“கூட்டணி நலனுக்காக தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள தயார்!” – டி.டி.வி.தினகரன் அதிரடி நேர்காணல் “புரட்சித்தலைவரின் இரட்டை இலை சின்னம் இன்றைக்கு திமுக-வின் வெற்றிக்கு மறைமுகமாக உதவி வருகிறது. பழனிசாமி இனி சுற்றுபயணம் போகவேண்டுமானால் போலீஸ் பாதுகாப்புடன் தான் போக வேண்டி இருக்கும். ஒன்று அவர் திருந்த வேண்டும் அல்லது மற்றவர்கள் அவரை திருத்த வேண்டும். இல்லாவிட்டால் 2026 தேர்தலோடு அதிமுக-வுக்கு மூடுவிழா நடத்திவிடுவார் பழனிசாமி” என்கிறார் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன். முழுக்க முழுக்க பாஜக-வின் பங்காளி முகமாகவே மாறிவிட்ட அவர் இந்து தமிழ் திசைக்கு அளித்த பேட்டியிலிருந்து…
“அதிமுக அழியாமல் இருக்க வேண்டுமானால், பாஜக-வுடன் கூட்டணி சேர வேண்டும்” என்று சொல்லி இருக்கிறீர்கள். டெல்லியில் இருந்து இப்படி சொல்லி அனுப்பினார்களா?
தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக நான் டெல்லி சென்று வந்தேன். பாஜக-வினர் யாரையும் இம்முறை பார்க்கவில்லை. நான் ரொம்ப நாட்களாக சொல்லும் கருத்தை, புது வார்த்தைகளில் சொல்லியிருக்கிறேன். சுயநலம், பதவி வெறியால் சிலர் அதிமுக-வை கபளீகரம் செய்து வைத்துள்ளனர். அதிமுக பெரும் பின்னடைவைச் சந்தித்த பின்பும், கட்சியினரை ஏமாற்றுவதற்காக, ‘மெகா கூட்டணி’ என்று இபிஎஸ் சொல்லி வருகிறார். அவர் ஆந்திரா போன்ற மாநிலங்களிலோ, இலங்கை போன்ற நாடுகளிலோ உள்ள கட்சிகளுடன் தான் மெகா கூட்டணி அமைக்க முடியும். அதிமுக செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேட வேண்டுமானால் பாஜக-வுடன் கூட்டணி அமைப்பதே சரியாக இருக்கும். இல்லையென்றால், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுக-வுக்கு இபிஎஸ் முடிவுரை எழுதி விடுவார்.
அதிமுக – பாஜக கூட்டணிக்கு இரு கட்சிகளிலும் ஆதரவு இருக்கிறதா?
அதிமுக-வில் பெரும்பான்மையானவர்கள் பாஜக கூட்டணியை விரும்புகின்றனர். மக்களவைத் தேர்தலில் தனியாக போட்டியிடுவது என இபிஎஸ் எடுத்த முடிவு மிகப்பெரிய அரசியல் தவறு என நினைக்கின்றனர். ஓபிஎஸ் போன்றவர்களை கட்சியில் இருந்து நீக்கியதும் தவறு என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
இந்த இடத்தில் மற்றொன்றையும் ஞாபகப்படுத்துகிறேன். “அதிமுக இடம்பெறும் என்டிஏ கூட்டணியில் நான் இருந்தால் இபிஎஸ் பயப்படுவார். அதனால், நான் தேர்தலில் போட்டியிடவில்லை. என்னைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் உரிய தொகுதிகளை வாங்கிக் கொடுங்கள்” என்று 2021-ல் டெல்லியில் இருந்து வந்த என்டிஏ தலைவர்களிடம் தெரிவித்தேன். இபிஎஸ் அதற்கு சம்மதிக்காததால், திமுக-விடம் ஆட்சியை பறிகொடுக்கும் நிலை வந்தது. இப்போது, திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டுமென்றால், கடந்த தேர்தலின் போது சொன்னதைப் போலவே, கூட்டணி நலனுக்காக, 2026 தேர்தலில் நான் போட்டியிடாமல் விலகி இருக்கவும் தயாராக இருக்கிறேன்.
சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுவிலோ, கலந்தாய்வு கூட்டங்களிலோ இது தொடர்பாக எந்த விவாதங்களும் எழவில்லையே… பாஜக-வுடன் கூட்டணி இல்லை என ஜெயக்குமார் மீண்டும் மீண்டும் மறுக்கிறாரே?
