மன்மோகன் சிங் அறிமுகப்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கையால் தமிழ்நாடு அடைந்த பலன்கள் என்ன?
1990 முதல் 1991 வரையிலான காலகட்டம், இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நாட்கள். சுதந்திர இந்தியா அதுவரை கண்டிராத பல விஷயங்கள் அந்த காலகட்டத்தில் அரங்கேறின.
முதலாவது இந்தியாவின் பொருளாதார நிலை மிக மோசமாக இருந்தது. இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு, 1990 ஆகஸ்ட் மாதத்திற்குள் 311 கோடி டாலர்களாக குறைந்தது. ஜனவரி 1991இல், இந்தியாவின் கையிருப்பு வெறும் 89 கோடி டாலர்கள் மட்டுமே.
குவைத் மீது இராக் படையெடுத்ததால் வளைகுடா போர் தொடங்கியது. இதனால் கச்சா எண்ணெய் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. அதுமட்டுமல்லாது போர் காரணமாக அங்கிருந்த ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டியிருந்தது. இதன் விளைவாக அவர்கள் அனுப்பிய அந்நியச் செலாவணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயக்கம் காட்டி வந்தனர், அதனால் இந்தியாவின் டாலர் கையிருப்பு கணிசமாகக் குறைந்தது. அவர்கள், 1990 அக்டோபர் முதல் இந்திய வங்கிகளில் இருந்து தங்களது பணத்தை எடுக்கத் தொடங்கினர். மூன்றே மாதங்களில் 200 மில்லியன் டாலர்களை அவர்கள் திரும்பப் பெற்றனர்.
1991இல், ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், 950 மில்லியன் டாலர்கள் இந்திய வங்கிகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டது. குறுகிய காலக் கடன்களை அதிக அளவில் வாங்கியதாலும் இந்தியப் பொருளாதாரம் அழுத்தத்தில் இருந்தது.
இரண்டாவது, 1991-ம் ஆண்டு மே 21ஆம் தேதி ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் ஒரு அரசியல் ஸ்திரத் தன்மையின்மை நிலவியது.
இத்தகைய சூழ்நிலையில் ஜூன் 21 அன்று, நரசிம்மராவ் இந்தியாவின் பிரதமரானார். தான் நினைத்ததை விட மோசமான நிலையில் இந்திய பொருளாதாரம் இருப்பதை புரிந்துகொண்ட நரசிம்மராவ், இதற்கு தீர்வு காண மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக்க முடிவு செய்தார்.
மன்மோகன் சிங் என்ற பெயரைக் கேட்கும்போது இளைய தலைமுறையினர் பலருக்கும், அவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர், மென்மையாக பேசக்கூடியவர் என்ற பிம்பமே தோன்றும். ஆனால் 1991இல் இந்திய பொருளாதாரம் கிட்டத்தட்ட ஒரு திவால் நிலையை நோக்கி சென்று கொண்டிருந்த போது, நிதியமைச்சராக அவர் கொண்டுவந்த புதிய பொருளாதாரக் கொள்கை அதை மீட்டெடுத்தது.
இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றிய பட்ஜெட்
33 ஆண்டுகளுக்கு முன்பு, 24 ஜூலை 1991, தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மன்மோகன் சிங்.
அந்தப் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்,
- உள்நாட்டுச் சந்தையில் நிறுவனங்களிடையே போட்டியை ஊக்குவிக்கும் அறிவிப்பு.
- லைசென்ஸ் ராஜ் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, நிறுவனங்களுக்கு இருந்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
- இறக்குமதி உரிமங்களுக்குத் தளர்வுகளும் ஏற்றுமதி அதிகரிப்புக்கு ஊக்கமும் அளிக்கப்பட்டு புதிய ஏற்றுமதி- இறக்குமதிக் கொள்கைக்கு வித்திடப்பட்டது.
- அந்நிய முதலீடுகள் வரவேற்கப்பட்டன. நேரடி அந்நிய முதலீடுகளால் வேலை வாய்ப்பு பெருகும் என்று கூறப்பட்டது.
- மியூச்சுவல் ஃபண்ட் தனியார் துறைக்கு திறந்துவிடப்பட்டன. நிதிச் சந்தைகளை விரிவுப்படுத்தும் நோக்கில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ) முதலீடு செய்வதற்கான விதிகள் தளர்த்தப்பட்டன.
- மென்பொருளை ஏற்றுமதி செய்வதற்கான வருமான வரிச் சட்டத்தின் 80HHC பிரிவின் கீழ் வரி விலக்கு அறிவிக்கப்பட்டது.
“சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் நிலவிய சோஷியலிசம் சார்ந்த பொருளாதார கொள்கைகளில் மிகத் துணிச்சலான மாற்றங்களை கொண்டு வந்து, இந்திய பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டவர் மன்மோகன் சிங்.” என்கிறார் பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பன்.
இந்த புதிய பொருளாதார கொள்கையின் விளைவாகவே, 2024ம் ஆண்டு 3 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்டியுள்ளது. மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஐந்தாவது நாடாக இந்தியா திகழ்கிறது.
இத்தகைய மாற்றங்கள் மன்மோகன் சிங் கொண்டுவந்த பொருளாதாரக் கொள்கைகளின் விளைவே எனக்கூறும் அவர், “மிக மென்மையாக பேசக்கூடிய ஒரு நபர் கொண்டுவந்த மாற்றங்கள்தான் இன்றும் உலக அரங்கில் இந்தியாவின் பெயரை உரக்கச் சொல்கின்றன” என்கிறார்.
மன்மோகன் சிங் கொண்டுவந்த தாராளமயக் கொள்கையினால் பயன்பெற்றதில் தமிழகம் மிக முக்கியமான மாநிலம் என்கிறார் சோம.வள்ளியப்பன்.
