போராட அனுமதி மறுப்பு, கைது: தமிழ்நாட்டில் ஒடுக்குமுறையா? திமுக கூட்டணிக்குள்ளேயே குமுறல்

போராட அனுமதி மறுப்பு, கைது: தமிழ்நாட்டில் ஒடுக்குமுறையா?

பட மூலாதாரம், Social Media

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் அவ்வப்போது எழும் பிரச்னைகள் குறித்து போராட்டங்கள் நடத்தவோ, ஆர்ப்பாட்டங்கள் நடத்தவோ சமீப காலமாக அனுமதி கொடுக்கப்படுவதில்லை என பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் குற்றம் சாட்டுகின்றன. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் ஆளும் தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்துவதுதான் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன நடக்கிறது?

போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு

தமிழ்நாட்டில் கடந்த நான்கைந்து மாதங்களாகவே, அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து போராட அனுமதி கோரினால் அவை கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாக கட்சிகளும், இயக்கங்களும் குற்றம்சாட்டியுள்ளன. குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவத்தில் பல கட்சிகளுக்கும் இதுபோல அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியினர் சீமான் தலைமையில் டிசம்பர் 31ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய போது, அனுமதி மறுக்கப்பட்டது.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியினரையும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் காவல்துறை கைதுசெய்தது. பத்திரிகையாளர்களிடம் கூட பேசவிடாமல் காவல்துறை கைது செய்து அழைத்துச் செல்வதாக சீமான் குற்றம்சாட்டியிருந்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஜனவரி 2ஆம் தேதியன்று இதே பிரச்னைக்காக பா.ம.க மகளிரணி சார்பில் சௌமியா அன்புமணியின் தலைமையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெரும் எண்ணிக்கையில் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். போராட்டத்திற்கு வந்த சௌமியா அன்புமணி உடனடியாக கைது செய்யப்பட்டார். பத்திரிகையாளர்களை சந்திக்க விடாமல் கைதுசெய்வதாக அவரும் குற்றம்சாட்டினார்.

இதேபோல, மதுரையில் பா.ஜ.க சார்பில் நீதி கேட்புப் பேரணி நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். குஷ்பு உள்பட அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதே விவகாரத்திற்காக அ.தி.மு.கவின் மாணவரணிச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் போராட்டம் ஜனவரி ஆறாம் தேதி நடைபெற இருந்தது. அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் போராட்டங்கள், அண்ணா பல்கலைக்கழகம்

படக்குறிப்பு, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் மட்டுமல்ல, வேறு சில பிரச்னைகள் குறித்து ஆர்ப்பாட்டம் நடத்த விரும்பியவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, அதானி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட விவகாரமும் பெரிதாக வெடித்தது. இதுகுறித்து வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஜனவரி 5 ஆம் தேதி நடத்த அறப்போர் இயக்கத்தின் சார்பில் காவல்துறையிடம் டிசம்பர் 10ஆம் தேதியே அனுமதி கோரப்பட்டதாகவும் ஆனால், ஜனவரி 3ஆம் தேதி இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியது. இதனால், தனது அலுவலகத்திலேயே அந்த இயக்கம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

கடந்த டிசம்பர் 17ஆம் தேதி போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தத் தவறியதாக ஆற்காட்டில் பேருந்து நிலையம் அருகில் பா.ம.க. ஆர்ப்பாட்டம் ஒன்றை அறிவித்தது. அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து டிசம்பர் 13ஆம் தேதி போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சியின் சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், அதற்கு மதுரை மாவட்டக் காவல்துறை அனுமதி மறுத்தது.

அதேபோல, சாம்சங் ஊழியர்கள் பிரச்னையின் போது, போராடிய ஊழியர்களுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி போராட்டம் நடத்த சிஐடியூஉள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அனுமதி கோரின. அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை அப்போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டித்தது.

தமிழ்நாட்டில் போராட்டங்கள், அண்ணா பல்கலைக்கழகம்

பட மூலாதாரம், @tncpim

படக்குறிப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டும் முரசொலி விமர்சனமும்

இந்தப் பின்னணியில்தான், விழுப்புரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,” தமிழகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டத்திற்கு நடத்த அனுமதி தர மறுப்பது ஏன்? நான் முதல்வர் ஸ்டாலினை பார்த்து கேட்கிறேன்… தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர பிரகடனம் செய்துவீட்டீர்களா? இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும். சீப்பை மறைத்து வைத்துவிட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்று நினைக்க வேண்டாம்.” என்று தி.மு.க அரசை விமர்சித்திருந்தார். இது கூட்டணிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தும் அளவுக்குச் சென்றது.