இபிஎஸ்சின் ஊதுகுழலாக ஜெயக்குமார் செயல்படுகிறார். எனவே, அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. அதிமுக பொதுக்குழுவில் இது போன்ற கலகக்குரல்கள் எப்போதும் எழுந்ததில்லை. அதிமுக-வில் எப்போதும் நிர்வாகிகள் வெளிப்படையாகக் கருத்துகளைச் சொல்ல மாட்டார்கள். எனவே, இது வெளிப்படையாகத் தெரியாது. அதேசமயம், இபிஎஸ் தவறு செய்துவிட்டார் என்ற கருத்து பெரும்பான்மையான நிர்வாகிகள் மத்தியில் உள்ளது.
இப்படி ஒரு அதிருப்தி இருக்குமானால், அதனைப் பயன்படுத்தி, தமிழகத்தில் ஒரு ஏக்நாத் ஷிண்டேயை பாஜக உருவாக்க வாய்ப்பு உள்ளதா?
அது எனக்குத் தெரியாது. தனித்து போட்டியிட்டு, திமுக-வின் வெற்றிக்கு மறைமுகமாக உதவி செய்யாமல், என்டிஏ கூட்டணிக்கு வாருங்கள் என்று அதிமுக-வை அழைக்கிறேன். அவர்கள், இபிஎஸ் தலைமையில் வருகின்றனரா அல்லது மற்றவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து முடிவெடுக்கப் போகிறார்களா என்பது எனக்கு தெரியவில்லை.
அதிமுக-வினர் ஒன்றிணைவது இருக்கட்டும். முதலில், டிடிவி – ஓபிஎஸ் – சசிகலாவை ஒன்றிணையச் சொல்லுங்கள் என்கின்றனரே..?
அமமுக தனி இயக்கம். எங்கள் கொள்கை, கோட்பாடு என்பது தனித்துவமானது. ஓபிஎஸ் அதிமுக உரிமை மீட்புக் குழுவை நடத்தி வருகிறார். ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் அதிமுக கொடியை பிடிக்கின்றனர். நாங்கள் அமமுக கொடியைப் பிடிக்கிறோம். அதிமுக-வை ஜனநாயக முறையில் மீட்டெடுக்க வேண்டும் என்பதில், நாங்கள் மூவரும் மனதளவில் ஒன்றாக இருக்கிறோம். தேவையான நேரத்தில் மூவரும் நிச்சயம் ஒன்றாக சேர்ந்து நிற்போம்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சாதி ரீதியாக பிரிந்து செயல்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?
எல்லா மதத்திற்கும், சாதிக்கும் பொதுவான கட்சியான அதிமுக-வை, இபிஎஸ் ஒரு வணிக நிறுவனம் போல் நடத்தி வருகிறார். அதில் சில முதலீட்டாளர்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். தென் மாவட்டங்களில் அவரை நம்பி முதலீடு செய்ய யாரும் தயாராக இல்லை. வன்னியர் இடஒதுக்கீடு போன்ற அறிவிப்புகளை இபிஎஸ் அவசரகதியில் வெளியிட்டதால், இப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார். அவரது செயல்பாடுகளால் ஏற்பட்ட வெறுப்பு மக்களவைத் தேர்தலில் எதிரொலித்தது.
வழக்குகளில் இருந்து தப்பிக்க, நீங்கள் பாஜக-விடம் சரணடைந்து விட்டதாக ஜெயக்குமார் சொல்கிறாரே..?
காலில் விழுவதில் உலகப் புகழ் வாய்ந்தவர்கள் அவர்கள் என்பதால், அந்தப் பழக்கத்தில் சொல்லி இருக்கலாம். யார் காலிலும் விழுந்து நான் கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் இல்லை. என் மீதான வழக்குகள் எல்லாம் நீதிமன்றத்தில் உள்ளது. இதில் பாஜக எப்படி தலையிட முடியும்? உண்மையில், வழக்குகளில் இருந்து தப்பிக்கவே, இபிஎஸ், ஜெயக்குமார் போன்றவர்கள் தனித்து போட்டியிட்டு திமுக-வுக்கு மறைமுகமாக உதவி வருகின்றனர்.
