இலங்கை கடற்படை கடற் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து திங்கட்கிழமை (23) இரவு மன்னாருக்கு வடக்கே, இலங்கை கடற்பரப்பில் விசேட ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதன் போது உள்நாட்டு கடற்பரப்புக்குள் அத்துமீறி சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இரு இந்திய மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அவற்றிலிருந்த 17 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு மீன்பிடி படகுகள் நாட்டின் கடற்பகுதிக்குள் அத்துமீறி மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கமையவே இந்த ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் குறித்த படகுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவ்வாண்டில் இதுபோன்று சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 72 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 554 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.