 பொதுத் தேர்தல் மற்றும் அது தொடர்பான தேர்தல்களில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதன்படி, இதுவரை வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 1042 வேட்பாளர்கள் மற்றும் 197 கட்சி செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழு தலைவர்கள் தொடர்பான விரிவான அறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி / சுயேச்சைக் குழு அல்லது வேட்பாளரின் வருமானம் மற்றும் செலவுகள் தொடர்பான அறிக்கைகள் தேர்தல் முடிவுகள் வௌியாகு 21 நாட்களுக்குள் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
மேற்படி நபர்கள் தொடர்பில், சட்ட மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையில் தேர்தல் தொகுதிகளுக்கு உரித்தான பொலிஸ் பிரிவு, வலய குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி, 31.01.2025 க்கு முன்னர், பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகள் மேற்படி விசாரணைகள் தொடர்பான சாரங்களை தயாரித்து சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்குமாறு, பதில் பொலிஸ்மா அதிபர் ஊடாக அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.