தமிழ்நாட்டிற்கு கிடைத்த பலன்கள்
“உண்மை என்னவென்றால், 80ள் முதல் 90களில் இத்தகைய பொருளாதார கொள்கை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் தமிழ்நாடு இருந்தது. அது அறிமுகம் செய்யப்பட்டவுடன் அதை சரியாக பயன்படுத்தி முன்னேறிய சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று”, என்கிறார் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.
90களுக்கு முன்பு வரை, தமிழ்நாட்டில் தனியார் முதலீடுகள் போதுமான அளவில் இல்லை என்றும், தொழில்துறையில் மத்திய அரசின் அதிகாரம் ஓங்கி இருந்ததால் வடஇந்தியாவுக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டது என்றும் அவர் கூறுகிறார்.
மன்மோகன் சிங் கொண்டுவந்த கொள்கையால் தொழில்துறையில் மத்திய அரசிடம் குவிந்துகிடந்த அதிகாரம் தளர்த்தப்பட்டதாக கூறும் அவர், “1991க்கு முன்பே இங்கிருந்த அரசுகள் சமூக வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தின. கல்வி மற்றும் மருத்துவத்தின் வளர்ச்சி, கிராமங்களுக்கு சாலை வசதிகள், அடித்தட்டு மக்களுக்கான திட்டங்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்தப்பட்டு ஒரு சிறந்த அடிப்படை கட்டமைப்பு இங்கிருந்து” என்கிறார் சிவஞானம்.
தாராளமயக் கொள்கையினால், 1991இல் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை துவங்க விரும்பியபோது, மேற்கூறியவை எல்லாம் சாதகமான அம்சங்களாக அமைந்தன எனக் கூறுகிறார் அவர்.
மன்மோகன் சிங் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, “நான் கொண்டு வரும் சீர்த்திருத்தங்கள் அமல்படுத்தப்படும்போது, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும்” என கூறியிருந்தார்.
இதைக் குறிப்பிடும் பேராசிரியர் ஜோதி சிவஞானம், “அந்த சீர்திருத்தங்களை சரியாக பயன்படுத்தி தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்கள் பயனடைந்தன. இன்று வரை அந்த மாநிலங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மன்மோகன் சின் கொண்டுவந்த பொருளாதார கொள்கைகளுக்கு முக்கிய பங்குண்டு” என்கிறார்.
சமூக நீதி திட்டங்களுக்கு உதவிய பொருளாதார வளர்ச்சி
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 8.8 சதவீதம் என்பதால், 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று தமிழ்நாடு அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள், அதாவது இந்தியாவின் 16% தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன என்றும், இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 10% என்றும் அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தலைவர் கலைஞர் மற்றும் டாக்டர் மன்மோகன் சிங் இணைந்து செயல்பட்டது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியது. அவர்களது கூட்டணி மிகப்பெரும் சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்து, அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்தின.” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல தமிழ்நாடு அரசின் இணையதளத்தில், தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் முகப்பு பக்கத்தில், “பாரம்பரியமாக, பொறியியல் மற்றும் வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, தோல், சர்க்கரை போன்றவற்றின் உற்பத்தியில் வலுவான இருப்புடன் தொழில்மயமாக்கலில் தமிழ்நாடு எப்போதும் முன்னணியில் உள்ளது. 1991 முதல் தாராளமயமாக்கலுக்குப் பிறகு, நாட்டின் தொழில் வளர்ச்சியை நிர்ணயிப்பதில், தனியார் துறையின் பங்கு அதிகரிக்க ஆரம்பித்தது.”
“தனியார் முதலீட்டை ஈர்ப்பதில் மாநிலங்களிடையே போட்டி உருவானபொழுது தமிழ்நாடு அரசு 1992ஆம் ஆண்டிலேயே தொழில் கொள்கை ஒன்றினை வெளியிட்டு இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழில் வளர்ச்சியின் மூலம் கிடைத்த வருவாய் மீண்டும் சமூக வளர்ச்சிக்கான திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டது எனக் கூறும் பேராசிரியர் ஜோதி சிவஞானம், “அது முன்னேற்றம் சார்ந்த ஒரு சுழற்சிக்கு வழிவகுத்தது. கல்வி மற்றும் மருத்துவத்தில் தமிழக மக்களுக்கான பல வளர்ச்சித் திட்டங்களை இதனால் கொண்டுவர முடிந்தது. அதனால்தான் தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதி திட்டங்கள் என இரண்டிலும் கவனம் செலுத்த முடிந்தது.” என்கிறார்.
“தனியார் துறையிலிருந்து கிடைக்கும் வருவாய் தமிழக அரசுக்கு மிக முக்கியமான நிதி ஆதாரம். அதற்கு மிக முக்கிய காரணம் 90களின் தாராளமயக் கொள்கைகள்தான்” என்கிறார் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.
கடந்த 2019-2020ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 22,63,898.85 கோடிகள்).
ஆட்டோமொபைல்கள், மருந்துகள், ஜவுளி, தோல் பொருட்கள், ரசாயனங்கள், பொறியியல் தயாரிப்புகள் மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை போன்ற பல துறைகளில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை ‘இந்தியாவின் Saas (Software as a service) தலைநகரம்’ என்று அழைக்கப்படுகிறது.
“ஆனால் இன்று, இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் 90களில் உள்ளது போன்ற சிக்கலான நிலையை எட்டியுள்ளது. இதிலிருந்து நாட்டை மீட்க மீண்டும் ‘ராவ்-சிங் ஃபார்முலாவை’ பயன்படுத்த வேண்டும்” என்கிறார் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.