அஜ்மீர் தர்காவுக்கு சால்வை வழங்கிய பிரதமர் மோதி: இந்து சேனா எதிர்ப்பது ஏன்?

அஜ்மீர் தர்கா, ராஜஸ்தான், நரேந்திர மோதி, கிரன் ரிஜிஜூ

பட மூலாதாரம், ANI

இந்திய பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை அன்று, ராஜஸ்தானின் அஜ்மீர் ஷரீஃபில் அமைந்திருக்கும் குவாஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவுக்கு சால்வை ஒன்றை அனுப்பியுள்ளார்.

உருஸ் நாளின்போது இந்த சால்வை புனித தலத்தில் பயன்படுத்தப்படும். இந்தியாவில் பிரதமர்களாக பணியாற்றிய அனைவரும் இந்த புனித தலத்துக்கு சால்வை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

உருஸ் தினம் என்பது, ஒருவருடைய நினைவு தினத்தைக் குறிக்கிறது.

மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஜனவரி 4ம் தேதி அன்று அஜ்மீருக்கு செல்ல உள்ளார். அங்கே, மோதி வழங்கிய சால்வையை அந்த புனிதத் தலத்தில் வழங்க உள்ளார்.

அஜ்மீர் தர்காவின் தலைவர் நசிருதீன் சிஸ்டி இது தொடர்பாக பேசியபோது, கடந்த ஐந்து மாதங்களாக கோவில்கள் மற்றும் மசூதிகள் தொடர்பாக பிரச்னைகளை ஏற்படுத்தியவர்களுக்கு, மோதி இந்த சால்வையை வழங்கி சரியான பதில் அளித்துள்ளார் என்று கூறியுள்ளார். மேலும், அரசு, இந்த நாகரீகம் மற்றும் கலாசாரத்தின் மரியாதையை தொடர்ச்சியாக அளித்து வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

நசிருதீனின் இந்த கருத்து, இந்து சேனாவின் செயலுக்கு அளித்த பதிலாக பார்க்கப்படுகிறது. இந்து சேனாவின் தேசிய தலைவர் விஷ்ணு குப்தா, தர்கா தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார். அதில், குவாஜா மொய்னுதீன் சிஸ்டி தர்கா, சிவன் கோவிலின் மீது கட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார். அஜ்மீர் நீதிமன்றம் அந்த வழக்கை விசாரிக்க கடந்த நவம்பர் மாதம் ஒப்புக்கொண்டது.

மோதி இந்த சால்வையை வழங்குவது தொடர்பாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, இந்து சேனாவின் தேசியத் தலைவர் விஷ்ணு குப்தா, நீதிமன்றத்தில் இவ்வழக்கு முடிவுக்கு வரும் வரை, இந்த சால்வையை வழங்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இருப்பினும், உச்ச நீதிமன்றம் இதுதொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள தடை விதித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி அரசின் அமைச்சருமான சௌரப் பரத்வாஜ் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “பாஜக மாறிவிட்டதா? இதற்கு முன்பாக , டெல்லியில் வசிக்கும் இமாம்களுக்கு மாத சம்பளம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தற்போது அவர்கள் தர்காவுக்கு சால்வை வழங்குகின்றனர்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமையின் வெளிப்பாடு

செவ்வாய் அன்று நரேந்திர மோதி, உருஸ் நாளுக்கான வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார். அதனோடு, பாரம்பரியமான அந்த சால்வையை கிரண் ரிஜிஜூவிடம் கொடுத்து அதனை அஜ்மீர் தர்காவுக்கு வழங்குமாறு தெரிவித்தார். மோதியின் பெயரில் அந்த சால்வை வழங்கப்படும். மோதி அந்த சால்வையை ரிஜிஜூ மற்றும் பாஜக சிறுபான்மையின அணியின் தலைவர் ஜமால் சித்திக் ஆகியோருக்கு வழங்கினார்.

அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்த ரிஜிஜூ, “இந்தியாவின் சிறந்த ஆன்மீக பாரம்பரியம் மற்றும் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் மத நல்லிணக்கத்தின் மீதான ஆழமான மரியாதையை இந்த நிகழ்வு வெளிப்படுத்துகிறது” என்று கூறினார்.

