ஜெமினிட்ஸ் வழியாக பூமி செல்லும்போது என்ன நடக்கும்? – டிசம்பர் மாதத்தில் தோன்றும் எரி நட்சத்திர பொழிவு

ஜெமினிட் எரிகற்கள் பற்றிய சுவாரசிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ஜானத்தன் ஓகல்லகன்
  • பதவி,

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நிகழும் வானியல் அதிசயம்தான் ஜெமினிட்ஸ் எரிகற்கள் பொழிவு. அதனை ஜெமினிட்ஸ் என்று அழைக்கிறோம். ஆராய்ச்சியாளர்கள் இந்த எரிகற்கள் எங்கிருந்து வருகின்றன என்று தற்போது புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பேரரசர் அலெக்சாண்டர் படுகொலைக்குப் பிறகு, ரோமானிய பேரரசில் குழப்பம் நிலவியது. அதே நேரத்தில் சீனா தொடர்ச்சியான போரால் பல சேதங்களை சந்தித்தது.

1800 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த சூழ்ச்சியில் சிக்கிக் கொண்ட மனிதர்களின் தலைக்கு மேலே மிக உயரத்தில் மற்றொரு வியக்கத்தக்க நிகழ்வு நடந்தது. அதன் விளைவுகளை நாம் இன்றும் காண்கின்றோம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இந்த சமயத்தில்தான் 3200 ஃபியத்தான் (3200 Phaethon) என்ற சிறுகோள் பேரழிவை சந்தித்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அது உடைந்து நொறுங்கி, சூரியனைச் சுற்றி ஒரு நீண்ட வளையத்தில் துண்டுகளாக விழுந்தது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த உடைந்த விண் துண்டுகள் வழியாக பூமி பயணிக்கும் போது அங்கே இந்த விண்ணியல் நிகழ்வு ஏற்படுகிறது. எரிகற்கள் பொழிவதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. அதைதான் நாம் ஜெமினிட்ஸ் என்று அழைக்கிறோம்.

டிசம்பர் மாதத்தில், ஒரு தெளிவான இரவில், வானத்தில் நீங்கள் இதனைக் காண இயலும். வானம் முழுவதும் ஒளிக்கோடுகள் செல்வதை நீங்கள் ரசிக்கலாம். இந்த சிறுகோளின் துகள்கள் நமது வளிமண்டலத்தில் மணிக்கு 79,000 மைல்கள் (127,000km/h) என்ற வேகத்தில் ஆவியாகின்றன.

மஞ்சள், பச்சை, நீலம் போன்ற வண்ணங்களை உருவாக்குவதால் அது குறிப்பாக கவனிக்கப்படுகிறது என்று கூறுகிறார் தாமஸ் ஹெனிச். இவர் செக் அறிவியல் அகாடமியில் வானியல் இயற்பியலாளராக பணியாற்றுகிறார்.

“அவை மிகவும் பிரகாசமானவை. மணிக்கு 150 எரிகற்களை உங்களின் வெற்றுக் கண்களால் காண இயலும்” என்று அவர் தெரிவிக்கிறார்.

ஜெமினிட்ஸ் என்றால் என்ன?

ஜெமினிட்ஸ் மற்றொரு காரணத்தாலும் தனித்துவம் கொண்டவையாக அறியப்படுகிறது. சிறுகோளில் இருந்து உருவான ஒரே எரிகல் பொழிவு இதுதான்.

மற்ற எரிகற்கள் அனைத்தும், வால் நட்சத்திரங்களின் குளிர்ந்த துண்டுகளில் இருந்து உருவாகின்றன. சிறு கோள்கள் பொதுவாகவே பாறைகள் போன்றவை. அவை வால்கள் போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதில்லை.

