அம்பேத்கர் குறித்த அமித் ஷா கருத்து – இந்த சர்ச்சையால் காங்கிரஸ் ஏதேனும் பலன் அடைந்ததா? ஓர் ஆய்வு

அமித் ஷா, ராகுல் காந்தி, அம்பேத்கர் விவகாரம், நாடாளுமன்றம்

பட மூலாதாரம், ANI

“அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… இத்தனை முறை நீங்கள் கடவுளின் பெயரை கூறி இருந்தால் ஏழு ஜென்மங்களுக்கும் உங்களுக்கு சொர்க்கம் கிடைத்திருக்கும்…”

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உரையில் இடம் பெற்றிருந்த இந்த சிறிய பகுதி சமூக வலைதளங்களில் வைரலானது.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர், போராட்டங்களுக்கு மத்தியில் முடிவுற்றது. நாடாளுமன்றத்தில் அமித் ஷா, அம்பேத்கர் குறித்து பேசியதே அந்த போராட்டங்களுக்கு காரணம்.

அதற்கு முன்பு, பிரியங்கா காந்தியின் முதல் நாடாளுமன்ற உரை, ஒரு நாடு ஒரு தேர்தல் மசோதா போன்ற விவகாரங்கள் விவாதத்திற்கு ஆளாகின.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

நாடாளுமன்றத்தில் காங்கிரஸை தாக்கி பேசிய அமித் ஷா, “அக்கட்சி அம்பேத்கரின் பெயரை மட்டுமே கூறுகிறது. ஆனால் செய்வதெல்லாம் அதற்கு எதிரானதாக உள்ளது,” என்றார்.

ஆனால், இந்த உரையில் ஒரு பகுதியை மட்டும் சமூக வலைதளத்தில் எதிர்கட்சி பதிவு செய்தது. இது அம்பேத்கருக்கு செய்யப்பட்ட அவமரியாதை என்று கூறியதோடு, அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கோரியது.

பிரதமர் நரேந்திர மோதி, அம்பேத்கர் விவகாரம் குறித்து உடனடியாக எக்ஸ் தளத்தில் பதிவு செய்ததும், அமித் ஷா செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியதும், பாஜக எதிர்கட்சிகளுக்கு எந்த ஒரு வாய்ப்பையும் கொடுக்க விரும்பவில்லை என்பதை காட்டுகிறதா?

பிரியங்காவின் முதல் நாடாளுமன்ற உரை எதைச் சுட்டிக் காட்டுகிறது?

பிபிசி ஹிந்தியின் வாராந்திர நிகழ்வான தி லென்ஸில், கலெக்டிவ் நியூஸ்ரூமின் ஊடகத்துறை இயக்குநர் முகேஷ் ஷர்மா இந்த விவகாரங்கள் தொடர்பாக விவாதங்களை நடத்தினார்.

தி ட்ரிப்யூனின் இணை ஆசிரியரான அதிதீ டண்டோனும், ஹிந்துஸ்தான் டைம்ஸின் தேசிய அரசியல் ஆசிரியர் சுனேத்திரா சௌத்ரியும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அமித் ஷாவின் உரை பாஜகவுக்கு பாதகமாக முடியுமா?

காங்கிரஸ் கட்சியினர், அமித் ஷா அம்பேத்கரை அவமதித்துவிட்டார் என்று கூறுகின்றனர்.

அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி அம்பேத்கரை நேரு காலம் தொட்டே அவமதித்து வருகிறது என்று பாஜக கூறியது. பாஜக அம்பேத்கரை மதிக்கிறது என்றும், அவரின் கொள்கைகளுக்கு செயல்வடிவம் தந்துள்ளது என்றும் கூறியது.

அமித் ஷாவின் பேச்சு பாஜகவுக்கு பாதகமாக உள்ளதா அல்லது முன்பு இருந்ததைப் போலவே தற்போதும் பிரச்னையின்றி உள்ளதா?

சுனேத்திரா இதற்கு பதில் அளித்த போது, ”பாஜக எப்போதும் களமாட தயார் நிலையில் இருப்பது அதற்கு சாதகமான ஒன்று. எதிர்க்கட்சியினர் பிரச்னையை எழுப்பியதும் பாஜக தன்னுடைய செயல்களில் ஈடுபட துவங்கியது.” என்றார்

“பிரதமர் மோதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். மோதியின் பதிவில் அமித் ஷா உரையின் மற்றொரு பகுதி இடம் பெற்றுள்ளது. ஏதையாவது வைரல் ஆக வேண்டும் என்றால் இதை வைரல் ஆக்குங்கள் என்ற செய்தி அதில் தெளிவாகிறது என்றார்,” சுனேத்திரா.

