3 புலிகள் பலி: இந்தியாவில் முதன் முறையாக புலிகளுக்கு பறவைக் காய்ச்சல் – மனிதர்களுக்குப் பரவுமா?

ஏவியன் ஃப்ளூ, H5N1 வைரஸ், பறவைக் காய்ச்சல்

பட மூலாதாரம், wildgorewada.com

படக்குறிப்பு, கோரேவாடா விலங்குகள் பூங்காவில் ஏவியன் ஃப்ளூ எனப்படும் பறவை காய்ச்சல் காரணமாக 3 புலிகள் மற்றும் ஒரு சிறுத்தை உயிரிழந்துள்ளன.
  • எழுதியவர், செய்தியாளர்கள் குழு
  • பதவி, பிபிசி மராத்தி

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள பால் தாக்கரே கோரேவாடா விலங்குகள் பூங்காவில் H5N1 வைரஸால் ஏற்படும் ஏவியன் ஃப்ளூ எனப்படும் பறவை காய்ச்சல் காரணமாக 3 புலிகள் மற்றும் ஒரு சிறுத்தை உயிரிழந்துள்ளன.

இது குறித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய அரசின் விலங்குகள் நல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சகம் கோரியுள்ளது.

மேலும், மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து உயிரியல் பூங்காக்கள், விலங்குகள் மீட்பு மையங்கள் போன்றவற்றில் இந்த காய்ச்சலை தடுப்பது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பர் மாத இறுதியில், இந்த புலிகள் மற்றும் சிறுத்தையின் உடல்நிலை மோசமடைந்தது. அதன் பிறகு, அவற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் திடீரென அவற்றின் உடல்நிலை மோசமடைந்து அவை உயிரிழந்தன.

இதன் பிறகு, பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அந்த விலங்குகளுக்கு H5N1 வைரஸ் தொற்று அல்லது ஏவியன் ஃப்ளூ இருப்பதாக கண்டறியப்பட்டது.

இது பறவைக் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த H5N1 வைரஸால் வரும் காய்ச்சல், கோழிகள் மற்றும் பிற பறவைகளைக்கூட பாதிக்கக்கூடும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விலங்குகளுக்கு என்ன ஆயின?

இந்த விவகாரம் குறித்து வனத்துறை அதிகாரி ஷாலிகிராம் பகவத்திடம் பிபிசி மராத்தி செய்திப்பிரிவு தகவல்களை கேட்டறிந்தது. அதன்படி, பால் தாக்கரே கோரேவாடா விலங்குகள் பூங்காவில் பறவைக் காய்ச்சல் காரணமாக 3 புலிகள் மற்றும் ஒரு சிறுத்தை உயிரிழந்துள்ளன என்று அவர் உறுதிப்படுத்தினார்.

“டிசம்பர் மூன்றாவது வாரத்தில், இந்த விலங்குகளுக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரிந்தன. அவற்றுக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது என்று அப்போது உறுதியாக தெரியவில்லை. அந்த அறிகுறிகளின் அடிப்படையில் அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது”, என்று ஷாலிகிராம் பகவத் கூறினார்.

“ஆனால் சிகிச்சையின் போது, 24 மணி நேரத்தில் அவற்றின் உடல்நிலை திடீரென மோசமானது. பின்னர் அவற்றுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வைரஸ் தொற்று ஒன்று ஏற்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டது,” என்று பகவத் கூறினார்.

இந்த விலங்குகள் உயிரிழந்த பிறகு பிரேதப் பரிசோதனைக்காக போபாலில் உள்ள ICAR – நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹை செக்யூரிட்டி அனிமல் டிசீஸ் லபோரடரிக்கு அனுப்பப்பட்டன. அதில் அந்த விலங்குகளுக்கு ஏவியன் ஃப்ளூ அல்லது பறவைக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது என்றும் அவர் கூறினார்.

”இந்தியாவில் புலிகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை”, என்று வனத்துறை அதிகாரி ஷாலிகிராம் பகவத் கூறுகிறார்.

ஏவியன் ஃப்ளூ, H5N1 வைரஸ், பறவைக் காய்ச்சல்

பட மூலாதாரம், wildgorewada.com

படக்குறிப்பு, இந்தியாவில் புலிகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறை.

காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?

“ஆரம்பத்தில் இரண்டு புலிகள் மற்றும் சிறுத்தைகளுக்கு காய்ச்சல், சளி மற்றும் நடப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தன. ஆனால் பின்னர், அவற்றின் உடல்நிலை மோசமடைந்தது”, என்று பகவத் கூறுகிறார்.

இதில் ஒரு புலிக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை. திடீரென 24 மணி நேரத்தில், அந்த புலியின் உடல்நிலை மோசமடைந்தது. அதற்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் அது இறந்ததாகவும் அவர் கூறினார்.

என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

காய்ச்சல் ஏற்பட்டிருந்த போது, அந்த புலிகள் மற்றும் சிறுத்தைகள் உயிரியல் பூங்காவின் தனியாக ஒரு பகுதியில் வைக்கப்பத்திருந்தன. அங்கு மற்ற விலங்குகள் அனுமதிக்கப்படவில்லை. இந்த பகுதியில் தினமும் கிருமிநாசினி கொண்டு சுத்திகரிக்கப்பட்டது.

