குருணாகல் துப்பாக்கிச் சூட்டு ; சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்

by smngrx01

குருணாகல் துப்பாக்கிச் சூட்டு ; சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல் குருணாகல், வெல்லவல பகுதியில் வீடொன்றினுள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் துப்பாக்கி பயன்படுத்துவதில் கைதேர்ந்தவராவதோடு துப்பாக்கியைத் திறம்படக் கையாளுவதற்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றவர் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெல்லவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (24) இரவு அடையாளம் தெரியாத சந்தேக நபர்கள் சிலர் வீட்டிலிருந்த தம்பதியினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தப்பிச் சென்றனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த 32 வயதான நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் காயமடைந்த பெண் தொடர்ந்தும் குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் ரி 56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன், சந்தேக நபர் துப்பாக்கி பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர் எனவும் துப்பாக்கியைத் திறம்படக் கையாளுவதற்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றிருப்பதற்கான ஆதாரங்கள் விசாரணையின் போது கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர் ஐந்து முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன் நான்கு துப்பாக்கி ரவைகள் இளம் வர்த்தகரை இலக்கு வைத்துத் தாக்கியுள்ளதோடு மீதமுள்ள ஒரு ரவை மூலம் அவரது மனைவியைத் தாக்கியுள்ளார்.

அத்தோடு குறித்த சந்தேக நபர் வீட்டிற்கு முன்னால் உள்ள மாமரத்திலிருந்து தம்பதியினர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் உயிரிழந்த நபர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு வசிக்க வந்துள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

எவ்வாறெனினும் வர்தகத்தகம் தொடர்பில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த மூன்று வாரங்களில், குருணாகல் வெல்லவ பிரதேசத்தில் பதிவான 15 வது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இதுவாகும். ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தொடர்புடைய செய்திகள்