“இதற்கு முன்பு, எந்த விவகாரத்திலும் அமித் ஷா எதையும் தெளிவுபடுத்தியதில்லை. ஆனால் இந்த முறை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை ஏற்படுத்தி கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். இது பாஜகவின் வழக்கமான உத்திக்கு மாறுபட்ட சூழல் என்பதால் அதனை கையாள, கட்சி அதன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டியிருந்தது என்பதையே இது காட்டுகிறது,”என்றார்

பாஜக உடனடியாக செயல்படுவது தான் அதன் பலம். காங்கிரஸாக இருந்திருந்தால் சில நாட்கள் காத்திருக்கும் என்று சுனேத்திரா நம்புகிறார்.

அமித் ஷா, ராகுல் காந்தி, அம்பேத்கர் விவகாரம், நாடாளுமன்றம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, நாடாளுமன்றத்தில் காங்கிரஸை தாக்கி பேசிய அமித் ஷா, அக்கட்சி அம்பேத்கரின் பெயரை மட்டுமே கூறுகிறது. ஆனால் செய்வதெல்லாம் அதற்கு எதிரானதாக உள்ளது என்றார்

”குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே அரசியல் சார்ந்த பிரச்னைகளின் திசை மாறிக் கொண்டே இருந்தது. முதல் நாள் அதானி விவகாரம் பேசுபொருளாக இருந்தது. முதல் மூன்று நாட்களுக்கு அதைப் பற்றியே எதிர்க்கட்சியினர் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியினரும் அரசியல் சாசனத்தின் 75வது ஆண்டுக்கான சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அது ஏற்றுக் கொள்ளப்பட்டது” என்கிறார் அதிதீ.

அதானியில் ஆரம்பித்து அரசியல் சாசனத்திற்கு வந்த பிறகு விவகாரம் அம்பேத்கர் பற்றியதாக மாறியது. எதிர்க்கட்சியினர் இது தொடர்பாக குரல் கொடுக்கவும் விவகாரத்தின் தன்மை திசை மாறியது என்றார் அதிதீ.

“அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் ஆளும் கட்சியினர் தங்களின் உத்தியை மாற்றினார்கள். அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வாசலில் கூடினார்கள். அப்போதும் இந்த விவகாரத்தின் தன்மை மற துவங்கியது.

பெரிய சவால் என்னவென்றால் ஒரு பிரச்னைக்கு எதிர்க்கட்சியினர் எவ்வளவு நேரம் குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான். ஒரு பிரச்னையில் இருந்து மற்றொன்றுக்கு விரைவாக அவர்கள் மாறினால், அதனால் பாஜகவுக்கு பின்விளைவு ஏற்பட்டதா இல்லையா என்பதை கூற இயலாது,” என்றார் அதிதீ.

காங்கிரஸ் எங்கே சறுக்கிறது?

மக்களவை தேர்தலுக்குப் பிறகு, பலத்துடன் காங்கிரஸ் நாடாளுமன்றத்திற்கு வந்த போது, முன்பு இருந்த அதே வீரியத்துடன் மீண்டும் வந்துவிட்டது என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல்கள் காங்கிரஸின் அரசியலை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சி தவறவிட்டது எங்கே?

இந்த கேள்விக்கு பதில் அளித்த அதிதீ, காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சியினரும் தங்களுக்கு எதுதான் பிரச்னை என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

“400 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று அக்கட்சி கோஷங்களை எழுப்பிய போது, பாஜக அரசியலமைப்பை மாற்ற முயலுகிறது என்று எதிர்க்கட்சியினர் பதிலடி கொடுத்தனர். அது ஆளும் கட்சிக்குள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அது எதிர்க்கட்சியினருக்கு மிகப்பெரிய வெற்றி. ஆனால் அதற்கு பிறகு எதிர்க்கட்சியினர் என்ன செய்தனர்? அவர்களின் கையில் இருந்து அந்த விவகாரத்தை அவர்கள் நழுவவிட்டனர். எதிர்க்கட்சியினருக்கு பிரச்னைகளுக்கு பஞ்சமில்லை. ஆனால், எந்த பிரச்னைகளையும் நிலையாக கையாளவில்லை,” என்றார் அதீதி.

இது தொடர்பாக பேசிய சுனேத்திரா, “பாஜகவும், காங்கிரஸும் செய்தியாளர்கள் சந்திப்பை கூட்டினார்கள். ராகுல் காந்தியின் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் நீல நிற டி-ஷர்ட்டை அணிந்திருந்தார். ஆனால் அம்பேத்கர் பற்றி அவர் எதையும் சிறப்பாக அங்கு பேசவில்லை” என்றார்.