1983ம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இந்த 3200 ஃபியத்தானைக் கண்டறிந்தனர். 3.6 மைல்கள் (5.8 கிமீ) அகலமுள்ள நீல நிற சிறுகோள் அது. ஜெமினிட்ஸ்களின் சுற்றுவட்டபாதையோடு இந்த சிறுகோளின் பாதை பொருந்திப் போவதை அவர்கள் கண்டறிந்தனர். விண்ணில் ஜெமினி விண்மீன் தோன்றும் நேரத்தில் ஜெமினிட்ஸ் தெரிவதால் இதனை நாம் ஜெமினிட்ஸ் என்று அழைக்கின்றோம்.

இந்த கண்டுபிடிப்பின் மூலமாக எரிகற்கள் ஃபியத்தான் சிறுகோளில் இருந்து தான் உருவாகிறது என்ற சாத்தியமான முடிவுக்கு அவர்கள் வந்தனர்.

ஜெமினிட்ஸ் ஏன் அதிக அளவில் பிரகாசமான வண்ணங்களைக் கொண்டிருக்கின்றன என்பதையும் இது விளக்குகிறது. ஏன் என்றால் அவற்றை உருவாக்கும் மூலப்பொருள் கடினமானது என்று கூறுகிறார் ஹெனிச்.

மேலும் வால்நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையிலான தனிமங்களை அவை கொண்டிருக்கின்றன.

ஜெமினிட் எரிகற்கள் பற்றிய சுவாரசிய தகவல்கள்

பட மூலாதாரம், Arecibo Observatory/NASA/NSF

படக்குறிப்பு, சிறு கோள்கள் பொதுவாகவே பாறைகள் போன்றவை. அவைகளுக்கு வால்கள் போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதில்லை

ஃபியத்தான் விதிவிலக்கானது

ஃபியத்தான் சூரியனைச் சுற்றி எழுப்பியுள்ள சுற்றுப்பாதையானது மிகவும் அசாதாரணமானது என்று கூறுகிறார் கோள்கள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ரியான் ஜோன்ஸ். அவர் மான்செஸ்டர் பல்கலைக்கழத்தில் பணியாற்றி வருகிறார்.

“புதன் கோளைக் காட்டிலும் சூரியனுக்கு மிக அருகில் இவை பயணிக்கின்றன,” என்று சுட்டிக் காட்டும் அவர், சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவில் 0.14 மடங்கு குறைவான தூரத்தில் இந்த சிறுகோள் உள்ளது என்று கூறுகிறார். எனவே 750 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் கொண்டதாக இருக்கலாம் என்றும் அவர் விவரிக்கிறார்.

வழக்கத்திற்கு மாறான சுற்றுவட்டப்பாதை ஜெமினிட்ஸ் எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றிய சில தகவல்களை ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்குகிறது.

2024ம் ஆண்டு ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சியாளர் டனிலா மிலானோவும் அவருடைய சகாக்களும் எரிகற்கள் மற்றும் ஃபியத்தான் சிறுகோளின் சுற்றுப்பாதையையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். தற்போது அவை இரண்டும் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் விலகியுள்ளன.

ஆராய்ச்சிகளின் முடிவில் 1200 முதல் 2400 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டும் ஒன்றை ஒன்று சந்தித்திருக்கலாம் என்று கண்டறிந்தனர்.

இந்த காலகட்டத்தில் தான் சிறுகோள் அழிந்திருக்கலாம் என்று மிலானோவ் கூறுகிறார். மற்றொரு ஆராய்ச்சி இது 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கலாம் என்று கூறுகிறது.

எதன் காரணமாக அந்த பேரழிவு நிகழ்ந்திருக்கும் என்பது குறித்த தீவிரமான விவாதங்கள் எழுந்து வருகின்றன. ஒரு பொருளோடு இந்த சிறுகோள் மோதி, உடைந்து சிதறியிருக்கலாம் என்ற சாத்தியத்தை சிலர் பரிந்துரைக்கின்றனர்.

ஆனால் சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் மற்றும் வானியற்பியல் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் வோல்ஃப் குகியர், சூரியனுக்கு அருகில் சிறுகோள்கள் சில காணப்படுவதால் இது சாத்தியமில்லை என்கிறார். அவர் ஜெமினிட்ஸ் பற்றி ஆய்வு செய்து வருகிறார்.

