மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த நாடாளவிய ரீதியில் தன்னார்வ தொண்டர் குழு

by guasw2

இலங்கையில் முதன் முறையாக மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பொது மக்களை தொளிவூட்டும் நோக்கில் விசேட பயிற்சிபெற்ற தன்னார்வ சிறப்பு தூதுவர்கள் 100 பேரை உள்ளடக்கிய தன்னார்வ தொண்டர் குழு நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இரத்மலானை ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய 10 விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பொதுமக்களை தெளிவூட்டுவற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அடிமட்ட தளத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு வேலைத்திட்டத்தை எதிர்வரும் காலங்களில் பரந்துபட்ட அளவில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவு, உடல் சுறுசுறுப்பு மிக்க ஆரோக்கியமான சமூகத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல்,  உடல் எடை, புகைப்பிடித்தல், கொலஸ்ரோல், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றை சீராக பேணுவதுடன், மன அழுத்தம் மற்றும் நித்திரை தொடர்பிலும் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் அதனுடன் இணைந்த வைத்தியசாலையும் இணைந்து இத்திட்டத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளன.

மூளை சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கத் தீர்மானித்துள்ள மேற்படி விழிப்புணர்வு வேலைத்திட்டம் சிறந்த முயற்சியெனக் கருதுகிறேன்.

இதற்காக முன்னின்று உழைக்கும் தன்னார்வ சிறப்பு தூதர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இதை இந்நாட்டின் சுகாதார சேவையின் மாற்றத்தின் ஆரம்ப புள்ளியாக காண்கிறேன்.

அரசாங்கம் வருடாந்தம் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைகளுக்காக பெருமளவான தொகையை செலவிடுகிறது.

இவ்வாறான தன்னார்வு செயற்பாடுகளின் காரணமாக இந்நாட்டு மக்கள் நோயாளிகளாவதை தடுப்பதற்கான ஆலோசனைகளும் தெளிவூட்டல்களும் வழங்கப்படுகின்றன.

ஆகையால் இது போன்ற செயற்பாடுகளுக்கு அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளது. நோய்த் தடுப்புக்கு முன்னுரிமை அளிப்பது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

உலகமக்கள் தொகையில் அண்ணளவாக 4 பில்லியன் அதாவது 3.4 பில்லியன் பேர் தற்போது மூளை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்நாட்டில் இதுவரை மூளை நோயால் பாதிப்புக்குள்ளாகிய சுமார் 400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பாரிசவாதம், டிமென்ஷியா, ஒற்றைத் தலைவலி என்பன கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமான மூளை நோய்களாக உள்ளன.

நீரிழிவு நோயினால் ஏற்படும் நரம்பு பாதிப்பு, மனித வாழ்வை அதிகம் பாதிக்கும் நோயாக கண்டறியப்பட்டுள்ளது.

மூளைநோய்கள் குறித்து முறையான விழிப்புணர்வு அளிப்பதன் மூலம், 90 சதவீதத்துக்கும் அதிகமான நோய் நிலைமைகளில் இருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்