”அதானி விவகாரத்தை காங்கிரஸ் தொடர்ச்சியாக எழுப்பினாலும் அதில் காங்கிரஸால் தொடர்ச்சியாக செயல்பட இயலவில்லை. ஏன் என்றால் இது அனைத்து மக்களுக்குமான பிரச்னையாக இல்லை. ஒரு சில பிரிவினருக்கான பிரச்னையே இது” என்று கூறுகிறார் அதிதீ.

”பாரிய பொதுமக்கள் ஆதரவைப் பெறக்கூடிய எந்தப் பிரச்னையைப் பற்றி பேசுவது என்பதை காங்கிரஸ் முடிவு செய்ய வேண்டும்” என்றார் அவர்.

அமித் ஷா, ராகுல் காந்தி, அம்பேத்கர் விவகாரம், நாடாளுமன்றம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ‘பாரிய பொதுமக்கள் ஆதரவைப் பெறக்கூடிய எந்தப் பிரச்னையைப் பற்றி பேசுவது என்பதை காங்கிரஸ் தீர்மானிக்க வேண்டும்’

பிரியங்கா காந்தியின் வருகையால் நாடாளுமன்றத்தில் மாறியது என்ன?

வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் பிரியங்கா காந்தி. முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான அவர் அரசியலமைப்பு, இட ஒதுக்கீடு. மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தன்னுடைய முதல் உரையில் பேசினார்.

டிசம்பர் 13-ஆம் தேதி அன்று அவர் ஆற்றிய உரையைப் பார்த்து ராகுல் திருப்தி அடைந்ததைப் போன்று தோன்றுகிறது. நாடாளுமன்றத்தில் தான் பேசிய முதல் உரையைக் காட்டிலும் பிரியங்காவின் உரை சிறப்பாக இருந்தது என்று கூறினார்.

பிரியங்காவின் வருகை, எதிர்க்கட்சிக்கு பலம் அளித்துள்ளதாக பலரும் நம்புகின்றனர். ஆனால் எவ்வளவு காலத்திற்கு இது நீடிக்கும் என்ற கேள்வி எழுகிறது.

“அவருடைய பாட்டி இந்திராவின் செயல்பாடுகளைப் போன்று பிரியங்காவின் செயல்பாடுகள் உள்ளன. அவர் புடவை அணியும் விதமாகட்டும், அவரின் ஸ்டைலாகட்டும் அனைத்தும் இந்திரா காந்தியை பார்ப்பதைப் போன்று உள்ளது,” என்று கூறினார் அதீதி.

அவருடைய உரை மிகவும் சிறியது. ஆனால் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பாஜகவுக்கான செய்தியை அவர் நேரடியாக கூறியுள்ளார் என்றார் அதிதீ.

“பிரியங்கா காந்தி பேசிய போது நாடாளுமன்றத்தில் தான் இருந்தேன். நான் வெளியே நின்று கொண்டிருந்த போது, பாஜக அமைச்சர் ஒருவர் என்னிடம் வந்து பிரியங்காவின் பேச்சு எப்படி இருந்தது என்று கேட்டார். பிரியங்கா ஒரு உண்மையான அரசியல்வாதி என்று பாஜகவினருக்கு தெரியும்,” என்றார் சுனேத்திரா.

”அமித் ஷாவை நேரில் சந்தித்து, ஒரு நேர்மறையான அடியை எடுத்து வைக்கிறார் பிரியங்கா காந்தி . அமித் ஷா பிரியங்காவை பெரிய அரசியல் எதிரியாக கருதினாலும், தேவையான நேரத்தை வழங்கினார். இது நல்ல சமிக்ஞையாகும்.”

பிரியங்காவின் இரண்டு பைகள் குறித்து பேசிய போது, ”ஒரு அரசியல் ஆசிரியராக, பிரியங்காவின் இரண்டு பைகள் மூலமாக அவர் தெரிவிக்கும் செய்திகள் என்ன என்பது எனக்குப் புரியவில்லை” என்கிறார் சுனேத்திரா.

நாடாளுமன்றத்தில் பிரியங்காவின் வருகை புதிய உத்வேகத்தை எதிர்க்கட்சியினருக்கு வழங்கும் என்று சுனேத்திரா நம்புகிறார்.

அமித் ஷா, ராகுல் காந்தி, அம்பேத்கர் விவகாரம், நாடாளுமன்றம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ‘நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியின் வருகை புதிய உத்வேகத்தை எதிர்க்கட்சியினருக்கு வழங்கும்’

பிரியங்கா காந்தி ராகுலுக்கு சவாலாக மாறுவாரா?

