நேற்று சண்டை இன்று சமாதானம்? ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு; என்ன நடந்தது?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
-
விழுப்புரத்தில் உள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்து பேசினார்.
பாமக இளைஞர் அணி தலைவர் நியமனம் குறித்த விவகாரத்தில் நேற்று (டிசம்பர் 28) ராமதாஸ் – அன்புமணி ஆகியோருக்கு இடையே பொதுக்குழுவில் மோதல் ஏற்பட்ட நிலையில், இன்று இருவரும் சந்தித்து பேசிக்கொண்டனர்
“எங்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி. அப்படிப்பட்ட ஒரு கட்சியின் பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்கள் நடப்பது இயல்புதான்”, என்று செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி தெரிவித்தார்.
மேலும் இளைஞர் அணி தலைவர் நியமனம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், “உட்கட்சி பிரச்னைகள் பற்றி மற்றவர்கள் எதுவும் பேசத் தேவையில்லை, அவற்றை நாங்களே (கட்சியினரே) பேசிக்கொள்வோம்”, என்றார்.
பாமக பொதுக்குழுவில் என்ன நடந்தது?
விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமையன்று (டிசம்பர் 28) நடைபெற்றது.
பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி, கௌரவ தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பொதுக்குழு கூட்டத்தின் தொடக்கத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் பிறகு கட்சியின் வளர்ச்சி குறித்து ராமதாஸ் பேசினார்.
பிறகு, கட்சியின் இளைஞர் அணித் தலைவராக இன்று முதல் முகுந்தன் பரசுமரான் நியமிக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார். “மருத்துவர் அன்புமணிக்கு உதவியாக முகுந்தன் செயல்படுவார்” எனவும் ராமதாஸ் அறிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்துப் பேசுவதற்காக கௌரவ தலைவர் கோ.க.மணி மைக்கை கையில் எடுத்தார்.
அவரிடம் இருந்து மைக்கை வாங்கிய அன்புமணி, “கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. அவருக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியா… என்ன அனுபவம் இருக்கிறது, கட்சியில் அனுபவம் வாய்ந்தவர்களுக்குப் பதவி கொடுங்கள்” என்று தெரிவித்தார்.
பாமக மீது குடும்பக் கட்சி என்ற விமர்சனம் இருப்பதாகவும் அன்புமணி கூறினார். இதனால் கோபம் அடைந்த மருத்துவர் ராமதாஸ், “கட்சியில் யாராக இருந்தாலும் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்காவிட்டால் இந்தக் கட்சியில் யாரும் இருக்க முடியாது” எனப் பதில் கொடுத்தார்.
“இது நான் உருவாக்கிய கட்சி” என ராமதாஸ் கோபத்தை வெளிப்படுத்த, அதற்கு அன்புமணி, “சரி” என்று மட்டும் பதில் அளித்தார். இதனால் மேலும் கோபம் அடைந்த ராமதாஸ், “மீண்டும் சொல்கிறேன். மாநில இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்படுகிறார்” என்றார்.
வெளியேறிய அன்புமணி
அப்போது தன் கையில் இருந்த மைக்கை அன்புமணி கீழே வைத்தார். மீண்டும் அதை எடுத்துப் பேசிய அவர், “பனையூரில் அலுவலகம் ஒன்றை திறந்துள்ளேன். அங்கு என்னைத் தொண்டர்கள் சந்திக்கலாம்” எனக் கூறிவிட்டு செல்போன் எண்ணைப் பகிர்ந்தார்.
அப்போதே, “முகுந்தன் பதவியை யாராலும் மாற்ற முடியாது. அதில் விருப்பம் இல்லையென்றால்” என ராமதாஸ் கூட்டத்தைப் பார்த்துக் கேட்க, “கட்சியை விட்டுப் போகலாம்” என நிர்வாகிகள் தரப்பில் ஒரு சாராரிடம் இருந்து பதில் வந்துள்ளது.
தொடர்ந்து, “நான் தொடங்கிய கட்சி இது. நான் சொல்வதைத் தான் செய்ய வேண்டும். இதில் விருப்பம் இல்லாதவர்கள் விலகிக் கொள்ளலாம்” என ராமதாஸ் கூறினார். சிறிது நேரத்தில் அந்த இடத்தில் இருந்து அன்புமணி வெளியேறினார்.
