மாலத்தீவில் முய்சு அரசைக் கவிழ்க்க இந்தியா ரகசிய முயற்சியா?
மாலத்தீவில் முய்சு அரசைக் கவிழ்க்க இந்தியா ரகசிய முயற்சியா?
அமெரிக்க செய்தித்தாளான வாஷிங்டன் போஸ்டில் இந்தியா மாலத்தீவு விவகாரம் தொடர்பாக அண்மையில் வெளியான ஒரு செய்தி இரு நாடுகளிலும் பேசுபொருளாகி உள்ளது. அந்த செய்தியில் இருந்த குற்றச்சாட்டுகளை இந்தியா முற்றிலும் மறுக்கிறது. என்ன நடந்தது?
2024 டிசம்பர் 30ஆம் தேதி வாஷிங்டன் போஸ்டில் ஒரு செய்தி வெளியானது. அதில் இந்தியாவுக்கு ஆதரவானவராக பார்க்கப்படும் இப்ராகிம் சோலிஹ்கை மாலத்தீவு அதிபராக்க மோதி அரசு முயற்சித்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், இப்ராஹிம் சோலிஹ் தேர்தலில் தோல்வியடைந்தபோது இந்தியாவின் உளவு அமைப்பான RAW மாலத்தீவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தற்போதைய அதிபர் முகமது முய்சுவை நீக்குவது குறித்து விவாதித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்த செய்தியில், ‘Democratic Renewal Initiative’ என்ற ஒரு ஆவணம் தங்களுக்கு கிடைத்ததாகவும், அதில் முய்சுவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை கொண்டுவரக் கோரி 40 எம்.பி.க்களுக்கு எதிர்க்கட்சியினர் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த சதிக்காக ரூ.6 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை இந்தியாவிடம் பெற முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பல மாத ரகசிய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இந்தியா முயற்சியைத் தொடரவில்லை அல்லது நிதியளிக்கவில்லை என அந்த செய்தி கூறுகிறது.
இந்த செய்தி பேசுபொருளான நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
“அந்த செய்தித்தாளும் ஊடகமும் இந்தியா மீது விரோதத்தை காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பது போல தெரிகிறது. அவர்களது செயல்களில் தொடர்ந்து இதை நீங்கள் பார்க்கலாம். அவர்கள் நம்பகத்தன்மையை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள். எங்களைப் பொறுத்தவரை அவர்கள் ஒன்றும் இல்லை.” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நசீத், அதிபருக்கு எதிரான எந்தவொரு தீவிர சதியும் எனக்கு தெரியாது. மாலத்தீவின் ஜனநாயகத்தை இந்தியா ஆதரிப்பதால், அத்தகைய நடவடிக்கையை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது. இந்தியா எங்களுக்கு ஒருபோதும் நிபந்தனைகளை விதித்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.
முழு விவரம் காணொளியில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு