பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே மீளழைக்கப்பட்டுள்ளனர்

by sakana1

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே மீளழைக்கப்பட்டுள்ளனர் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவத்தினர் சேவையில் இருந்து மீளழைக்கப்பட்டுள்ளனர். ஆறு மாதத்துக்கொரு முறை பாதுகாப்பு விடயங்கள் மீள் பரிசீலனை செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு சேவையில் இருந்து இராணுத்தினர் மீளழைக்கப்பட்;டு பொலிஸார் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசியல் பழிவாங்களுக்காக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது என்று குறிப்பிடுவது அடிப்படையற்றது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே பாதுகாப்பு பணியில் இருந்த இராணுவத்தினர் சேவையில் இருந்து மீளழைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது என்று அரசியல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர்  முறையான காரணிகளை குறிப்பிட வேண்டும். ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் இதர சலுகைகள் குறித்து எதிர்வரும் வாரமளவில் உறுதியான தீர்மானம் எடுக்கப்படும். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஆறு மாத காலத்துக்கு ஒருமுறை மீள்பரிசீலனை செய்யப்படும். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு போதுமான அளவில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் சலுகைகள் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களின் சலுகைளை மறுபரிசீலனை செய்வதற்கு நீதியரசர் (ஓய்வுநிலை) கே.டி .சித்திரசிறி தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அண்மையில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

நீதியரசர் (ஓய்வுநிலை) சித்திரசிறி குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானங்களை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த 17 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு அறிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கான இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 1448 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு அதிகளவில் நிதி செலவழிக்கப்படுகிறது.  2024 ஆம் ஆண்டு  ஜனவரி முதல்  இந்த மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு இராணுவம் 328 மில்லியன் ரூபாய் பொலிஸ் 327 மில்லியன் ரூபா ஜனாதிபதி செயலகம் 55 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் 710 மில்லியன் ரூபா  செலவழிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் பாதுகாப்புக்கு  இராணுவம் 6 மில்லியன்  ரூபாஇ  பொலிஸ் 185 மில்லியன் ரூபா, ஜனாதிபதி செயலகம்  16 மில்லியன் ரூபா  என்ற அடிப்படையில் 207 மில்லியன் ரூபாவும் கோட்டபய ராஜபக்ஷவின்  பாதுகாப்புக்காக  இராணுவம் 258 மில்லியன் ரூபா, பொலிஸ் 39 மில்லியன் ரூபா, ஜனாதிபதி செயலகம்  10 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில்  307 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓய்வுப் பெற்று  மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது பாதுகாப்புக்கு இராணுவம் 60 மில்லியன் ரூபாவையும், பொலிஸ் 19 மில்லியன் ரூபாவையும், ஜனாதிபதி செயலகம்  3 மில்லியன் ரூபாவையும் செலவிட்டுள்ளது. ஆகவே மொத்தமாக 82 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின்  பாதுகாப்புக்கு இராணுவம் செலவு செய்யவில்லை. பொலிஸ் திணைக்களம் 99 மில்லியன் ரூபா, ஜனாதிபதி செயலகம் 12 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் 111 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பாரியாரான ஹேமா பிரேமதாசவின் பாதுகாப்புக்காக  பொலிஸ் 30 மில்லியன் ரூபாவையும், ஜனாதிபதி  செயலகம் 3 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் 33 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஆண்டு 11 மாதமும் 15 நாட்களுக்கு மாத்திரம் 1448 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது  என்று குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பினை மறுசீரமைத்தால் வருடாந்தம் 1200 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என்று குறிப்ரிட்டார்.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு நேற்று (திங்கட்கிழமை) முதல் குறைக்கப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு 60 பொலிஸாரும்  1 பொலிஸ் வாகனமும். ஜனாதிபதி செயலகத்தின் 3 வாகனங்களும்  வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல்  முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு  22 பொலிஸாரும் 1 பொலிஸ் வாகனமும், ஜனாதிபதி செயலகத்தின் 3 வாகனங்களும் வழங்கப்படும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 6 0 பொலிஸாரும், 1 பொலிஸ’ வாகனமும்,3 ஜனாதிபதி   செயலக வாகனங்களும்.  வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  பாதுகாப்புக்கு 60 பொலிஸாரும்.  1 பொலிஸ் வாகனமும், ஜனாதிபதி செயலகத்தின் 3 வாகனங்களும் வழங்கப்படும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயவின் பாதுகாப்புக்கு 60 பொலிஸாரும். 1 பொலிஸ் வாகனமும். 3 ஜனாதிபதி செயலக வாகனங்களும் வழங்கப்படும். அதேபோல் ஹேமா பிரேமதாசவின் பாதுகாப்புக்கு 10 பொலிஸாரும், 1 பொலிஸ் வாகனமும், ஜனாதிபதி செயலகத்தின் 3 வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்