நைஜீரியால் கூட்ட நெரிசலில் சிக்கி 67 பேர் உயிரிழப்பு!

by sakana1

நைஜீரியால் நத்தார் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக வழங்கப்பட்ட உணவுகளை பெறுவதற்காக  சென்ற  67 பேர்  கூட்ட நெரிசலில் சிக்குண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்நாட்டில்   கடந்த  வாரம் நத்தார் பண்டிகையை முன்னிட்டு  பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த உணப்பொருட்களை பெற  ஏராளமான மக்கள் அப் பகுதிகளுக்கு படையெடுத்ததால் அங்கு  கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும்  அதில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஓயோ மாநிலத்தில் கடந்த புதன் கிழமை  ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி   35 குழந்தைகள் வரை உயிரிழந்துள்ளனர் எனவும்,  தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி  22 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும்,  அந்நாட்டின்  தலைநகர் அபுஜாவில்  ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவங்கள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான  தீவிர விசாரணைகளை  முன்னெடுக்குமாறு  அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அந்நாட்டு ஜனாதிபதி  அனைத்து கொண்டாட்டங்களையும்  இரத்து செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு நாட்டில் நிலவும் அதிகப்படியான வறுமை, விலை அதிகரிப்பு  மற்றும் அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளே காரணம்  எதிர்க் கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்