“பிரியங்கா காந்தியை அரசியலுக்குள் ஈடுபடுத்துவதை சோனியா காந்தி தாமதம் செய்ய ஒரு காரணம் இருந்தது. அது அவ்வளவு எளிமையாக நடைபெறவில்லை. பிரியங்கா ஆரம்ப காலம் தொட்டே அரசியலுக்கு தயாராகதான் இருந்தார். அவருடைய 20 வயதில் இருந்தே அவருடைய அம்மாவுக்காக பிரசார பணிகளில் ஈடுபட்டார். அவர் அரசியலுக்கு தயாராக இல்லை என்று கூறுவது தவறாகும்,” என்று கூறினார் அதிதீ.

“ஆனால் அங்கே வெளியே சொல்லிக் கொள்ளாத ஒரு புரிதல் இருந்தது. அதாவது ராகுல் காந்திதான் கட்சியை வழி நடத்தி செல்ல வேண்டும் என்பது. காங்கிரஸ் தலைமைக்குள் இது மிகவும் தெளிவாக இருந்தது”.

பிரியங்காவுக்கும் ராகுலுக்கும் இடையே பிரச்னை இருப்பதுபோல காட்ட பாஜக முயற்சிக்கலாம் என்று அதிதீ கூறுகிறார்.

ஆனால் காங்கிரஸ் குறித்து அதிகம் அறியாதவர்களுக்கு கூட, சோனியா, ராகுல், பிரியங்காவின் ஒற்றுமை பற்றி தெரியும்.

”அதே நேரத்தில், அதிகாரம் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். ஆனால் தற்போதைக்கு பிரியங்கா காந்தி ராகுலுக்கு எதிராக செயல்படமாட்டார்” என்கிறார் அதிதீ.

அமித் ஷா, ராகுல் காந்தி, அம்பேத்கர் விவகாரம், நாடாளுமன்றம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தற்போதைக்கு பிரியங்கா காந்தி ராகுலுக்கு எதிராக செயல்படமாட்டார் என்று நம்புகிறார் அதிதீ

டெல்லி தேர்தல்

நாடாளுமன்ற தேர்தலில் குளிர்கால கூட்டத்தொடர் ஒரு புறம் நடந்த வண்ணம் இருக்க, மற்றொரு புறம் ஆம் ஆத்மி கட்சி பெண்களுக்கு சலுகைகள், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை போன்ற அறிவிப்புகளை வெளியிட்டது.

மக்கள் நலத்திட்டமாக இது வெளியில் இருந்து பார்த்தால் தோன்றலாம். ஆனால் இவை அனைத்தும் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்ற சூழலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

“இது பதற்றத்தின் வெளிப்பாடு என்பது தெளிவாக தெரிகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக பிரசாரங்களை மேற்கொண்டுவரும் நபர்களிடம் நான் பேசினேன். அவர்கள், மக்கள் மத்தியில் கோபம் இருப்பதை புரிந்து கொண்டுள்ளோம் என்று கூறினார்கள்,” என்கிறார் சுனேத்திரா.

“குடிநீர் நாற்றம் அடிக்கிறது. சாலைகள் சரியாக போடவில்லை. மக்கள் கோபத்தில் உள்ளனர்”.

அமித் ஷா, ராகுல் காந்தி, அம்பேத்கர் விவகாரம், நாடாளுமன்றம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ‘இந்த கோபம் உள்ளூர் விவகாரங்கள் தொடர்பானது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் தோல்வியுடன் தொடர்புடையது.’

“ஆம் ஆத்மி, ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் அதிக நம்பிக்கை வைத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிய மாற்றங்களை அவர்கள் காணவில்லை. அதனால் அவர்களின் வெறுப்பு அதிகரித்துள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் மக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மேல்தான் கோபத்தில் உள்ளனர், கெஜ்ரிவால் மீது இல்லை என்று தெளிவாகியுள்ளதாக அக்கட்சி கூறுகிறது என்கிறார் சுனேத்திரா.

இந்த கோபம் உள்ளூர் விவகாரங்கள் தொடர்பானது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் தோல்வியுடன் தொடர்புடையது. அதனால் தான் தற்போது கட்சிக்குள் பதற்றம் நிலவுகிறது என்று கூறினார் அவர்.

இந்த விவகாரம் குறித்து அதிதீ கூறும் போதும், “அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார் என்பதில் மறுப்பு ஏதும் இல்லை. அவரும் அவருடைய முக்கிய தலைவர்களும் சிறைக்கு சென்றுவந்தனர். ஆனாலும் கட்சியின் கட்டுப்பாட்டை அவர்கள் இழக்கவில்லை,” என்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.