அங்குள்ள சிறுகோள்களை அகற்றும் ஒரு பொதுவான செயல்முறை இருப்பதாகவும், அதனால் சிறுகோள்களின் மோதல்கள் மிகவும் அரிதாகவே நடைபெறுகின்றன என்றும் இது பரிந்துரைக்கிறது.

மோதல்களால் இவை நிகழ்ந்திருக்கும் என்று விளக்க இயலாது என்று கூறும் குகியர், சூரியன் அருகில் இருப்பதால் அங்கு நிலவும் அதீத வெப்பம் சிறிய எண்ணிக்கையிலான சிறுகோள்கள் மட்டுமே இருப்பதற்கான சாத்தியத்தை வழங்குகிறது. ஃபியத்தான் ஒரு விதிவிலக்காக இருக்கலாம் என்றார்.

வியாழன் போன்ற கோள்களின் ஈர்ப்பு விசை காரணமாக ஃபியத்தான் சிறுகோள் அதனுடைய சுற்றுவட்டத்தில் இருந்து சூரியனை நோக்கி தள்ளப்பட்டிருக்கலாம். 1800 ஆண்டுகளுக்கு முன்போ அல்லது அதற்கும் முன்பாகவோ, சூரியனுக்கு மிக அருகில் அதன் சுற்றுப்பாதையில் இந்த சிறுகோள் பயணித்திருக்கக் கூடும். அங்கு நிலவிய வெப்பம் காரணமாக அது உடைந்து சிதறியிருக்கக் கூடும்.

2023ம் ஆண்டு நாசாவின் விண்கலமான பார்க்கர் சோலார் ப்ரோபில் இருந்து பெறப்பட்ட தரவுகளை குகியர் பயன்படுத்தி இது குறித்து மேலும் பல விஷயங்களை கண்டறிந்தார்.

பார்க்கர் ரகசியமாக ஜெமினிட்ஸ்களின் மற்றொரு பகுதியை 2020ம் ஆண்டு கவனித்து வந்தது. அதன் கணிப்புகளை பயன்படுத்தி, ஜெமினிட்ஸ்கள், வால் நட்சத்திரங்கள் போன்று தொடர்ச்சியாக உடைந்த துண்டுகளை வெளியேற்றாமல், ஒரே ஒரு மோதலின் விளைபொருளாக உள்ளது என்ற முடிவுக்கு வந்தார் குகியர்.

ஜெமினிட் எரிகற்கள் பற்றிய சுவாரசிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1800 ஆண்டுகளுக்கு முன்பு சூரியனுக்கு மிக அருகில் அதன் சுற்றுப்பாதையில் இந்த சிறுகோள் பயணித்திருக்கக் கூடும். அங்கு நிலவிய வெப்பம் காரணமாக அது உடைந்து சிதறியிருக்கலாம்.

இதர சாத்தியங்கள் என்ன?

இந்த நிகழ்வு மிகவும் குறைவான வேகத்தில் நடந்ததாகவும் கூறுகிறார் அவர். சிறுகோள்கள் சூரியனுக்கு மிக அருகில் செல்லும் போது அது உட்புறமாக வெப்ப அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அவை அதிகமாக வெப்பமடையும் போது, சிறுகோள்கள் சிறு சிறு பொருட்களாக சிதறுகின்றன என்று கூறுகிறார்.

சுழற்சி காரணமாக கூட எரிகற்கள் உருவாகியிருக்கலாம் என்ற மற்றொரு சாத்தியமும் உள்ளது.

ஃபியத்தான் ஒவ்வொரு 3.6 மணி நேரத்திற்கும் ஒரு முறை சுழலுகிறது. அது அதிக வேகமானது என்று கூறுகிறார் கிசெங்க் சாங். அவர் அரிசோனாவின் லோவெல் ஆய்வகத்தில் ஆராய்ச்சியளராக பணியாற்றுகிறார்.

சூரியன் சிறுகோளின் மேற்பரப்பை சூடாக்குகிறது. மேலும் சூரியனின் மேற்பரப்பில் இருந்து கதிர்வீச்சு நிகழும் போது அது, சிறுகோளுக்கு சுழல்வதற்கான வேகத்தை வழங்குகிறது. இது யோர்ப் விளைவு என்று அழைக்கப்படுகிறது.

ஃபியத்தானில் இருந்து சோடியம் வெளியேற்றப்படுவதை சாங் 2023ம் ஆண்டு கவனித்தார். இது இந்த செயல்முறையை மேலும் விளக்கலாம்.

“அது வேகமாக சுழலுவதால் அதன் மேற்பரப்பில் சில பாகங்களை இழந்திருக்கக் கூடும். அதனால் அடிப்பரப்பில் இருந்த சோடியம் வெளிச்சத்திற்கு வந்திருக்கும்,” என்றும் அவர் கூறுகிறார்.

சூரியனுக்கு அருகில் ஒவ்வொரு முறையும் ஃபியத்தான் சுழலும் போது அதன் மேற்பரப்பின் சிறிய பகுதியை இழக்கக்கூடும் என்று கூறுகின்றனர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

சூரியனுக்கு மிக அருகில் செல்லும் போது ஏற்படும் அதீத வெப்பத்தின் காராணமாக அது நீல நிறத்தில் உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர். அதன் மூலமாக பாறைப் பொருட்கள், இரும்பு ஆக்சைடு மற்றும் பைராக்ஸீனை உள்ளடக்கிய நுண்ணிய அடுக்கு உருவாக காரணமாகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

2028ம் ஆண்டு டெஸ்டினி+ என்ற பெயரில் ஒரு ஆய்வை மேற்கொள்ள உள்ளது ஜப்பான். அது நமக்கு மேலும் சில பதில்களை வழங்கக் கூடும். அந்த விண்கலம் ஃபியத்தானை தாண்டி பயணிக்கப் போகிறது. அதன் மேற்பரப்பை அது படம் பிடிக்கலாம்.

வேகமாக சுழலும் சாத்தியக் கூறு சரியென்றால், மைய விசை இருக்கும் மத்திய ரேகையில் நிலச்சரிவுகளையும், பாறைகள் வெளியேறுவதையும் காண இயலும் என்று கூறுகிறார் சாங்.

ஜெமினிட்ஸ் எங்கிருந்து தோன்றுகின்றன என்பது தொடர்பான தகவல்கள் சூரிய குடும்பம் குறித்து பல்வேறு தகவல்களை நமக்கு வழங்கும் என்று கூறுகிறார் மிஞ்சே கிம். லண்டன் கல்லூரி பல்கலைக்கழகத்தில் அவர் கோள்களை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளராக உள்ளார்.

பலவிதமான வழிமுறைகள் மூலமாக விண்கற்களின் பொழிவுகள் நிகழும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்று கூறுகிறார் கிம்.

சூரியனுக்கு அருகே மேலும் பல சிறுகோள்கள் இருப்பதால் எதிர்காலத்தில் இது போன்ற பல விண்கற்கள் நகர்வை நாம் காணலாம் என்று கூறுகிறார் அவர்.

10,000 ஆண்டுகளுக்குப் பிறகு ஃபியத்தான், ஜெமினிட்ஸ்களை விட்டுவிட்டு, சூரியனில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்கிறார் சாங். இறுதியில் அவைகளும் நம் நட்சத்திரத்தால் அடித்துச் செல்லப்படும்.

ஃபியத்தான் நமக்கு சிறுகோள்கள் எப்படி அழிவைச் சந்திக்கின்றன என்பதை விவரிக்கிறது சாங்.

தற்போது, இந்த டிசம்பர் மாதத்தில், விண்கற்களின் நகர்வை ரசிக்கும் நேரத்திற்கு வந்துவிட்டோம். ”ஜெமினிட்ஸ் வழியாக பூமி செல்லும் நேரத்திலும், இடத்திலும் நாம் இருக்கின்றோம்,” என்கிறார் குகியர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.