அடுத்த நாளே இது தொடர்பாக, முரசொலியில் கே. பாலகிருஷ்ணனைத் தாக்கி கடுமையான கட்டுரை ஒன்று வெளியானது. “‘தமிழகத்தில் அவசர நிலைப் பிரகடனமா?’ என்று கே.பாலகிருஷ்ணன் பேசிய பேச்சுக்கு ‘தினமலர்’ கொடுத்த முக்கியத்துவத்தைப் பார்க்கும் போதே, தி.மு.க. ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போடத் தொடங்கிஇருக்கிறார் கே.பி. என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று அந்தக் கட்டுரை குற்றம் சாட்டியது.

மேலும், “சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி, ‘தமிழ்நாட்டில் மாணவிகளுக்குப் பாதுகாப்பே இல்லை’ என்று ‘ட்ரெண்ட்’ உருவாக்கத் துடிக்கிறார்கள் சிலர். அதற்காகப் போராட்டம் என்ற பெயரால் குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து எதற்காக வக்கீலாக மாறுகிறார் பாலகிருஷ்ணன்? அப்படிக் காட்ட வேண்டியஅவசியம் என்ன வந்தது?” என்றும் முரசொலி கேள்வி எழுப்பியது.

அதானி விவகாரத்தில் போராட அனுமதிப்பதில் என்ன பிரச்னை?

இப்படி கூட்டணிக் கட்சிகளுக்கே போராட அனுமதி மறுப்பது அரசியல் தலைமைக்குத் தெரிந்துதான் நடக்கிறதா எனக் கேள்வியெழுப்புகிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர். மணி.

“இது துரதிர்ஷ்டவசமானது. எடப்பாடி ஆட்சிக் காலத்தில் பல போராட்டங்கள் நடந்தன. ஆனால், இப்போது எல்லாப் போராட்டங்களுக்கும் அனுமதி மறுக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அனுமதி மறுக்கிறார்கள் என்றால், அந்த விவகாரம் அரசுக்கு நெருக்கடியாக மாறும் என்பதால் மறுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அதானி விவகாரத்தில் யாராவது போராட விரும்பினால் அதை அனுமதிப்பதில் என்ன பிரச்னை? இது மிகப் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. அதன் அரசியல் விலை என்ன என்பது தி.மு.கவுக்கு புரிந்திருக்கிறதா என்றே தெரியவில்லை” என்கிறார் மணி.

சமீபத்தில் விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடந்தபோது, அக்கட்சி பேரணி ஒன்றை நடத்த அனுமதி கோரியது. ஆனால், விழுப்புரம் மாவட்ட காவல்துறை அதற்கு அனுமதி மறுத்தது.

“இப்படி ஒரு கூட்டணிக் கட்சி தனது மாநில மாநாட்டை ஒட்டி நடத்தும் பேரணிக்கே அனுமதி மறுப்பது என்றால், அதனை வெறும் காவல்துறை தலைமை மட்டுமே முடிவெடுக்காது. அரசியல் தலைமைதான் முடிவெடுத்திருக்கும். அம்மாதிரி சூழலில் கே. பாலகிருஷ்ணனின் கேள்வி நியாயமானதுதானே? அப்படி அரசுத் தலைமை முடிவெடுக்காமல் காவல்துறைதான் முடிவெடுத்தது என்றால் அது மிக மிக மோசமான விஷயம். அப்படி நடப்பது இந்த அரசுக்கே பாதகமாக முடியும்” என்கிறார் மணி.

தமிழ்நாட்டில் போராட்டங்கள், அண்ணா பல்கலைக்கழகம்

பட மூலாதாரம், @JayaramArappor

படக்குறிப்பு, அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன்

“ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது”

இப்படி போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளையே மறுப்பதாகும் என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன்.

“அரசமைப்புச் சட்டத்தின் 19வது பிரிவின்படி கூடுவது, பேசுவது என்பதெல்லாம் அடிப்படை உரிமை. எங்களுடைய போராட்டத்திற்கு அதிக கூட்டம் வரலாம்; அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சட்டம் – ஒழுங்கும் பாதிக்கப்படலாம் என அனுமதி மறுத்தார்கள். சட்டம் – ஒழுங்கை காரணம் காட்டி போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது என ஏற்கனவே நீதிமன்றம் கூறியிருக்கிறது. இருந்தும் இப்படிச் செய்கிறார்கள். எங்களுக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால், நீதிமன்றத்திற்கும் செல்ல முடியவில்லை. இதுபோல ஜனநாயக உரிமைகளை மறுக்கப்படுவதை அனைவரும் கண்டிக்க வேண்டும்” என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன்.