“2014-ம் ஆண்டு முதல், மோதி அஜ்மீர் தர்காவுக்கு தொடர்ச்சியாக சால்வை வழங்கி வருகிறார். அமைதி, நல்லிணக்கம் மற்றும் நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பதற்கான செய்தியை இதன் மூலம் தெரிவிக்கிறார்,” என்று பாஜக தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

அதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்தார் அஜ்மீர் தர்காவின் தலைவர் நசிருதீன் சிஸ்டி. மேற்கொண்டு பேசிய அவர், “கடந்த 5 மாதங்களாக கோவில்கள் மற்றும் மசூதிகளை வைத்து மத ரீதியான பிரச்னைகளை உருவாக்க நினைத்த அனைவருக்கும் இது சரியான பதில். மோதி முழு பக்தியோடு தர்காவுக்கு செய்தி அனுப்புவார். இந்த நாட்டுக்கு அமைதியே தேவை, கோவில்கள் மற்றும் மசூதி தொடர்பான பிரச்னைகள் இல்லை,” என்றும் அவர் கூறினார்.

“இதை நாங்கள் வரவேற்கின்றோம். இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து, பிரதமர்கள் இங்கே சால்வையை வழங்குகின்றனர். நரேந்திர மோதியும் இதே பழக்கத்தை பின்பற்றுகிறார். இதுமட்டுமின்றி, அவர் இந்த நாட்டின் கலாசாரம் மற்றும் நாகரீகத்தை மதிக்கிறார். ஒவ்வொரு மதத்தையும் மதிக்க வேண்டும் என்பதையே இந்திய கலாசாரம் வலியுறுத்துகிறது,” என்றும் அவர் கூறினார்.

அஜ்மீர் தர்காவில் செயல்பட்டு வரும் காதிம் மற்றும் சிஸ்தி அறக்கட்டளையின் தலைவர் ஹாஜி சல்மான் சிஸ்டி, “மோதியின் இந்த செயலை வரவேற்றுள்ளார். மேலும், மோதி அனுப்பிய அந்த சால்வை அன்பு, பாசம் மற்றும் 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமைக்கான அன்பளிப்பு,” என்று கூறினார்.

அஜ்மீர் தர்கா, ராஜஸ்தான், நரேந்திர மோதி, கிரன் ரிஜிஜூ

பட மூலாதாரம், @KirenRijiju/x

படக்குறிப்பு, இந்தியாவின் சிறந்த ஆன்மீக பாரம்பரியம் மற்றும் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் மத நல்லிணக்கத்தின் மீதான ஆழமான மரியாதையை இந்த நிகழ்வு வெளிப்படுத்துகிறது

இந்து சேனா ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது?

அஜ்மீர் தர்கா, சிவன் கோவில் ஒன்றின் மீது கட்டி எழுப்பப்பட்டது என்று இந்து சேனாவின் தலைவர் விஷ்ணு குப்தா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்திற்கு அவர் அனுப்பிய கடிதத்தில், தான் அனுப்பிய மனு மீதான விசாரணை அஜ்மீர் மேற்கு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும், “தர்கா தற்போது அமைந்துள்ள இடத்தில், ஒரு பழமையான சிவன் கோவில் இருந்ததற்கான ஆதாரங்களோடு நான் மனுவை தாக்கல் செய்துள்ளேன். அந்த கோவில் சௌஹான் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்திய தொல்லியல் துறை அதிகாரிகளை வைத்து அஜ்மீர் தர்காவில் சர்ச்சைக்குரிய இடத்தில் அறிவியல் பூர்வ ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளேன்,” என்று குறிப்பிட்டார்.

“இந்த சால்வையை எவர் அனுப்பினாலும் எனக்கு பிரச்னை இல்லை. ஆனால், ஒரு அரசியலமைப்பின் அங்கமாக இருக்கும் பதவியில் இருந்து ஒரு சால்வை வருகிறது என்றால், அது என்னுடைய வழக்கின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, அங்கே சால்வை அனுப்புவதற்கு தடை செய்ய வேண்டும்.

அதனால் தான் நான் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதுகிறேன். மோதி தனிப்பட்ட முறையில் சால்வை வழங்கியிருந்தால் எனக்கு பிரச்னை இல்லை. ஆனால், பிரதமர் பதவியில் இருந்துகொண்டு அதனை வழங்கும்போது அது நிச்சயமாக என்னுடைய வழக்கின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் கடந்த ஆண்டு அஜ்மீரில் உள்ள நீதிமன்றம் இந்து சேனாவின் வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்டது. இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. நவம்பர் 27ம் தேதி அன்று, மன்மோகன் சந்தேல் தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அப்போது, சிறுபான்மை நலத்துறை, தர்கா கமிட்டி, இந்திய தொல்லியல் துறை அலுவலகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

மூன்று முக்கிய அம்சங்களின் அடிப்படைகளில் அங்கே கோவில் இருந்தது என்று நம்புவதாக விஷ்ணு குப்தா கூறுகிறார். அதில் ஓய்வு பெற்ற நீதிபதி ஹர்பிலாஸ் சர்தாவின் புத்தகமும் அடங்கும். மேலும், விஷ்ணு குப்தா அங்கே இந்து முறைப்படி பூஜைகள் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால், இந்து சேனாவின் மனு குறித்து விமர்சிக்கிறார், மொய்னுதீனின் வழித்தோன்றலும், அஜ்மீர் தர்காவின் தலைமை வாரிசுமான சயீத் நசிருதீன்.

