தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை – டி.டி.வி. தினகரன் கண்டனம்

by adminDev

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என  அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ”சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத சிலரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றிருக்கும் இந்த விரும்பத்தகாத சம்பவம் அப்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் ஒட்டுமொத்த மாணவிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

மாநிலத்தின் தலைநகரில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவிக்கு நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம் தமிழகத்தில் அனைத்து இடங்களிலுமே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதையே மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

எனவே பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவியை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் மாணவிகள் அனைவரும் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” இவ்வாறு டி.டி.வி. தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்