தமிழ்நாட்டில் போராட்டங்கள், அண்ணா பல்கலைக்கழகம்

படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்

திமுக விளக்கமும் எதிர் கேள்வியும்

ஆனால், இந்தக் கூற்றுகளை எல்லாம் மறுக்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன். “நாம் ஒரு போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த வேண்டும் என்றால் குறைந்தது 7 நாட்களுக்கு முன்பாக அனுமதி கோர வேண்டும். நடத்தவிருக்கும் இடம், எவ்வளவு பேர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்பது போன்ற எல்லாத் தகவல்களையும் தர வேண்டும். ஆனால், அரசியலைப் பொருத்தவரை, ஒரு விஷயம் வெளியாகும்போது போராட்டம் நடத்த ஏழு நாட்கள் காத்திருக்க முடியாது. இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். தி.மு.கவும் அடுத்த நாளே போராட்டம் நடத்த விரும்பும். கடந்த ஆட்சியில் எங்களுக்கும் அனுமதி தரவில்லை. கொடுக்கவும் முடியாது. நாங்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவோம், கைதுசெய்து விடுவிப்பார்கள். இது வழக்கமான நடைமுறைதானே” என்கிறார் அவர்.

ஆனால், “நாளை ஆளுநரைக் கண்டித்து தி.மு.க. போராட்டம் நடத்தப் போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது. போராட்டம் நடத்துவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் என காவல் துறை சொல்கிறது. ஆனால், நாளை போராட்டத்தை இன்று எப்படி தி.மு.க. அறிவிக்கிறது?” எனக் கேள்வி எழுப்புகிறார் ஜெயராமன்.

கூட்டணிக் கட்சியின் போராட்டங்களுக்கே அனுமதி தரவில்லையென்றால் எதிர்க்கட்சிகளின் நிலை என்ன எனக் கேள்வி எழுப்புகிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

தமிழ்நாட்டில் போராட்டங்கள், அண்ணா பல்கலைக்கழகம்

படக்குறிப்பு, தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன்

“பொள்ளாச்சி விவகாரத்தில் தி.மு.க. எவ்வளவு போராட்டங்களை நடத்தியது. இப்படி போராட்டங்களை ஒடுக்கினால் அது நெருக்கடியாகத்தான் முடியும். கூட்டணிக் கட்சியே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்த ஆரம்பித்திருக்கிறது என்றால், எதிர்க்கட்சிகளின் நிலை என்ன? போராட்டங்களை எதிர்கொள்ள தயாரில்லை என்றால் ஆட்சியிலேயே இருக்க முடியாது. இதையெல்லாம்விட மோசம், தொல்லியல் துறை நடத்தும் நிகழ்ச்சியில் கறுப்பு உடை அணிந்து வரக்கூடாது என்பது. இதையெல்லாம் யார் முடிவெடுக்கிறார்கள், என்றே தெரியவில்லை” என்கிறார் குபேந்திரன்.

ஆனால், தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்கும் போதே, தங்கள் கட்சியின் இளைஞரணி மாநாட்டையே பல முறை இடமாற்றம் செய்ய வேண்டியிருந்தது என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

“நாங்கள் இளைஞரணி மாநாட்டிற்கு முதலில் சங்ககிரியில் ஒரு இடத்தைத் தேர்வுசெய்தோம். அதனை காவல் துறை ஏற்கவில்லை. பிறகு நகரத்திற்குள் ஒரு இடத்தைச் சொன்னோம். அதற்கும் அனுமதி தரவில்லை. பிறகு அயோத்தியாபட்டணம் தாண்டி ஒரு இடத்தைத் தேர்வுசெய்தோம். பிறகுதான் அனுமதி அளித்தார்கள். ஆகவே, காவல்துறை ஆளுங்கட்சிக்கே அனுமதி மறுத்தது எனச் சொல்ல முடியுமா? எல்லாவற்றையும் பார்த்துத்தான் அனுமதி அளிப்பார்கள். புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் இதைப் பேசினால் புரிந்துகொள்ள முடியும். பல காலம் அரசியல் கட்சியில் செயல்பட்டவர்கள் இப்படியெல்லாம் குற்றம்சாட்டுவது விந்தையாக இருக்கிறது” என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.