அஜ்மீர் தர்கா, ராஜஸ்தான், நரேந்திர மோதி, கிரன் ரிஜிஜூ

பட மூலாதாரம், @HinduSenaOrg

படக்குறிப்பு, அஜ்மீர் தர்கா, சிவன் கோவில் ஒன்றின் மீது கட்டி எழுப்பப்பட்டது என்று இந்து சேனாவின் தலைவர் விஷ்ணு குப்தா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

தர்காவின் வரலாறு

குவாஜா எனப்படும் கரீப் நவாஸ் 1142ம் ஆண்டு பிறந்தார். அவர் குவாஜா உஸ்மான் ஹரூணி என்ற புகழ்பெற்ற ஞானியின் சீடராவார். முதலில் லாகூர் வந்த அவர், பிறகு அஜ்மீருக்கு 1192ம் ஆண்டு சென்றார்.

அதற்கு முன்பு பாக்தாத், ஹேரத் உள்ளிட்ட பெரிய நகரங்களில் பல தத்துவஞானிகளை அவர் சந்தித்திருக்கிறார்.

இந்தியாவில் இஸ்லாமியர்களின் ஆட்சியின் தொடக்கக் காலத்தில், தாரைன் போருக்குப் பிறகு அவர் அஜ்மீரை அடைந்தார். குதுப்தீன் ஐபக், இல்துமிஷ், அரம்ஷா, ருக்னுதீன் ஃபிரோஸ் மற்றும் ரசியா சுல்தானா போன்றோர்கள் வாழ்ந்த காலம் அது.

அஜ்மீர் தர்கா, ராஜஸ்தான், நரேந்திர மோதி, கிரன் ரிஜிஜூ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல நாட்களாக குவாஜா வெறும் ரொட்டிகளை மட்டுமே உண்டு உயிர்வாழ்ந்து வந்தார், ஆனால் பசியுடன் வருபவர்களுக்கு லாங்கர் எனப்படும் அன்னதானம் வழங்கும் போக்கைக் கொண்டிருந்தார்

குவாஜா குறித்து கேள்விப்பட்ட இல்துமிஷ், ரசியா சுல்தானா ஆகியோர் அவரை காண வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

எந்த ஒரு அடக்குமுறையையும் அமைதியாக இருப்பதன் மூலம் எதிர்க்க இயலும் என்று அவர் அடிக்கடி கூறுவதுண்டு.

பிரபல சமூக சீர்திருத்தவாதியும், ஆர்ய சமாஜை பின்பற்றுபவருமான ஹர்விலாஸ் சர்தா இதுகுறித்து, ‘அஜ்மீர்: ஹிஸ்டாரிக்கல் அண்ட் டிஸ்கிரிப்டிவ்’ என்ற புத்தகத்தில் அஜ்மீரின் வரலாற்று வெற்றியாக இந்த தர்காவை கூறுகிறார். மேலும், குவாஜா அணிந்த ஆடை குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார். அலங்காரங்கள் நிறைந்த அங்கர்கா என்ற மேலாடையையும், இரண்டு துணிகளை சேர்த்து தைத்த துத்தாய் என்ற கீழ் அங்கியையும் அவர் அணிந்திருந்தார் என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த புத்தகத்தில், “பல நாட்களாக குவாஜா வெறும் ரொட்டிகளை மட்டுமே உண்டு உயிர்வாழ்ந்து வந்தார், ஆனால் பசியுடன் வருபவர்களுக்கு லாங்கர் எனப்படும் அன்னதானம் வழங்கும் போக்கைக் கொண்டிருந்தார்,” என்றும் கூறியுள்ளார். முன்பின் தெரியாத நபர்கள் மற்றும் ஏழைகளுக்கு அவர் அளிக்கும் விருந்தோம்பல் குறித்து பல கதைகள் உள்ளன.

1236ம் ஆண்டு குவாஜா உயிரிழந்தார். பிறகு அவருடைய பெயர் நாடு முழுவதும் பிரபலமடைந்தது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.