கன்னரதேவன்: போரில் சோழ இளவரசனை வீழ்த்திய ராஷ்டிரகூட மன்னர் – கல்வெட்டு தரும் சுவாரஸ்ய தகவல்கள்
- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ராஷ்டிரகூட மன்னர் மூன்றாம் கிருஷ்ணன் எனப்படும் கன்னரதேவனின் கல்வெட்டு ஒன்று, கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கடலூர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கல்வெட்டு சொல்லும் புதிய செய்தி என்ன?
கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே உள்ள எஸ். நரையூர் கிராமத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள முற்றிலும் சிதிலம் அடைந்த சிவன் கோவிலில் சில வாரங்களுக்கு முன்பாக புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சிதிலமைடந்து கிடந்த இந்த சிவன் கோவிலைப் புதுப்பிக்க சில வாரங்களுக்கு முன்பாக கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். கடந்த மாதம் அதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளனர். அப்பொழுது, அங்கு சில கல்வெட்டுகள் இருந்ததை உள்ளூர் மக்கள் பார்த்தனர்.
இந்தக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி கிடைத்ததும் அங்கு சென்ற விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ் உள்ளிட்டோர் அதனைப் படித்தனர்.
இதுவரை ஆய்வு செய்யப்படாத ஆறு கல்வெட்டுகள்
இந்தக் கோவிலில் ஆறு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டதாகக் குறிப்பிடும் பேராசிரியர் ரமேஷ், அவை இதுவரை படிக்கப்படாத புதிய கல்வெட்டுகள் என்கிறார்.
இந்தக் கோவிலின் மூலவரின் பெயர் பிரஹமீஸ்வரமுடையார் அல்லது பிரஹமீஸ்வரமுடைய நாயனார் என்றும் அம்பாளின் பெயர் ‘தாயிலும் நல்ல நாயகியார்’ என்றும் வருகிறது என்று குறிப்பிடுகிறார் ரமேஷ். இங்கு கிடைத்த கல்வெட்டுகளில் ஒன்று, ராஷ்டிரகூட மன்னர் கன்னரதேவனின் கல்வெட்டு எனத் தெரிவித்தார்.
“ஸ்வஸ்தி ஸ்ரீ கச்சியுந் தஞ்சையும் கொண்ட ஸ்ரீ கண்ணர தேவர்க்கு யாண்டு பதிமூன்றாவது மிலாட்டு கூற்றத்து நரையூருந்து வாழும் கங்க பள்ள சதனென் புத் தரை யடுத்து ப்ரஹமீஸ்வரமுடையார்க்கு வைத்து நொந்தா விளக்கு ஒன்று இது இறக்குவான் ஏழானூழியும் மறுபன் இது பன்மஹெஸ்வரரக்ஷை” என்கிறது அந்தக் கல்வெட்டு.
வரலாற்றில் ராஷ்டிரகூட மன்னர் மூன்றாம் கிருஷ்ணரே கன்னரதேவன் எனக் குறிப்பிடப்படுகிறார். ஆகவே, இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி. 949 முதல் 967ஆக இருக்கலாம் என்று குறிப்பிடும் ரமேஷ், கி.பி. 949ல் நடந்த தக்கோலப் போருக்குப் பிறகு இந்த பகுதி ராஷ்டிரகூடர் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது என்பதற்கு இந்தக் கல்வெட்டு மேலும் ஒரு முக்கிய ஆதாரம் என்கிறார்.
ராஷ்டிரகூடர்களின் ஆட்சி
முதல் பராந்தகச் சோழனின் ஆட்சிக் காலத்தில் வடக்கில் திருக்காளகஸ்தி முதல் தொண்டை மண்டலம் வரை சோழர் ஆட்சி பரவி இருந்தது என்ற போதிலும் தக்கோலப் போருக்குப் பிறகு ராஷ்டிரகூடர்களின் ஆட்சி நடு நாடு முழுவதும் பரவியது.
கி.பி. 949க்கும் கி.பி. 967க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கன்னரதேவன் என்று அழைக்கப்பட்ட இந்த மூன்றாம் கிருஷ்ணன் சோழர் நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றினார். தக்கோலப் போரில் சோழ இளவரசர் ராஜாதித்தனை வீழ்த்திய கன்னரதேவன் தொடர்ந்து சோழர்களின் எல்லைப் பரப்பை சுருங்கச் செய்தார்.
