ஹெய்ட்டி வைத்தியசாலையில் துப்பாக்கி சூடு; மூவர் உயிரிழப்பு!

by wp_shnn

ஹெய்ட்டியில், நாட்டின் மிகப்பெரிய பொது வைத்தியசாலையை மீண்டும் திறப்பதை அறிவிக்கும் மாநாட்டின் போது ஊடகவியலாளர்கள், காவல்துறை மற்றும் வைத்திய ஊழியர்கள் மீது ஆயுதமேந்திய நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள பொது வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (24) நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

ஆன்லைனில் வெளியிடப்பட்ட படங்கள் கட்டிடத்திற்குள் பலர் காயமடைந்தும் உயிரிழந்திருப்பதையும் வெளிக்காட்டுகின்றது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் போது, ஹெய்ட்டியின் சுகாதார அமைச்சர் லோர்தே பிளெமாவின் வருகைக்காக ஊடகவியலாளர்கள் காத்திருந்தனர்.

ஹெய்ட்டியில் கடந்த ஏப்ரலில் புதிய இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட்ட போதிலும், ஆறு மாதங்களுக்கு முன்னர் கென்ய பொலிஸ் அதிகாரிகள் தலைமையிலான சர்வதேசப் படை நிலைநிறுத்தப்பட்ட போதிலும், நாட்டு மக்கள் தாங்க முடியாத அளவிலான கும்பல் வன்முறைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

2021 இல் அப்போதைய ஜனாதிபதி ஜோவெனல் மோஸ் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து ஹெய்ட்டி வன்முற‍ை கும்பல்களின் தாக்குதல்களினால் அடிக்கடி பாதிக்கப்படுகிறது.

போர்ட்-ஓ-பிரின்ஸின் 85 சதவீத பகுதி இன்னும் கும்பல் கட்டுப்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஹெய்ட்டியில் வன்முறையில் 5,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், நாடு இப்போது வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாகவும் ஐ.நா. கூறுகின்றது.

தொடர்புடைய செய்திகள்