இந்த பகுதியில் பணிபுரிபவர்கள் உயிரியல் பூங்காவின் மற்ற பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த புலிகள் மற்றும் சிறுத்தைகள் கூண்டிற்குள் பாதுகாப்பாக அடைத்து வைக்கப்பட்டிருந்தன.

இதுபோன்ற அறிகுறிகள் காட்டும் விலங்குகள் மற்றும் பறவைகள் இருந்தால், அது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு உடனே தெரிவிக்குமாறு உயிரியல் பூங்கா பணியாளர்களிடம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் பகவத் தெரிவித்தார்.

ஏவியன் ஃப்ளூ, H5N1 வைரஸ், பறவைக் காய்ச்சல்

பட மூலாதாரம், Getty Images

பறவைக் காய்ச்சல் பற்றிய வழிகாட்டுதல்கள்

கோரேவாடா விலங்குகள் பூங்காவில் உள்ள சில விலங்குகளுக்கு இந்த பறவைக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து, இந்த காய்ச்சல் மேலும் பரவாமல் இருப்பதை தடுக்க சில வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் முக்கியமானது, பறவைக் காய்ச்சலின் அறிகுறிகளைக் காட்டாதவாறு விலங்குகளை தொடர்ந்து கண்காணிக்க உயிரியல் பூங்கா ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு அறிகுறிகள் இருப்பது போல தெரிந்தால், அவற்றை உடனடியாக பரிசோதனைக்கு அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மற்ற விலங்குகள் அல்லது பறவைகளுக்கு இடையே இந்த காய்ச்சல் பரவுவதைத் தடுக்க, விலங்குகளை ஒன்றுக்கொன்று முடிந்தவரை தொலைவில் வைத்திருக்க பூங்கா ஊழியர்கள் முயற்சி செய்ய வேண்டும்.

மற்ற விலங்குகளுக்கு இந்த காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால், அதனை விரைவாக கண்டறிந்து அந்த விலங்கினை தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த காய்ச்சல் பரவுவதைத் தடுக்க விலங்குகளுடன் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் உயிரியல் பூங்காவின் மற்ற ஊழியர்கள் பிபிஇ ஆடை, முகக்கவசம், கையுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த ஊழியர்களில் யாருக்கேனும் காய்ச்சல் அல்லது வேறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பறவைக் காய்ச்சல் தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிகுறிகளை, சுவாச பிரச்னைகளை எப்படி கையாள்வது, விலங்குகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விலங்குகளுக்கு எப்படி உணவு வழங்க வேண்டும் என்பது குறித்த வழிமுறைகளை பின்பற்றவும் அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து கிருமி நீக்கம் செய்வதைத் தவிர, விலங்குகளிடம் புதிதாக வருபவர்களை குறைந்தது மூன்று நாட்களுக்கு தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏவியன் ஃப்ளூ, H5N1 வைரஸ், பறவைக் காய்ச்சல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

பறவைக் காய்ச்சல் என்றால் என்ன?

ஏவியன் ஃப்ளூ அல்லது பறவைக் காய்ச்சல் என்பது H5N1 வைரஸால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் பொதுவாக வாத்துகள், கோழிகள் மற்றும் பிற இடங்களில் இருந்து வரும் பறவைகளில் காணப்படுகிறது. இந்த காய்ச்சல் மற்ற விலங்குகளுக்கு பரவக்கூடும்.

மற்ற இடங்களில் இருந்து வரும் பறவைகளே பெரும்பாலும் இந்த காய்ச்சல் பரவுவதை அதிகரிக்கின்றன. இந்த காய்ச்சல் மற்ற விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கும் பரவலாம்.

இந்த H5N1 வைரஸுக்கு 16 வகையான திரிபுகள் இருக்கின்றன. அதன் ஒரு திரிபே கடந்த சில வருடங்களாக உலகம் முழுவதும் உள்ள விலங்குகளுக்கு பரவி இதுபோன்ற காய்ச்சல் ஏற்பட காரணமாக இருக்கிறது.

வெண்டி பார்க்லே லண்டன் இம்பீரியல் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார் மற்றும் வைரஸ்கள் குறித்து ஆய்வு செய்கிறார். “இது மிகவும் வலிமையான ஒரு வைரஸ். இது பறவைகள் மூலம் வெகுதூரம் வரை சென்று பரவும்”. என்று அவர் கூறினார்.

மனிதர்களுக்கு பரவுமா?

1997 ஆம் ஆண்டு, மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் முதலில் ஏற்பட்டது. இது ஹாங்காங்கில் பறவை சந்தை ஒன்றில் இருந்து பரவத் தொடங்கியது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் அந்த நேரத்தில் இறந்தனர்.

ஆனால் இந்த காய்ச்சல் மனிதர்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது. வைரஸ் இருப்பவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த காய்ச்சல் பரவியதாக கண்டறியப்பட்டுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.