முல்லைத்தீவு மாவட்டத்தில் கப்பல் இறங்கு துறை ஒன்று இல்லாத நிலையால்தான் மியன்மார் அகதிகள் திருகோணமலை கொண்டுசெல்லப்பட்டு மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக முள்ளியவாய்க்கால் மேற்கு வளர்மதி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம் சிவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத் தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” துறைமுகம் ஒன்று இருந்திருந்தால் மியன்மார் அகதிகள் முள்ளிவாய்க்காலில் இருந்து திருகோணமலை சென்று மீண்டும் கேப்பாபிலவிற்கு அழைத்துச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் சரியான இடத்தினை தெரிவுசெய்து இறங்குதுறை ஒன்றினை அமைக்கவேண்டும் என ஐனாதிபதி அவர்களை வேண்டி நிக்கின்றேன்.
மியன்மார் அகதிகள் படகு முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரைதட்டியபோது முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம் அதிகளவான உதவிகளை வழங்கியிருந்தது. அத்துடன் இராணுவத்தினரும் கடற்படையினரும் உலர் உணவுகளை வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து குறித்த மக்களை காப்பற்றி அவர்களை திருகோணமலைக்குக் கொண்டுசென்று பின்னர் அவர்களை மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்திற்கு அழைத்துச் சென்றுனர். அகதிகளாக வந்த அந்தமக்களை நல்லமுறையில் அரசாங்கம் கவனிக்கும் என்று நாங்கள் நம்பி இருக்கின்றோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.