முகுந்தன் பரசுராமன் யார்?
பொதுக்குழுவில் கட்சியின் இளைஞரணித் தலைவரின் பெயரை ராமதாஸ் அறிவித்தபோது, மேடையே நோக்கி முகுந்தன் பரசுராமன் வரவில்லை.
“யார் இந்த முகுந்தன் பரசுராமன்?” என பா.ம.க நிர்வாகிகளிடம் கேட்ட போது, ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன் என்றும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் சேர்த்துக் கொண்டதாகவும் அவர்கள் கூறினர்.
இந்தச் சம்பவம் பாமக தொண்டர்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளன. கூட்டத்தில் அன்புமணி பேசும் போது ஒரு சாராரும் ராமதாஸ் பேசும் போது ஒரு சாராரும் கை தட்டி தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.
கட்சியின் செல்வாக்கில் பாதிப்பு வருமா?
“கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் இருக்கும் போது, பல்வேறு விஷயங்களைப் பேசுவதற்கான தளம் கிடைக்கும். ஆனால், இரண்டாம் கட்டத் தலைவர்களே இல்லாத கட்சியாக பா.ம.க இன்று மாறிவிட்டது” என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் சிகாமணி.
பாமகவின் தொடக்க காலங்களில் தலித் எழில்மலை, பேராசிரியர் தீரன் போன்றோர் கட்சியை வளர்த்ததாக கூறிய சிகாமணி, “வாரிசு அரசியலைக் கடுமையாக எதிர்த்துப் பேசிய ராமதாஸ், பிற்காலத்தில் தனது மகனை முன்வரிசைக்கு கொண்டு வந்தார்” என்கிறார்.
குடும்பத்துக்குள் பதவிகளைக் கொடுப்பது விமர்சனத்தை ஏற்படுத்தும் என அன்புமணி கூறியதைக் குறிப்பிட்ட சிகாமணி, “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் சவுமியாவை போட்டியிட வைக்கும் போது இந்தக் கேள்விகளை அன்புமணி முன்வைத்திருக்க வேண்டும்?” என்றார்.
“அன்புமணியைத் தவிர ராமதாசுக்கு எதிராக வேறு யார் எதிர்த்துப் பேசியிருந்தாலும் இந்நேரம் கட்சியை விட்டு நீக்கியிருப்பார்கள். இதுபோன்ற சம்பவங்கள், வடமாவட்டங்களில் அக்கட்சியை ஆதரிக்கும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும்” என்று சிகாமணி கூறினார்.
பாமக நிர்வாகிகள் சொல்வது என்ன?
இதுகுறித்து, பாமக கௌரவ தலைவர் கோ.க.மணியிடம் விளக்கம் பெறுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. அவரிடம் இருந்து பதில் பெற முடியவில்லை.
“தனது பெயரைக் குறிப்பிட வேண்டாம்” என்ற நிபந்தனையுடன் பிபிசி தமிழிடம் பேசிய பாமகவின் மூத்த தலைவரும் மாநில நிர்வாகியுமான ஒருவர், “எல்லா கட்சிகளுக்குள்ளும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. இது எங்கள் கட்சியின் பொதுக்குழு. அதில் தங்களின் கருத்தை சிலர் முன்வைத்துள்ளனர்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பொதுக்குழுக்களில் தங்களின் எதிர்ப்பை நிர்வாகிகள் பதிவு செய்வது வழக்கமாக உள்ளது. பாமக பொதுக்குழுவில் நடந்ததை ஆரோக்கியமான ஒன்றாகக் கருத வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
“கட்சியின் சீனியர்களை மதிக்க வேண்டும் என அன்புமணி கூறுவதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறிய அவர், “கட்சிக்குள் நியமனம் தொடர்பாக நடந்த கலந்துரையாடல் இது. கட்சியும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்” எனக் கூறினார்.
முகுந்தன் பரசுராமனை நியமனம் செய்வதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவிப்பது குறித்துக் கேட்டபோது, “இதைப் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை” எனக் கூறியதோடு மேலதிக கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு