13 வது திருத்தம் தொடர்பில் மோடியின் மௌனம்

by adminDev2

இலங்கை ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவுடன் கடந்தவாரம் புதுடில்லியில் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் அரசியலமைப்புக்கான 13  வது திருத்தம் தொடர்பில் மௌனம் சாதித்தமை  இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளிடமிருந்தும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளிடமிருந்தும் நெருக்குதல்கள் இல்லாததன் விளைவு என்றுை இணைந்த வடக்கு –  கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் கூறியிருக்கிறார்.

1987 ஆம் ஆண்டில்  13 வது  திருத்தம்  நடைமுறைக்கு வந்த நாளில் இருந்து இந்திய தலைவர்கள் இலங்கையின் தலைவர்களுடனான தங்களது பேச்சுவார்த்தைகளில்  அந்த திருத்தம் பற்றி குறிப்பிடுவது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.

வடக்கு,  கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கும் ஒரு அளவில் சுயாட்சியை விதந்துரைத்த 1987 ஜூலை இந்திய –  இலங்கை சமாதான உடன்படிக்கையின் ஒரு விளைவே  13 வது அரசியலமைப்பு திருத்தமாகும்.

கடந்தகால உதாரணங்கள்

2015  மார்ச் மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட முதல் விஜயத்தின்போது 13 வது திருத்தம் விரைவாக முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று  பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

2023 ஜூூலயில்  அன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  பேச்சுவார்த்தைகளை நடத்த புதுடில்லிக்கு சென்றபோது அந்த திருத்தத்தை நடைமுறைப் படுத்துவதில் இருக்கும் கடப்பாட்டை இலங்கை நிறைவுசெய்யும் என்று நம்புவதாக மோடி குறிப்பிட்டார்.

1988 டிசம்பர் தொடக்கம் 1990 மார்ச் வரை இணைந்த வடக்கு –  கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த 71 வயதான வரதராஜப்பெருமாள் திங்களன்று ( 23 )  ‘ தி இந்து’ வுக்கு தொலைபேசி மூலமாக  வழங்கிய நேர்காணல் ஒன்றில் இலங்கை தமிழ்க்கட்சிகள் – இலங்கை தமிழரசு கட்சியாக இருந்தாலென்ன, தமிழ் காங்கிரஸாக இருநனதாலென்ன அல்லது வேறு எந்த ஜனநாயக தமிழ் அரசியல் இயக்கமாக இருந்தாலென்ன – ஒற்றையாட்சித் தன்மையுடைய அரசின் கீழ் எந்தப்பயனும் ஏற்படப்போவதில்லை என்ற நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன என்று கூறினார்.

ஒற்றையாட்சி

ஆனால், ” நடைமுறை யதார்த்தத்தில் ஒற்றையாட்சித் தன்மையை மாற்றுவது சாத்தியமானதல்ல. 1983 கறுப்பு ஜூலை இனவன்செயலுக்கு பிறகு முன்னாள்  இந்திய பிரதமர் இந்திரா காந்தியினால் மத்தியஸ்தராக   இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட கோபாலசுவாமி பார்த்தசாரதி இதை நேரகாலத்தோடு தெளிவாக விளங்கிக் கொண்டார்.”

1987 உடன்படிக்கை உட்பட அரசியல் இணக்கத்தீர்வுக்கான சகல முன்மொழிவுகளுமே ஒற்றையாட்சி முறையின் தவிர்க்க முடியாத தன்மையை கருத்திற் கொண்டே முன்வைக்கப்பட்டன.

” அன்று சகல யோசனைகளையும் நிராகரித்த தமிழீழ விடுதலை புலிகளினால் வெளிப்படுத்தப்பட்ட மானநிலையே இன்று வரை தொடருகிறது”  என்று விடுதலை புலிகளுக்கு எதிசான முகாமில் இருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர.எல்.எவ்.) தலைவர்களில் ஒருவராக இருந்த முன்னாள் முதலமைச்சர் கூறினார்.

13 வது திருத்தம் பற்றி இலங்கை தமிழ் அரசியல் கட்சிகள் பேசிய சந்தர்ப்பங்களிலும் கூட,  அவை அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எந்த முயற்சியையும் மேற்கொண்டதில்லை. பதிலாக, அந்த பணியைச் செய்வது இந்தியாவின்,  இந்திய அரசாங்கத்தின் பொறுப்பு என்றே அந்த கட்சிகள் கூறின  என்று வரதராஜப் பெருமாள் குறிப்பிட்டார்.

தவிரவும், தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு கட்சியுமே 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவைக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அரசியல் இணக்கத் தீர்வைப் பற்றி பேசிய தமிழ்நாட்டுக் கட்சிகள் இந்திய அரசாங்கம் ஒருபோதுமே இணங்காத தமிழ் ஈழக்கோட்பாட்டையே உயர்த்திப்பிடித்தன என்று அவர்  மேலும்  கூறினார்.

மெய்யான நெருக்குதல் 

மேலும், 1980 களில் இலங்கை தமிழர் பிரச்சினையை கையாளுவதில் இந்தியாவின் தலையீட்டுக்கு வழிவகுத்தது உள்நாட்டுக் காரணியே என்பதை நினைவுபடுத்திய அதேவேளை வரதராஜப்பெருமாள் ” உள்நாட்டில் உண்மையான நெருக்குதல் இருந்தால் மாத்திரமே இந்திய அரசாங்கம் செயலில் இறங்கும் ”  என்று குறிப்பிட்டார்.

இலங்கையின் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதான அரசியல் கட்சாயான ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) ஒரு காலத்தில் மாகாணசபை முறையை கடுமையாக எதிர்த்தது என்றும் அவர் கூறினார்.  முன்னாள் முதலமைச்சர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அடிக்கடி பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

நாளடைவில் ஜே.வி.பி. அதன் நிலைப்பாட்டை மாற்றிவிட்டது. தற்போது அந்த கட்சி மாகாண சபைகளை எதிர்ப்பதில்லை. ஆனால் அதேவேளை 13 வது திருத்தத்தை ஏற்றுக் கொள்வதில்லை. அடிப்படையான பிரச்சினைக்கு 13 வது திருத்தம் ஒரு தீர்வு அல்ல என்பதே ஜே.வி.பி.யின் பாரம்பரியமான நிலைப்பாடு.

அந்த திருத்தத்தை தமிழர்களே ஏற்பதில்லை என்றும் ஜே.வி.பி. கூறி வந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்  உள்ளூராட்சி சபைகளை பலப்படுத்தக்கூடும் என்று முன்னாள் முதலமைச்சர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்