“இதுவரை திருவதிகை வீரட்டானம் கோவிலுக்குத் தெற்கே கன்னரதேவன் பற்றிய கல்வெட்டானது அறியப்படவில்லை. ஆனால், தற்போது இந்தக் கல்வெட்டு கிடைத்திருக்கிறது. இந்தக் கல்வெட்டின் மூலம் எஸ். நரையூர் வரை கன்னரதேவனின் ஆட்சி நீண்டுள்ளதை அறியலாம். பிறகு மீண்டும் சோழர்கள் வசம் இந்த பகுதி வந்தது என்பதை இங்கு கிடைக்கும் பிற கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன” என்கிறார் ரமேஷ்.
இதே கோவிலில் கிடைக்கும் உத்தம சோழன் கால கல்வெட்டு நிலம் தானம் வழங்கப்பட்ட செய்தியை தெரிவிக்கிறது. உத்தமசோழனின் ஒன்பதாம் ஆட்சி ஆண்டில் நிலம் தானம் வழங்கப்பட்டது பற்றி தெரிவிக்கும் அந்தக் கல்வெட்டு “(உத்தம சோ)ழரைத் திருவயிரு வாய்த்த செம்பியன் மஹாதேவியார்” என்று தொடங்குகிறது.
விளக்கு எரிக்க தானம்
இங்குள்ள ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டு குறித்தும் விளக்கினார் ரமேஷ். ராஜராஜசோழன் காலத்தில் சண்டையில் இறந்த வணிகக் குழுவின் வீரன் நினைவாக விளக்கு எரிக்க தானம் வழங்கப்பட்ட செய்தியை அந்தக் கல்வெட்டு அளிக்கிறது.
“காந்தளூர் சாலை கலமறுத்த கோ ராசகேசரி பந்மர்க்கு….” என்று தொடங்கும் இந்தக் கல்வெட்டு ராஜராஜசோழரின் பத்தாவது ஆட்சியாண்டில் ஐந்நூற்றுவர் வணிகக் குழுவைச் சேரந்த வீர செட்டி என்பவர் ‘பூசலில் பட்டதுக்கு நரையூர் பிரமீஸ்வரமுடையார் நொந்தா விளக்கு எரிக்க 10 கழஞ்சு பொன் குடுத்த பிரம்மதேயத்துக்கு நிலம்விட்ட’ செய்தியை சொல்கிறது” என்கிறார் ரமேஷ்.
இதே கோவிலில் மூன்றாம் ராஜேந்திர சோழன் கால கல்வெட்டு ஒன்றும் இருக்கிறது. “இங்குள்ள அவரது 25ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டில், ‘தொழுவூருடையான் மாதுயாந்தித்தன் எழுந்தருளி வித்த திருக்காமக் கொட்டமுடைய தாயிலுந் நல்ல நாயகி” என்று அம்பாளுக்கு சந்நிதி எழுப்பியது பற்றிய செய்தியும் இறையிலியாக நிலம்விட்ட செய்தியும் இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.
இங்கு கிடைக்கும் மற்றொரு கல்வெட்டு 17 அல்லது 18ம் நூற்றாண்டைச் சார்ந்தது. அதில் “அதிருங்கழல் பெருமாள் கண்ட திருப்பணி இடிஞ்சு சரிஞ்சு போகையில் மகன் சொக்கப்பெருமாள் சேதிராயன் கண்ட திருப்பணி” என, அந்தக் கோவிலுக்கு தந்தை செய்த திருப்பணி இடிந்து போகவே அதனை மகன் புதுப்பித்ததைக் கூறுகிறது என்கிறார் ரமேஷ்.
மிகப்பெரிய வேலைப்பாடுடன் கூடிய அந்தச் சிவன் கோவில் இடிந்து, சிதைந்துபோன நிலையில் இருந்துவந்தது. சில தூண்கள் மட்டுமே கோவில் மேற்கூரையைத் தாங்கிக் கண்டிருந்தன. தற்போது சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மிகுந்த சிதிலமடைந்த நிலையில் இந்த கோவில் தற்போது இருந்தாலும் வரலாற்றில் மிக முக்கியமான செய்திகளை தந்துள்ளது எனக் குறிப்பிடும் ரமேஷ், இதன் அருகில் உள்ள கிராமப் பகுதிகளில் மேலும் சில கல்வெட்டுகள் இருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.