ஆனால், அதிமுக கூட்டணி முறிந்ததற்கு அண்ணாமலையின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் தானே காரணமாக இருந்தது..?
அண்ணாமலை அவரது கருத்துகளைத்தான் சொன்னார். அதிமுகவினர் மட்டும் எதுவும் பேசாமல் வாயைப் பொத்திக் கொண்டா இருந்தனர்? அவர்கள் பேசியதற்கு, அண்ணாமலை பதில் சொன்னார்.
அண்ணாமலை இல்லாத பாஜக-வுடன் கூட்டு சேர அதிமுக தலைமை விரும்புகிறதோ?
என்டிஏ கூட்டணிக்கு வராமல் இருப்பதற்கு இதைக்கூட ஒரு காரணமாக அவர்கள் சொல்லலாம். இபிஎஸ் இல்லாத அதிமுக-வுடன் தான் பாஜக கூட்டணி அமைக்கும் என்று சொன்னால் சரியாக இருக்குமா?
வரும் சட்டசபைத் தேர்தலில் ஐந்து முனை போட்டி வரும் என்கிறார் அண்ணாமலை. அப்படியானால் அதிமுக பாஜக கூட்டணிக்கு வரும் என்று அவர் நம்பவில்லை போலிருக்கிறதே..?
தேர்தல் களம் இப்படி அமையலாம் என்று அவர் சொல்லியிருக்கிறார். அதை எதிர்மறைக் கருத்தாக நினைக்கக் கூடாது. காலமும், நேரமும், சூழ்நிலையும் முடிவு செய்யும் என்றும் அண்ணாமலை சொல்லி இருக்கிறார்.
திமுக-வுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி ‘திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் அண்ணாமலை வெளியிடுவதெல்லாம் வெற்று விளம்பரம் தான் என்கிறார்களே..?
அண்ணாமலை வெளியிட்ட தகவல்களை வெற்று விளம்பரம் என்று சொல்லி விட முடியாது. அவற்றின் மீதான நடவடிக்கைக்காக, சட்டசபைத் தேர்தல் வரை காத்திருப்போம். அப்படிப் பார்த்தால் திமுக ஆட்சிக்கு வந்ததும் தனி நீதிமன்றம் அமைத்து, ஊழல் செய்த இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்களை சிறையில் தள்ளுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னாரே… அதுவும் வெற்று விளம்பரம் தானா?
2026-ல் கூட்டணி ஆட்சி என்கிறீர்கள்… யார் முதல்வர்? அண்ணாமலையா?
என்டிஏ கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து ஒரு தகுதியான முதல்வர் வேட்பாளரை உறுதியாக அறிவித்து விட்டுத்தான் தேர்தலைச் சந்திப்போம்.
சமீபத்திய நிகழ்வுகளைப் பார்க்கும்போது, இரட்டை இலை சின்னத்தை முடக்கப்படும் வாய்ப்பு உள்ளதா?
சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்படி, தேர்தல் ஆணையர் விசாரணை நடத்த உள்ளார். நல்லதே நடக்கும். காத்திருப்போம்.
சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முதல்வர் நம்பிக்கையாகச் சொல்கிறாரே..?
கூட்டணி, பணபலத்தின் அடிப்படையில் அவர் சொல்கிறார். ஆனால், மக்கள் பலம் அவர்களை வீழ்த்தி விடும்.
துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு சீக்கிரமே கிடைத்து விட்டதாக நினைக்கிறீர்களா?
அவருக்கு எதற்காக இவ்வளவு விரைவாக துணை முதல்வர் பதவி கொடுத்தீர்கள் என்று நீங்கள் முதல்வர் ஸ்டாலினிடம் தான் கேட்க வேண்டும். உதயநிதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே, அவரைப் பற்றி வேறு கருத்து எனக்கு இல்லை.
கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் ராஜ்நாத் சிங் பங்கேற்பு, முதல்வர் – பிரதமர் சந்திப்பு போன்ற நிகழ்வுகளைப் பார்த்தால் பாஜக-வுடன் திமுக இணக்கம் காட்டுவது போல் உள்ளதே..?
அப்படிப் பார்த்தால், கலைஞர் உடல்நலம் குன்றி இருந்தபோது, பிரதமர் மோடி அவரது வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்திருக்கிறார். எனவே, எல்லாவற்றையும் அரசியலாக பார்க்கக் கூடாது.