சவால் மிக்க உலக வர்த்தக சந்தையில் வளர்ச்சியடையும் நோக்கில் லைகா (Lyca) குழுமம் அதன் சில வணிக அலகுகளை மறுசீரமைக்கும் பல செயற்திட்டங்களை வெளியிட்டுள்ளது. செலவுகளைக் குறைத்து வளர்ச்சியை நோக்கிச் செல்வது பிரதான இலக்கு என லைகா குழுமம் தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் கையடக்கத் தொலைபேசிகளுக்கான வலைப் பின்னல்களையும் (Mobile Virtual Network Operator – MVNO ) உகாண்டாவில் ஒரு இயங்கு தளத்தையும் (operator) லைகா குழுமம் ஏலவே ஸ்தாபித்திருக்கிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரித்து உள்ளகச் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதுடன் பல்வேறு செயல்முறைகளை தானியங்குபடுத்தவும் லைகா குழுமம் விரும்புகிறது.
தொலைதொடர்பு துறையில் தீவிரமடைந்து வரும் போட்டி மற்றும் அதிகரித்து வரும் செலவுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில், விரிவான மதிப்பாய்வைத் தொடர்ந்து இந்த நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லைகா குழுமம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் ஊடாக சந்தை விரிவாக்க நடவடிக்கையில் சில முதலீடுகளை மேற்கொள்ள லைகா குழுமம் விரும்புகிறது.
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் பிராந்தியங்கள் மற்றும் மையங்களுடனான செயல்பாடுகளை ஆதரிக்க உலகளாவிய வணிக சேவை மையங்களைப் பயன்படுத்த உத்தேசித்துள்ளது. அத்துடன் நாடு சார்ந்த நடவடிக்கைகளில் கணிசமான செயற் திறன்களைக் கொண்டுள்ளதாகவும் லைகா குழுமம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் புதிய சேவைகளுக்கான சந்தையின் வேகத்தை அதிகரிக்கவும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும் லைகா குழுமம் எதிர்பார்கிறது.
கையடக்கத் தொலைபேசிகளுக்கான வலைப் பின்னல் செயல்பாடுகளை மேம்படுத்துவதிலும், ஆப்பிரிக்காவில் புதிய தொலைத் தொடர்பு வலைப் பின்னல் வாய்ப்புகளில் முதலீடு செய்வதிலும் கவனம் அதிகரித்துள்ளதாக லைகா குழுமம் கூறியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் நாடுகளில் புதிய தரமான டிஜிட்டல் வகைகளை அறிமுகப்படுத்துவதுடன், இந்த ஆண்டு வேறு புதிய நாடுகளில் விரிவாக்கத்தை விரைவில் அறிவிக்கவும் லைகா குழுமம் திட்டமிட்டுள்ளது.
“மூலோபாய மறுசீரமைப்பு ஒரு துணிச்சலான முன்னோக்கு” என லைகா குழுமத்தின் உப தலைவர் பிரேமனந்தன் சிவசாமி தெரிவித்தார்.
”இந்த முன்னுதாரண மாற்றம் எங்களின் செயல்திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், வேகமாக மாறிவரும் தொழில்துறைக்கு ஏற்ப எங்களின் திறனை பலப்படுத்துகிறது. உலகளவில் எங்கள் வாடிக்கையாளர்கள், பங்காளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இத்திட்டம் பயனளிக்கிறது.” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வளர்ச்சியை மையமாகக் கொண்ட இந்த மாற்றங்களால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுடன் தற்போது ஆலோசனை நடத்திப்பட்டு வருவதாகவும் லைகா குழுமம் தெரிவித்துள்ளது.